Skip to main content

புதுச்சேரிக்கு தண்ணீர் பஞ்சம் வருமா?


“கிணறு காயும் வரை தண்ணீரைப் பற்றி சிந்திப்பதில்லை” என்பது பழமொழி. தற்போது பெரும்பாலான கிணறுகள், குளங்கள், ஏரிகள் என அனைத்தும் காய்ந்து போய்விட்டன. அதுமட்டுமல்ல , இவை அனைத்தும் வீட்டுமனைகளாக, பேருந்து நிறுத்துமிடங்களாக, விவசாய நிலங்களாக, இப்படி பலவகையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டதில் நிலத்தடி நீர்மட்டமும் எட்டாத இடத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் இன்னமும் தண்ணீரைப் பற்றி தீவிர மாக சிந்திக்காதவர்களாக நாம் இருக்கிறோம். மத்திய மாநில அரசுகள் இதை உணர்ந்திருந்தாலும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் இன்னும் தொடக்கத்திலேயே உள்ளன.எனவே நாம் தண்ணீரைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.


பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால்தான் ‘ஜீவன் ’ உருப்பெருகிறது என்பார்கள். இருந்தாலும் தண்ணீரைத் தான் ‘ஜீவன் ’ என முன்னோர்கள் புகழ்ந்து கூறியிருக்கிறார்கள். திருவானைக்காவிலில் நீர்த்தெய்வமே ஆதாரமாய் இருப்பதும், சிதம்பரம் கோவிலில் கங்கையும், யமுனையும் சிற்பமாய் இருப்பதும், ஆடிப்பெருக்கு, மகாமகங்கள், தெப்பல் திருவிழா போன்ற வழிபாடுகளை மக்கள் தொடர்ந்து கொண்டாடி வருவதன் மூலம் தண்ணீரைத் தெய்வநிலைக்கு உயர்த்தி, நம் முன்னோர்கள் வணங்கி வந்திருப்பது நீரின் முக்கியதுவத்தை உணர்த்துவதாக உள்ளது.


நமது புதுச்சேரியில் நூறு ஏரிகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. தற்போது எண்பத்து நான்கு ஏரிகள் மட்டுமே உள்ளன. மிகப்பெரிய ஏரிகளான ஊசுட்டேரியும் , பாகூர் ஏரியும் தான் புதுச்சேரிக்கு பெரும்பகுதி நீராதாரத்தை வழங்கி வளம் சேர்த்து வருகின்றன. புதுச்சேரிக்கு சராசரியாக ஆயிரத்து இருநூறு மில்லி மீட்டர் அளவுக்கு வருடம் தோறும் மழை பொழிகிறது. இதில் அறுபத்து மூன்று சதவீதம் வடகிழக்கு பருவக்காற்று வீசும்போதும், மீதமுள்ள மழையளவு தென்மேற்கு பருவக்காற்று வீசும்போதும் நாம் மழையாகப் பெறுகிறோம். அதாவது நேரடியாக மழையின் மூலம் முன்னூற்று ஐம்பது கோடி லிட்டர் தண்ணீரைப் பெறுகிறோம். பல ஆண்டுகளாக நாம் பயன்படுத்திவரும் நிலத்தடி நீராதாரம் என்பது கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு கோடி லிட்டர் கையிருப்பாக உள்ளது. ஆனால் நாம் தொடர்ந்து அனைத்து வகையிலும் பயன்படுத்துவதற்கு இரண்டாயிரத்து நூற்று எழுபது கோடி லிட்டர் நீராதாரம் தேவைப்படுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.எனவே தண்ணீர் பற்றாக்குறை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதில் ஐயமில்லை.


