Skip to main content

காற்றோடு வந்த செய்தி

னது ஊர் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தேன். என்ன காரணமென்று தெரியவில்லை, பேருந்துவர அதிக நேரமாகுமென்று சக பயணிகள் பேசிக்கொண்டார்கள். அதுவரையில் என்ன செய்வது என்று யோசிக்கையில், யாரோ ஒருவர் பேசிக்கொண்டிருப்பது ஓலிப்பெருக்கியின் வழியாக என் காதுகளுக்கு எட்டியது. நான் கூர்ந்து அவர் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தேன்.

நல்ல தெளிவான குரல். வார்த்தைகள் தன்னம்பிக்கையோடு தைரியமாக வந்து விழுந்து கொண்டிருந்தன . அந்த இனிமையான குரலை கேட்டுகொண்டேயிருக்க வேண்டுமென ஆவல் பிறந்தது. அப்போதுதான் தெரிந்தது அது ஒரு அரசியல் கட்சியின் கூட்டமென்று. அவர் சொன்ன செய்தி எனக்கு வியப்பாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. எங்கள் பகுதியில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தால், இலவசமாக வேட்டி, சேலை, சர்க்கரை, குடை, நோட்டுபுத்தகம், ஊன்முற்றோர்க்கான மிதிவண்டி, வீட்டு உபயோகப்பொருட்கள் போன்றவைகளை கட்சியின் தலைவர்கள் தன்சொந்த செலவில் கட்சியின் அடிமட்ட ஊழியர்களுக்கும் , அவர்கள் சார்ந்த ஆதரவாளர்களுக்கும் வாரி வழங்குவார்கள். இங்கு என்காதில் விழும் செய்தி என்ன வென்றால், கட்சியின் அடிமட்ட ஊழியர் ஒருவர் தனது குடும்பத்தின் மூலம் வந்த சொத்தின் ஒருபகுதியை , அதாவது ஒரு வீட்டு மனையை கட்சிக்காக வழங்கியதை அந்த கட்சியின் தலைவர் பாராட்டி பேசிக்கொண்டிருந்தார். அதுமட்டுமல்ல இது போன்று முன்பு கட்சியின் வளர்சிக்காக நிதி வழங்கிய சாதாரண ஊழியர்களையும், தலைவர்களையும் சுட்டிகாட்டி பேசிக்கொண்டிருந்தார். எனக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை, மெல்ல பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்றுவிட்டேன். அது ஒரு பொதுவுடைமை கட்சியின் கூட்டமென்று தெரிந்துகொண்டேன். பக்கத்திலிருந்த தோழர் ஒருவருடன் மெல்ல பேச்சு கொடுத்தேன். மற்ற கட்சியில் உள்ள தலைவர்கள் தொண்டர்களுக்கு பணம் வழங்குவார்கள், இங்கு தொண்டராக இருக்கும் நீங்கள் கட்சிக்கு பணம் தருகிறீர்களே! என்று கேட்டேன். எங்கள் கட்சியின் தலைவர்கள் பணம் கொடுப்பதில்லை அதற்கு மாறாக போராட கற்று தருகிறார்கள். அதற்கான அறிவையும் சரியான வழியையும் போதிக்கிறார்கள். அது மட்டுமே தொழிலார்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டுவரும் என்பதை அனுபவத்தின் அடிப்படையில் புரிந்து செயல் செயல்படுகிறோம். சுருக்கமாக சொல்வதென்றால், அவர்கள் மீனைத்தருகிறார்கள்! நாங்களோ தூண்டிலைத் தருகிறோம் !என்று அந்த தோழர் விளக்கினார்.


தொழிலார்களுக்காக பாடுபடும் கட்சியை தொழிலாளர்கள்தான் வளர்க்க வேண்டும், பாதுகாக்க வேண்டும்! இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! என்ற எண்ணம் தோன்றியது. அதுமட்டுமல்ல ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியர் என்ற முறையில் நானும் ஒரு தொழிலாளிதான் என்ற உணர்வு எனக்குள் தோன்றியது. அந்த பொதுக்கூட்டம் முழுவதும் கேட்டுவிட்டு தாமதமாகத்தான் வீடு வந்து சேர்ந்தேன். எனக்கு நானே புதியவனாக தெரிந்தேன். இன்னும் அந்த தலைவர் பேசியது எனக்கு கேட்டுக்கொண்டே யிருந்தது. நேர்மையாளர்களின் சுண்டு விரலைத் தொட்டுவிட்டதைப் போன்று உணர்ந்தேன். மனசுக்குள் நிம்மதி பிறந்த அந்த கணத்தில் மெல்ல தூங்கிப்போனேன்.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை

மாணவர்கள் கொண்டாடிய அறிவியல் விழா!

             காலை இறைவணக்கத்தை முறைப்படி செலுத்துவதற்காக மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் வரிசையாக நிற்கத் தொடங்கினார்கள். ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களை ஒழுங்கு படித்தியபடியே மேடைக்கு வந்தார்கள். சற்று நேரத்தில் பள்ளியின் முதல்வரும் மேடைக்கு அருகில் வரவும்,, மாணவர்களிடையே சப்தம் படிப்படியாக குறைந்து அமைதி நிலவியது. மாணவத் தலைவர் இறைவணக்கத்தை ஆரம்பித்து வைக்க, மாணவர்கள் ஒரே குரலில் பாடி முடித்தார்கள். சில முக்கியச் செய்திகள் மற்றும் அறிவிப்புகளோடு அன்றைய இறைவணக்க நிகழ்வு முடிவுக்கு வந்தது. மாணவர்கள் தத்தம் வகுப்பிற்குச் செல்லத் தொடங்கினார்கள். மைதானம் வெற்றிடமாக மாறியது. சிறிது நேரத்தில் மீண்டும் சில மாணவர்கள் மைதானத்தை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்களுக்குள் பேசிக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக ஓடினார்கள். பள்ளி முதல்வர் தொடங்கி ஆசிரியர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏன் சில மாணவர்கள் மட்டும் மீண்டும் ஏதோ அணிவகுப்பு நடத்த முயற்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை!. மீண்டும் மைதானத்தில் ஓடிய மாணவர்கள் ஏதோ ஒரு ஒழுங்கிற்கு வந்தது போல தெரிந்தது. குறுக்கும் நெடுக்குமாக ஒரு அட்

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது.