Skip to main content

கரும்பலகைக்கதைகள்-புதுச்சேரி அன்பழகன்



                                 முன்னுரை
                           த.வி.வெங்கடேஸ்வரன்




                         அறிவுத் தேடல் பயண நூல்

     "உலகிலேயே பெரிய எண் எது?” நமக்கு சளி இரும்மல் போன்ற தொற்றுநோய் ஏற்படுவது போல "உலோகங்களுக்கு தோற்றுநோய் பிடிக்குமா?” என நாம் யோசிக்காத கோணங்களில் மாணவ மாணவியர் கேள்விகளை கேட்டுவிட "சும்மா இரு நீ என்ன ஐன்ஸ்டீன் என்ற நினைப்பா" என்று அவர்கள் வாயை மூடாமல், அந்த சமயதில் தனக்கு இந்த கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்றாலும் தேடி கண்டுபிடிக்கும் தனது அறிவு தேடலை தான் இந்த நூலில் பதிந்துள்ளார் ஆசிரியர் ச.அன்பழகன். வெளிநாடுகளுக்கும் சுற்றுலா தளங்களுக்கும் சென்று பயண நூல் எழுதுவார்கள். இந்த நூல் அறிவுத் தேடல் பயண நூல்.

      தனக்கு விடைதெரியாத கேள்வியை ஒரு வகுப்பில் மாணவி ஒருவர் கேட்டுவிட "யோசித்தால் ஒரு எளிமையான விடை கண்டிப்பாக கிடைக்கும் . மாணவர்களே நீங்களும் சிந்தித்து வாருங்கள், நானும் நல்லதொரு விடையோடு வருகிறேன், என்றபடி அன்றைய வகுப்பை முடித்து வெளியே வந்தேன்” என்கிறார். இதுதானே அறிவியல் ஆசிரியர்கள் கை க்கொள்ளவேண்டிய போக்கு. இறுதியில் மாணவ மாணவியரும் விடை தேடி வர, அந்த விடையை மேலும் மெருகூட்டி அவர்களின் சந்தேகம் போக்கும் படி செழுமையூட்டி செய்து காண்பிக்கும் ச. அன்பழகன், நமக்கெல்லாம் முன்மாதிரி. இந்த நூலை படிக்கும்போது நாமும் அவருடன் அறிவுத்தேடல் உலா சென்று வருகிற உணர்வு ஏற்படுகிறது.

     “பதிமூன்று" என்ற எண்ணை துரதிர்ஷ்ட எண்ணாக நம்மில் பலரும் கருதுகின்றார். "எண்கள் என்பதே ஒரு தொடர் வரிசை தானே ! எந்த ஒரு எண்ணையும் விலக்கி வைத்துவிட்டு நாம் கணக்கு போட முடியாது .அந்த வகையில் அணைத்து எண்களுமே மிக முக்கியம் .இதில் உயர்வு தாழ்வு கிடையாது" எனக்கூறும் அன்பழகனின் வார்த்தைகள் நமக்கு அறிவியல் பார்வையை தெளிவாக புகட்டுகிறது.

    "குழல்விளக்கு குமரேசன்", அதாவது 'டியூப்லைட்' குமரேசன் கதை அற்புதம் என்று தான் கூறவேண்டும். பொதுவே ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள கூடுதல் நேரம் எடுக்கும் மாணவ மாணவியரை 'டியூப்லைட்' என கேலி செய்வது வழக்கம் தான். ஆனால் அவர்களில் பலர் , மனப்பாடம் செய்வதைவிட ஒரு செய்தியை ஆழமாக புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள் என்பதை இந்த கதை தெளிவாக தெரிவிக்கிறது. மேலும் நமது கல்வி என்பது பள்ளி அறைகளில் மட்டுமல்ல "குழல்விளக்கு சரிசெய்யும் கடையில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞரும்" கல்வி போதிக்க முடியும் என்பதை அற்புதமாக விளக்குகிறது இந்த கட்டுரை. பெடலை முன்னே சுற்றினால் முன்னே முந்தும் சைக்கில் பெடலை பின்னே சுற்றினால் ஏன் பின்புறம் செல்வதில்லை? ரொட்டி எப்படி பேக்கரியில் புஸ் என பெருத்து விரிகிறது?  அதன் உயிரியல் விளக்கம் என்ன? இப்படி சைக்கில் ரிப்பர் கடை, பேக்கரி போன்ற உள்ளூர் கடைகளில் நாம் கற்க வேண்டிய அறிவியல் தொழில்நுட்ப செய்திகள் ஏராளம்.

   ‘மாடு வளர்ப்பது’ என்றால் என்னவென்று யாராவது சொல்லுங்கள் என்றார். மாட்டுக்கு தவுடு, புண்ணாக்கு போட்டா தானா வளர்ந்திடும் சார்! என்று எளிமையாக கருதுவதை விமர்சனம் செய்து மாடு வளர்பதிலும் இருக்கும் அறிவியல் தொழில்நுட்பத்தை பேசும் அன்பழகன் போன்ற பலர் இன்று தேவை. தனது பள்ளி நாட்களில் வாய்த்த கோவிந்தன் ஆசிரியர் போலவே இவரும் மாணவ மாணவியர்களுக்கு உத்வேகம் தருவபவராக இருப்பார் என்பதில் ஐயமில்லை.

   பூச்சியம் குறித்த கட்டுரையில் மாணவ மாணவியர்கள் கணித வரலாற்று பயணத்தில் சென்று பூச்சியம் குறித்து பலவேறு வியப்பான தகவல்களை தேடிக் கொண்டு வருகிறார்கள். இந்த அனுபவத்தை குறித்து “அறிவுத்தேடல் தொடங்கிவிட்டால் விடுபட்ட நமது கணிதப் பாரம்பரியத்தின் சங்கிலி இணைக்கப்பட்டு புதிய பாரம்பரியம் புதிய வேகத்தோடு தொடங்கி சாதனை படைக்கும் என்பதில் ஐயமில்லை" என்று கூறும் அன்பழகன் பாரம்பரியம் என்பது போற்றி புகழ்ந்து பழங்கதைகள் பேசிக் கொண்டிராமல் அறிவை பெருக்கி முன்னே செல்வது என்கிறார்.
"நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்!” என்று கதறியழுத நிலவழகன் தெரியுமா? அவன் மட்டுமா பள்ளிகூடத்தை தொலைத்துவிட்டான்? நீங்களும் நானும் கூடத்தான். தனது பள்ளி அனுபவங்களை அடிப்படையாக வைத்து மி சிறந்த முறையில் இந்த நூலை எழுதியுள்ளார் ச. அன்பழகன். வாசிக்க துவங்கினால் முடியும்வரை வாசிக்காமல் வைக்க முடியாது. ஈர்ர்க்கும் நடை.

    நடை மட்டும் இந்த நூலின் பலம் அல்ல. இதில் உள்ள கருத்துக்களும் ஆழமானவை. அறிவூட்டுபவை. அணைத்து ஆசிரியர்களும் மாணவ இயக்கங்களில் பணிபுரிபவர்களும் பெற்றோர்களும் சமூக மாற்றம் விழைவோரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். இந்த நூலுக்கு அணிந்துரை தர எனக்கு வாய்ப்பு தந்தது எனக்கு பெருமை என்று தான் நான் கூறுவேன். . அன்பழகன் அவர்களுக்கு என் வணக்கங்களும் நன்றிகளும்.

அன்புடன்
த வி வெங்கடேஸ்வரன்
முதன்மை அறிவியலாளர்
விக்யான் பிரச்சார்
அறிவியல் தொழில்நுட்ப துறை
புது டெல்லி




Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது....

மாணவர்கள் கொண்டாடிய சுதந்திர தினவிழா

சு தந்திரதின விழாவில் கொடியேற்றி துவக்கி வைப்பதற்காக, மாணவர் நல சங்கம் சார்பில் என்னை அழைத்திருந்தார்கள். முப்பதாண்டுகாலமாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவன் என்ற தகுதி ஒரு காரணமாக இருக்கலாம். மிக முக்கியமான இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக என்னை தயார் செய்துகொண்டிருந்தேன். அப்போது கதவு தட்டப்படும் ஓசைகேட்டு திறந்தேன். கையில் தேசியக்கொடியோடு மாணவர்கள் சீருடையில் வந்திருந்தனர். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. வாங்க! வாங்க! என்று பரவசத்தோடு உள்ளே அழைத்தேன். அனைவரும் ஒரே குரலில் “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! கொண்டாடுவோம்! என்றபடியே ஒரு வண்ண காகிதத்தை கையில் கொடுத்துவிட்டு அடுத்த வீட்டிற்கு சென்றுவிட்டனர். சுதந்திரமே மாணவர் உருவில் வீட்டு வந்தது போல இருந்தது. அவர்கள் கொடுத்துச்சென்ற காகிதத்தின் இரு பக்கத்திலும் பதினைந்து என்று எண்ணால் எழுதப்பட்டிருந்தது. மெல்ல பிரித்து பார்க்க அது எட்டாக மடிக்கப்பட்டிருந்தது. இது சுதந்திரதினத்தை குறிக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. காகிதத்தின் உள்ளே “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! வறுமையற்ற வளமான ஓர் இந்தியாவை உருவாக்குவோம்! ” எ...