நாளை எவ்வாறு பாடத்தை எளிமையாக நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதுவும் உலகம் தோன்றியது எப்படி என்பதை நான் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். உலகம் தோன்றியது எப்படி என்று நான் சொல்லத்தொடங்கும் முன் , அது முன்பே படைக்கப்பட்டுவிட்டது என்ற பதில்தானே உடனே வரும்!?. அப்பொழுதுதான் என் மகள் ஓடி வந்து எனது சிந்தனையைக் கலைத்தாள்.
அப்பா! அப்பா! எங்கள் ஆசிரியர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க , பாடட்டுமா? என ஆவலோடு கேட்டாள். சரி! பாடு கேட்கலாம் என்றேன். உடனே அவள், நான்பாடும்போது நீங்களும் பாடனும்பா! என்றாள். நான் சரி என்று சொல்வதற்குள் அம்மாவும் அக்காவும் கூட பாடனுமென்றாள். அவர்கள் தயாராவதற்குள் பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டாள். அனைவரும் என்னோடு சேர்ந்து பாடவேண்டுமென சொல்லியபடியே பாடத்தொடங்கிவிட்டாள்.
“சின்னச் சின்ன சிட்டுக்குருவியே!
சின்னச் சின்ன சிட்டுக்குருவியே!
அழகாக படைத்தது யாரு!
அங்கும் இங்கும் பறந்துகிட்டு
ஆனந்தமா பாடிகிட்டு
அழகாக படைத்தது யாரு!
உன்னை படைத்த ஆண்டவர்
என்னை படைக்க மாட்டாறா?
உலகத்தைப் படைத்தது யாரு?
பிள்ளைகளோடு சேர்ந்து நானும் பாடினேன். பிள்ளைகள் கூடி இப்படி பாடுவது குழந்தைகளுக்கும் இன்பம், அதை பார்க்கிற நமக்கும் இன்பம் கூடிவிடுகிறது. பிள்ளைகள் இப்படி உறவுகளை வளர்த்துகொண்டு கூடி வாழவே விரும்புகின்றன என்பதுவும் என் சிந்தனையில் வந்து போனது. இருந்தாலும் , இந்த பாட்டிலும் எனக்கு தேவையான ஒரு வரி இருப்பதை பார்த்து வியந்து போனேன். பிள்ளைகள் பாட்டை நிறுத்தியதும், இந்த உலகத்தை படைத்தது யாரு? என்ற கேள்வியைக் கேட்டேன். கடவுள் தான் இந்த உலகத்தை படைத்தார் என உடனே பதில் வந்தது. உங்களுக்கு இப்படி யார் சொல்லிக்கொடுத்தது? என்றேன். எங்க வீட்டுலதான் சொல்லிக்கொடுத்தாங்க என்றனர் பிள்ளைகள். ஆனா எங்க வீட்டுல அப்படி சொல்லமாட்டோம்! என்றேன். வேற எப்படி சொல்லுவிங்க?என ஒரு மாணவி கேட்டாள். இந்த உலகம் இயற்கையானது என்றேன். உடனே ஒரு மாணவன், ஆமாம்! ஆமாம்! எங்கள் அறிவியல் ஆசிரியரும் சொன்னாங்க என்றான் மகிழ்வோடு. அப்படியின்னா இந்த இயற்கையை படைத்தது யாரு! நீங்களா? என ஒரு மாணவி பட்டென கேட்டாள்.எனக்கு பக்கென்றிருந்தது. உடனே என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. இதுவரை மவுனமாக இருந்த ஒரு மாணவி , இயற்கையை யாரும் படைக்கத் தேவையில்லை! அது தன்னைத் தானே படைத்துக்கொண்டதென , வேகமாக பதில் சொல்ல அனைவரும் அமைதியானார்கள். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. பின்னர் கிழேயிருந்து ஒரு மாணவன் விளையாட அழைக்க அனைவரும் ஓடிவிட்டனர்.
எனக்கோ நாளை பாடம் நடத்த துவக்கப் புள்ளி கிடைத்துவிட்டதைப் போலிருந்தது. “ இயற்கை தன்னைத் தானே படைத்துக்கொண்டது” என்ற வார்த்தை என்னுள் அப்படியே பதிந்துவிட்டது. எப்படி அந்த மாணவி இப்படி சிந்தித்தாள் என தெரியவில்லை. ஒரு பேச்சுக்கு எதிர் பேச்சாக பட்டென வார்த்தைகள் வந்து விழுந்திருக்கலாம் . இருந்தாலும் என் சிந்தனைக்கு விருந்தாக அமைந்து விட்டது. பெரிய பெரிய அறிவியல் புத்தகங்களில் எல்லாம், இந்த இயற்கை என்றென்றும் இருந்துவந்துள்ளது! யாராலும் படைக்கமுடியாதது என்றுதான் எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் அதைவிட “ இயற்கை தன்னைத் தானே படைத்துக்கொண்டது” என்ற வார்த்தை எளிமையாகவும் அர்த்தம் மாறாமளும் உள்ளாதாக எனக்கு பட்டது.
உலகம் யாராலும் படைக்கப்பட்டதல்ல ! அது தானே பல மாற்றங்களுக்கு உள்ளாகி ஒப்பில்லாத உயர்ந்த அழகோடு வளர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மேலும் அது பல அழிவுகளை சந்தித்தாலும் வளர்ச்சியை நோக்கிய பயணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. பூமியை ஆளத் தகுதிபடைத்த மிக உயர்ந்த மூளையைக் கொண்ட மனிதனையே அது படைத்துவிட்டது. நினைத்து பார்க்க வியப்பாக இருக்கிறது. மனிதன் வாழவேண்டுமென்றால் இயற்கையை பாதுகாக்க வேண்டுமென்ற முன் நிபந்தனையையும் வைத்துவிட்டது, எனக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.
இப்படி என் சிந்தனை வளர்ந்துகொண்டே போனது. நாளை நான் எடுக்கப் போகும் வகுப்பு மிகவும் பயனுள்ளதாகவும் சுவராசியமானதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை தானே!.
This comment has been removed by a blog administrator.
ReplyDeletesuvarasiyamana pathivu.vaazthukkal.
ReplyDeleteputhuvaipraba
மதிப்புமிக்க எழுத்தாளர் காஷ்யபன் , எஸ்.வி ஆகியோருக்கு நன்றி . எனது எளிய படைப்புகள் உங்கள் மனம் தொட்டதால் இன்னும் மணம் வீசுகிறது . புதுவை பிரபாவுக்கு எனது வாழ்த்துக்கள்
ReplyDelete