விசாயத்தை எடுத்துக்கொண்டால் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதாம் ஆண்டுகளில் ஏரிப்பாசனத்தின் மூலம் சுமார் இருபத்தொராயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்டது. அதாவது நேரடி மழைப்பொழிவின் மூலமும், ஆறுகளில் வெள்ளம் ஏற்படுகிறபோது வருகின்ற அதிகபடியான நீரையும் சேமித்து வைக்க பாய்கால் - வடிகால் வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் என்ற கட்டமைப்பை உருவாக்கினார்கள்.இந்த கட்டமைப்பை உள்ளுர் பஞ்சாயத்து மூலம் மக்கள் உணர்வு பூர்வகமாக பங்கேற்று பராமரிப்பு வேலையை ஆண்டுதோறும் தொடர்ந்து செய்தும் பாதுகாத்தும் வந்துள்ளனர். இந்த கட்டமைப்பு பலமாக இருந்ததாலேயே ஏரிபாசனத்தின் மூலம் சுமார் இருபத்தொராயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் சாத்தியமாகியுள்ளது. ஆனால் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து இரண்டாம் ஆண்டுகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து விவசாயம் செய்ய ஆரமித்த போது , விவசாயம் செய்யக்கூடிய நிலப்பரப்பானது மெல்ல மெல்ல அதிகரிக்கத்தொடங்கியது.


இது ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறாம் ஆண்டுகளில் மேலும் அதிகரித்து முப்பத்து மூன்றாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு அளவிற்கு விவசாயம் விரிவடைந்தது. இந்த முறையில் வளர்ச்சி ஏற்பட்டாலும்,நமது பாரம்பரியமான ஏரிப்பாசன முறையையும் தொடர்ந்து பயன்படுத்த தவறியதால் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து எட்டில் ஏரிப்பாசனமானது முற்றிலுமாக நின்றே போய்விட்டாது. இப்படி ஒரு சோகம் நிகழ்ந்ததை யாறும் கண்டுகொண்டதாக தெறியவில்லை. ஏனெனில் ஏரிப்பாசனம் நின்றுபோனதைப் பற்றிக் கவலைப்படாமல் ஏரியின் உள்பகுதியை ஆக்கிரமித்து அதிலும் பயிர் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதில் மக்களும் தொலைநோக்கு பார்வையோடு சிந்திக்காமல் ஆழ்குழாய் கிணறுகள் தண்ணீரை அள்ளித்தந்த வேகத்தில் தங்களை மறந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.


ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் சுமார் ஆயிரம் மேல் ஊற்று ஆழ்குழாய் கிணறுகளே இருந்தன. இது மேலும் மேலும் அதிகரித்து ஆறாயிரம் ஆழ்குழாய் கிணறுகளை இன்று தொட்டுவிட்டது. அதாவது கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக நாம் நிலத்தடி நீரை தொடர்ந்து உறிஞ்சி வருகிறோம். இதனால் நிலத்தடி நீர் மிக வேகமாக கீழே சென்றுகொண்டே இருக்கிறது. ஏரிநீர் பாசனக் கட்டமைப்பையும் நாம் தொலைத்துவிட்டோம். விவசாயத்தில் ஏற்பட்ட பசுமைப் புரட்சி அதிகப்படியான் நீரை உறிச்சியதாலும் நகரமயமாக்கல் என்பது விரிவடைந்ததாலும் விவசாய நிலப்பரப்பு குறைந்துகொண்டே வருகிறது. விளைநிலங்கள் மனைகளாக நகரத்தை சுற்றி மட்டுமல்ல கிராமப்புறங்களிலும் வேகமாக மாற்றப் பட்டு வருகிறது. இவையெல்லாம் நம் கண்முன்னே நடந்தாலும் நாமும் அதோடு சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறோம். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக விவசாயத்தை, நமது நீர்நிலைகளை வெகுவாக பாதித்து உள்ளது.இதன் விளைவாக குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை விரைவாக வர உள்ளது என்றால் அது மிகையல்ல.


தற்போது புதுச்சேரி பகுதி முழுவதற்கும் முன்னூறு ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. முத்தரையர்பாளையம், திருக்காஞ்சி, பாகூர் , ஊசுட்டேரி நீராதாரங்களே புதுவையைக் காலம்காலமாக காப்பாற்றி வருகின்றன. தற்போது இப்பகுதிகளிலும் நீராதாரம் குறைந்து வருவதை நாம் சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது. இன்னும் பத்தாண்டுகளில் இன்றைக்கு தேவைப்படும் நீரைப்போல இரண்டு மடங்கு நீர் தேவைப்படும் என்று மத்திய நீர்க்குழுவின் தலைவர் எஸ்.கே.தாஸ் அவர்கள் கூருவது மிகவும் கவனிக்கத் தக்கது.


