Skip to main content

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்


    ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்  பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்துஉண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து  சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு  ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல  மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.

     ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அந்த நேரம் பார்த்து தலைமை ஆசிரியர் அவரை அழைப்பதாகச் சொல்ல, மாணவ மாணவியரிடம் ஆளுக்கு ஒரு பங்கு எடுத்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு தலைமை ஆசிரியரைப் பார்க்கச் சென்றுவிட்டார் ஆசிரியர்.

தலைமை ஆசிரியர் இன்முகத்தோடு ஆசிரியரைப் பார்த்தார். தாங்கள் ஊட்டசத்து குறித்து பாடம் நடத்தபோவதாக அறிந்தேன். நீங்கள் எதையும் வித்தியாசமாக அனுகக்கூடியவர். எனவே  அந்த அனுபவத்தை சிறு குறிப்பாக எனக்கு எழுதித்தரும்படி கேட்டுக்கொண்டார். சரி சார்! என்று மகிழ்ந்தபடியே அவரிடம் விடைபெற்று  வகுப்பறைக்கு வந்தார் ஆசிரியர்.

மாணவ மாணவியர்கள் மிகவும் மகிழ்வோடு ஆப்பிள் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருந்தார் ஆசிரியர். உள்ளூக்குள் மிகவும் மகிழ்ந்து போனார் . அப்பொழுது ஒரு மாணவன் எழுந்து சார்! நீங்க போனதும் சில பேர் சண்டை போட்டார்கள் என்று சொல்லிவிட்டு அமர்ந்தான். ஏன் என்னாட்சி! என்று ஆவலோடு கேட்டார் ஆசிரியர். சார்! “சற்று பெரிய ஆப்பிள் துண்டுகள் எடுக்க முந்தி கொண்டு ஓடி விழுந்து விட்டனர்!” என்றான்.

ஆசிரியர் சற்று யோசித்தபடியே பேசலானார். எல்லாருக்கும் ஆப்பிள் கிடைத்ததா! அதுதான் முக்கியம். சிறியது பெரியது என்று பார்க்கக் கூடாது என்ன சரியா! என்ற படியே அனைவரையும் பார்த்தார். சரி சார்! என்று  அனைவரும் ஒரே நேரத்தில் சப்தமிட்டனர். ஆசிரியர் மகிழ்ந்தபடியே அடுத்த வகுப்பிற்கு சென்றுவிட்டார்.

அடுத்த மாதமும் ஆப்பிலோடு வகுப்பிற்கு சென்றார் ஆசிரியர்.இந்த முறை ஆப்பிள்களை ஒரே அளவாக பார்த்து வாங்கி இருந்தார்.மிகச் சரியாக தலா பாதிப்பழம் வரும்படி சமமாக நறுக்கி எடுத்துக்கொண்டார்.  அனைவருக்கு தலா ஒரு பங்கை ஆசிரியரே சென்று வழங்கினார். அப்பொழுது ஒரு மாணவி எழுந்து சார்! எனக்கு ஆப்பிள் பிடிக்காது சார்! என்று மிகவும் தயங்கியபடியே கூறினார். சரி! சரி! என்றபடியே  மற்ற மாணவ மாணவியர்களிடம் கொடுத்துவிட்டு  சரிம்மா! நீ உட்கார் என்றபடியே சிந்திக்கலானார்.

மாணவர்கள் பழங்களை சாப்பிட்டு முடித்ததும்,  “யார் யாருக்கு என்னென்ன பழங்கள் பிடிக்கும்!” என கேட்டார் ஆசிரியர். சார்! “எனக்கு கொய்யப்பழம் பிடிக்கும்” என்றாள் ஒரு மாணவி. சார்! எனக்கு சாத்துக்குடி பிடிக்குமென கூறினான் ஒரு மாணவன். உடனே சிறுது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஆளாளுக்கு ஒரு பழத்தை சொல்லிக்கொண்டிருந்தார்கள். இதை ஆசிரியர்  மிகவும் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார்.

“சார்! பழம் சாப்பிடவில்லை என்றால் என்ன ஆகும்? எங்க வீட்ல எப்பவாவதுதான் சாப்பிடுவோம்” என்றாள் ஒரு மாணவி.

சரியான கேள்வியைக் கேட்டுவிட்டாய்! உனக்கு நன்றி என்றபடியே ஆசிரியர் பேச ஆரம்பித்தார். “நமக்கு நோய்வராமல் இருக்க அதை எதிர்த்து போராட சக்தி வேண்டுமல்லவா! அந்த சக்தியை பழங்கள் மற்றும் காய்கறிகள் தருகின்றன. எனவே நாம் அவசியம் பழங்கள் மற்றும் காய்கறிகளை  சாப்பிட வேண்டும். என்ன சரியா! என்று ஆசிரியர் கேட்க மாணவர்கள் அனைவரும் சரி சார்! என்றனர்.

அடுத்த மாதம் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப அனைத்து பழங்களையும் கொஞ்சம் வாங்கிக் கொண்டார். அன்று பாடத்தை நடத்திய பிறகு ஒரு தட்டில் பழங்களை எடுத்து வைத்து அனைவருக்கும் கொடுத்தார். “உங்களுக்கு எந்த பழம் பிடிக்குமோ அதை எடுத்து மகிழ்வாக சாப்பிடுங்கள்” என்றார் ஆசிரியர். மாணவர்கள் மிகவும் கொண்டாட்டமாக சாப்பிட்டனர். இப்பொழுதுதான் மாணவர்கள் முகத்தில் மகிழ்வை பார்க்க முடிந்தது.

“பழம் என்பது நமது உடலுக்கு மிகவும் முக்கியம். ஆனால் விலை அதிகமாக இருக்கும் பழங்களைத்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. நமது ஊரில் என்ன பழம் கிடைக்கிறதோ அதை நாம் தேடி உண்ண வேண்டும்.  மற்ற பழங்களை சாப்பிட நினைத்தால் அவை விலை குறைவாக இருக்கும் போது நாம் வாங்கிச் சாப்பிடலாம்”  என்றார் ஆசிரியர்.

அது மட்டுமல்ல “ ஒவ்வொரு நாளும் நாம் ஏதாவது ஒரு பழமாவது சாப்பிட வேண்டும். காய்கறிகள் உங்கள் உணவு தட்டில் பாதியாவது இருக்க வேண்டும். அவசியம் தினமும் ஒரு முட்டையாவது உண்ண வேண்டும். அதோடு மீன் ,சிக்கன் போன்றவற்றை வாரத்தில் இருமுறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று ஆசிரியர் சொல்லிக்கொண்டே போனார்.

சார்! எங்கவீட்டில் கொஞ்சம் சோறு! கொஞ்சம் பொரியல்தான் தருவாங்க!  இப்படி சாப்பிட முடியாது சார்! என்றாள் ஒரு மாணவி.

 நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நாம் இதை அப்படியே விடமுடியாது அல்லவா! இதற்கு நாம்தான் திட்டமிட வேண்டும். அதோடு ஒவ்வொரு நாளும் அதை ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும். நாம் இந்த  திட்டத்தை நமது வீடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். நாம் முதலில் சிறிய அளவிலாவது கடைபிடிக்க வேண்டும்! என்றார் ஆசிரியர்.

சார்! அதற்குதான் எங்களுக்கு ஆப்பிள் வாங்கி தந்தீங்கிளா சார்! என்றான் ஒரு மாணவன். சரிதான்! உங்க எல்லோருக்கும் அப்பதானே ஆர்வம் வரும்! இன்னொரு இரகசியம் இருக்கு சொல்லவா! என்றார் ஆசிரியர்! “நமது உடலுக்கு  மிகச்சிறிய நுண்சத்துக்கள் தேவை. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால், நமது உடலால் இந்த நுண்சத்துக்களை  தானாக உற்பத்தி செய்யமுடியாது. ஆனால் சிறிய அளவில் சில உணவுகளை நாம் சேர்த்துக்கொள்ளும் போது நமது ஆரோக்கிய நிலை படிப்படியாக மேம்பட்டு முழு உடலும் நமலமாகிறது. இந்த நுண்சத்துக்கள் இல்லையென்றால் நாம் நோய்வாய்ப்படுகிறோம். இந்த நுண்சத்துக்களைத்தான் நாம் வைட்டமின்கள் என்று அழைக்கிறோம். இவை பெரும்பாலும் பழம், காய்கறிகள், வெண்ணெய், மீன், இறைச்சி, முட்டை, ஈரல் போன்றவைகளில் காணப்படுகின்றன. மாணவ மாணவியர்களான நீங்கள் உயரமாகவும் வலுவாகவும் வளர்வதற்கு இந்த வைட்டமின்கள் உயிர்நாடியாகும்” என்றார் ஆசிரியர்.

மாணவர்கள் ஆவலோடும் கவனமாகவும் கேட்டனர். ஆசிரியருக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது.

அன்றைய வகுப்பை முடித்து விட்டு ஆசிரியர் வீட்டிற்கு வந்து விட்டாலும் " அதற்குதான் எங்களுக்கு ஆப்பிள் வாங்கி தந்தீங்கிளா?!” என்று அந்த மாணவன் எழுப்பிய கேள்வியே மீண்டும் மீண்டும் சிந்தனையில் வந்து போனது. மாணவர்கள் எவ்வாறு சிறப்பாக சிந்திக்கிறார்கள் என்று வியந்து போனார் ஆசிரியர்.  பலமுறை ஊட்டசத்து குறித்து பாடம் நடத்தியிருந்தாலும்,   ஒரு ஆப்பிள் பழத்தோடு அவர்  வகுப்பிற்கு சென்றபோது மாணவர்கள் ஆர்வமாக பாடம் கற்பதை அவரால் உணரமுடிந்தது.

அதுமட்டுமல்ல! மாணவர்களுக்கு  ஆப்பிளைவிட கொய்யாவும் சாத்துக்குடியுமே அதிகம் பிடித்திருக்கிறது என்பதையும் தெரிந்துகொண்டார். மேலும் சமமாக அல்ல சமதிப்பில் மாணவர்கள் விரும்புவதை அவர்களுக்கு பிடித்தமாதிரி நாம் கொடுக்கவேண்டும் என்பதையும் சேர்த்து தெரிந்துகொணாடர். இதையே ஒரு குறிப்பாக எழுதி தலைமை ஆசிரியருக்கு அனுப்பி வைத்தார் ஆசிரியர்.

இப்பொழுதெல்லாம் அந்த பழக்கடையை ஆசிரியர் கடக்கும்போதெல்லாம் ஆப்பிள் மட்டுமல்ல  கொய்யவும் சாத்துக்கொடியும் அவரை வா! வா! என்று அழைத்துக்கொண்டிருக்கிறது.

-புதுச்சேரி அன்பழகன்

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 

Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை

வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு

  வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு இ ராபர்ட்   ஐந்தாம் வகுப்பில் புதியதாக வந்து சேர்ந்திருந்தான் . பார்ப்பதற்கு வெள்ளைக்காரரைப் போல சிவப்பாக இருந்தான் . யார் வகுப்பிற்கு வந்தாலும் அவனையே விசாரித்தார்கள் . வகுப்பறையைத் தாண்டி பள்ளி முழுவதுமே அவனையே   வியப்பாக   பார்த்தார்கள் .   இ ராபர்ட் வந்ததிலிருந்து இ ராமு தன் நிறத்தையே அடிக்கடிப் பார்த்துக்கொண்டான் . கருப்பாகவும் இல்லை . வெள்ளையாகவும் இல்லை . இரண்டு நிறமும் கலந்த மாதிரி இருந்தது . நாம் ஏன் சிகப்பாக பிறக்க வில்லை என்று தனக்குள் கேட்டுக்கொண்டான் . சிவப்பாக இருந்தால் ஏன் இப்படி மதிப்பாக பார்க்கிறார்கள்   என்பதை   ராமுவால் புரிந்துகொள்ள   முடியவில்லை . இ ராமு தன் நண்பர்களிடம் அடிக்கடி இது பற்றி கேட்டான் . அதெல்லாம் ஒன்னுமில்லடா , நம்ம கண்ணுக்குத் தான் அப்படி அழகா தெரியுது ! நீ நல்லா படித்து முதல் ரேங்க் எடுத்தா அப்புறம் உன்னைப்பற்றியே எல்லோரும் பேசுவார்கள் . ராமுவுக்கு இது சரி என்று பட்டாலும் . மனம் மட்டும் கேட்பதாக இல்லை . என்ன செய்வதென்று யோசிக்கத்தொ