நிலைமை இப்படி இருக்க, புதுவையில் பெய்யும் மழையில் பெருமளவு வீணாக கடலில் கலக்கிறது.வெள்ள காலங்களில் இது பல மடங்கு கூடுதலாகிறது. நீரைத் தேக்கி வைப்பதற்கான முயற்சி கடந்த ஐம்பது ஆண்டுகளில் போதுமான அளவில் இல்லை. இந்த நிலை நீடித்தால் புதுச்சேரிக்கும் தண்ணீர் பஞ்சம் வந்தே தீரும். இரண்டாயிரத்து மூன்றாமாண்டில் ஐரோப்பிய நிதிக்குழுமத்தின் நிதி உதவியோடு ஏரிகள் புணரமைப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இது ஏரிகளை தூர்வார உதவியுள்ளது எனலாம். இந்த சிறிய அளவிலான முயற்சி போதுமானதல்ல. தற்போதுள்ள புதிய சூழ்நிலைக்கு ஏற்ப மழை நீரை சேமித்து வைக்க பழைய பாய்கால் - வடிகால் வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் என்ற கட்டமைப்பை மீண்டும் எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி விருப்பு வெறுப்புமின்றி அனைவரும் அமர்ந்து புதிய திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். தற்போது மீதமுள்ள அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


மத்திய அரசின் நிலத்தடி நீர்வாரியமும் நிலத்தடி நீர் வேகமாக குறைந்து வருவது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. மத்திய மாநில அரசுகளின் இத்தகைய தொடக்க முயற்சிகளை பாராட்டுவதோடு, இன்னும் தீவிரமான முயற்சிகளை பஞ்சாயத்து அமைப்புகளோடு இணைந்து செயல்பட, விரிவான செயல் திட்டங்களை விரைந்து தீட்டவேண்டும்.


நீர் பொதுசொத்து என்கின்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். தொழிற்சாலைகள் மூலமாக சட்டவிரோதமாக நீர் உறிஞ்சப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். தொழிற்சாலைகள் கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பதை தடுக்க வேண்டும். நீர் பாதுகாப்பில் அரசுடன் இணைந்து பொதுமக்களும் சம பங்குதாரர்களாக செயல்பட வேண்டும். இதுவே புதுச்சேரியில் தண்ணீர் பஞ்சம் வராமல் காக்க நல்வழியாகும்.

Comments

  1. வாங்க பதிவுலகத்திற்கு. தொடரட்டும்

    ReplyDelete
  2. MIKA MUKKIYAMAANA PIRACHCHINAIYAIP PESUM KATTURAI.ITHU KURITTHA VIZHIPPUNARVAI NAAM ERPADUTHTHI KONDE IRUKKA VENDUM

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை

மாணவர்கள் கொண்டாடிய அறிவியல் விழா!

             காலை இறைவணக்கத்தை முறைப்படி செலுத்துவதற்காக மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் வரிசையாக நிற்கத் தொடங்கினார்கள். ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களை ஒழுங்கு படித்தியபடியே மேடைக்கு வந்தார்கள். சற்று நேரத்தில் பள்ளியின் முதல்வரும் மேடைக்கு அருகில் வரவும்,, மாணவர்களிடையே சப்தம் படிப்படியாக குறைந்து அமைதி நிலவியது. மாணவத் தலைவர் இறைவணக்கத்தை ஆரம்பித்து வைக்க, மாணவர்கள் ஒரே குரலில் பாடி முடித்தார்கள். சில முக்கியச் செய்திகள் மற்றும் அறிவிப்புகளோடு அன்றைய இறைவணக்க நிகழ்வு முடிவுக்கு வந்தது. மாணவர்கள் தத்தம் வகுப்பிற்குச் செல்லத் தொடங்கினார்கள். மைதானம் வெற்றிடமாக மாறியது. சிறிது நேரத்தில் மீண்டும் சில மாணவர்கள் மைதானத்தை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்களுக்குள் பேசிக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக ஓடினார்கள். பள்ளி முதல்வர் தொடங்கி ஆசிரியர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏன் சில மாணவர்கள் மட்டும் மீண்டும் ஏதோ அணிவகுப்பு நடத்த முயற்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை!. மீண்டும் மைதானத்தில் ஓடிய மாணவர்கள் ஏதோ ஒரு ஒழுங்கிற்கு வந்தது போல தெரிந்தது. குறுக்கும் நெடுக்குமாக ஒரு அட்

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது.