Skip to main content

தண்ணீரைத் தேடி….

தண்ணீரைத் தேடி….

ள்ளியின் நூலகத்தில் தண்ணீர் சம்மந்தமான நூல்களைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் அந்த மாணவன் வணக்கம் சொல்லியபடியே , புத்தகம் ஏதாவது கிடைத்ததா சார்! என் ஆவலோடுக் கேட்டான். வா சேர்ந்து தேடுவோம் நிச்சயம் கிடைக்கும் என்றேன். உலக தண்ணீர் தினத்திற்கான கட்டுரைப் போட்டியில் நிச்சயம் நான் வெற்றி பெறனும் சார்! என்றான். நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்! என வாழ்த்தினேன். ஆனால் இதற்காக நாம் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும்.! என்ற படியே புத்தகங்களைத் தேடினேன்.

தேடித்தேடி நாங்கள் களைத்துப் போனோம். தண்ணீர் சம்மந்தமான அறிவியல் விளக்கங்கள் உள்ள புத்தகங்களே அதிகம் இருந்தன. இன்றைக்கு இதைவிடவும் வேறு சிந்தனை தேவை இருப்பதாக எனக்கு பட்டது. இதற்கான விடை நூலகத்தில் மட்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை மெல்ல மெல்ல குறையத்தொடங்கியது. இதுவரை தேடிய நூல்களே போதும், “வா! சற்றே வெளியே சென்று வருவோம்” என அந்த மாணவனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன்.

“சுத்தமான தண்ணீர் அருந்த வேண்டுமென விரும்புகிற நாம், தண்ணீரை மதித்து போற்றி பாதுகாக்க துணிந்திருக்கிறோமா? என்பது கேள்விக்குறிதான் சார்!” என அந்த மாணவன் ஓர் அற்புதமான கேள்வியை என் முன் வைத்தான். எனக்கு ஏதோ பொறி தட்டியது போல் இருந்தது. உடனே எனக்கு ஒரு யோசனை தோன்றியது. இனி நாம் செய்ய வேண்டியதெல்லம் ஒன்றே ஒன்றுதான், நாம் அருகில் உள்ள கிராமத்திற்கு செல்வோம். அங்குள்ள நீர் நிலைகளைப் பற்றி தகவல்களைச் சேகரிக்கலாம் என்றேன். அவனும் சரி என்று தலையை ஆட்டினான்.

மறுநாள் நானும் அந்த மாணவனும் உற்சாகத்தோடு ஒரு கிராமத்திற்கு சென்றோம். குளங்களைத் தேடி நடந்தோம். சிறிதளவே தண்ணீர் இருந்த ஒரு குளம் எங்கள் கண்ணில் பட்டது. ஒரு பெரியவர் மீன் பிடிப்பதற்காக தூண்டிலைப் போட்டு காத்திருந்தார். அவரிடம் மெல்ல பேச்சு கொடுத்தோம். ஊரில் உள்ள குளங்களைப் பற்றி கேட்டோம். அவர் எங்களை கூர்ந்து கவனித்த படியே இருந்தார். சற்றே யோசித்துவிட்டு, நம்பிக்கை வந்தவராய் குளத்தைப் பற்றி கதை ஒன்றை சொல்லத் தொடங்கினார்.

நான் இப்பொழுது மீன் பிடிக்கிற இந்த குளம் முன்பெல்லாம் எப்பொழுதும் நிரம்பியே இருக்கும். இது வற்றிப் போனதாய் வரலாறே கிடையாது. இந்த குளத்திற்கு ஒரு கதை இருக்கிறது. இந்த குளக்கரையின் கிழக்கு பகுதியில் ஒரு சிலை இருப்பது தெரிகிறதா? என்றார். நாங்கள் ‘ஆம்‘ என்ற படியே கதையைக் கேட்க தயாரானோம். அந்த சிலை ஒரு பெண் தெய்வம். அந்த பெண் தெய்வத்தின் கணவன், இந்த குளத்தில் குதித்து பாதாளம் சென்றுள்ளான். அங்கே உள்ள பெரிய கடவுளான சிவனை சந்தித்து வரம் வாங்கி வர சென்றுள்ளான். கதைப்படி இன்றுவரை அவன் திரும்பவில்லை. ஆனால் பாதாளம் சென்ற கணவன் திரும்ப வருவான் என்ற நம்பிக்கையோடு, இந்த பெண் தெய்வம் குளக்கரையில் காத்திருக்கிறாள்! என்றார்.

இப்படி ஒரு கதையை சொன்னதும் எங்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அது மட்டுமல்ல பாதாளம் சென்றுள்ளவன் பிராமண வகுப்பை சார்ந்தவனாம். கிராம மக்களின் நம்பிக்கைப் படி பிராமணர்களைத்தொட்டால் தீட்டு எனும் போது, ஒரு பிராமணர் குளத்தின் உள்ளே இருக்கிறார் என்றால், அந்த குளத்தை அசுத்தப்படுத்த மனம் வருமா? அல்லது அந்த குளத்தை அசுத்தபடுத்தினால் கடுமையான தண்டனைக் கிடைக்கலாம். இந்த கதை முந்தைய இன்றைய காலகட்டத்தை பிரதிபலித்தாலும் நீர்நிலைகளைப் பாதுகாப்பது மிக முக்கியமானதொரு கடமையாக இருந்துள்ளதை நாம் அறியமுடிகிறது.

மேலும் அந்த பெரியவர் குளங்களைப் பற்றிக் கூறத்தொடங்கினார். இந்த கிராமத்தில் உள்ள பத்து குளங்களின் ஓரத்திலும் ஏதாவது ஒரு பெண் தெய்வம் பாதுகாப்பாக இருக்கும். அதோடு மட்டுமல்ல ,ஊர் திருவிழாவின் போது இந்த தெய்வங்களுக்கு பூஜை செய்யப்பட்டு மரியாதை செய்யப்படும். ஆனால் இன்றைக்கு இந்த வழக்கம் தொடர்ந்தாலும் குளங்களில் நீர் வற்றுவதை தடுக்க முடியவில்லை. இந்த பத்து குளங்களில் இன்று ஒன்றில் மட்டுமே சிறிதளவு நீர் இருக்கிறது. மற்ற குளங்களெல்லாம் வீட்டுமனைகளாக விளைநிலங்களாக மாற்றப்பட்டு விட்டது. இதைப்போல ஓர் அற்புதமான செங்கழுநீர் ஓடை தற்போது பாதையாக மாற்றப்பட்டுவிட்டது. இது ஒருகாலத்தில் ஏரி நீர் வெளியேறும் வாய்க்காலாக இருந்துள்ளது. இன்றைக்கு இந்த பெரிய ஏரியின் உட்பகுதி விளை நிலங்களாக மாற்றப்பட்டு விட்டது. காலமாற்றத்தில் தற்போது இந்த ஏரி மீன் பிடிக்கும் சின்ன குட்டையாக காட்சி அளிக்கிறது” என கண்கலங்க சொன்னார்.

நாங்களும் மனக்கலக்கத்தோடு கேட்டுக்கொண்டிருந்தோம். “ ஆழ்குழாய் கிணறு மூலம் நீரை உறிஞ்சி எடுத்ததன் மூலம் ஏரியின் முக்கியத்துவம் குறைந்து போனது.ஆனால் கொடுமை என்னவென்றால் ஆழ்குழாய் கிணறுகளூம் வற்றிப்போய்விட்டது மட்டுமல்ல உப்பு நீராகவும் மாறிவிட்டது. இன்றைக்கு குடிநீருக்கும் தட்டுபாடுவந்து மக்கள் குடங்களோடு அலைவதை பார்க்க முடிகிறது.” என எனது மாணவர் எடுத்துச் சொல்ல , அந்த பெரியவர் “உண்மைதாம்பா” என தலையசைத்தார்.

“மன்னர் காலத்திலிருந்து ஏரி பாசனம் மூலம் விவசாயம் செய்த மக்கள் தற்போது ஏரிகளையும் குளங்களையும் தொலைத்து விட்டு அனாதைகளாய் கிராமத்தை விட்டு வெளியேறி நகரங்களில் சுற்றித் திரிகிறார்கள்.” என் அந்த பெரியவர் மேலும் சொன்னது எங்களை கலங்க வைத்துவிட்டது.

எத்தனை பெரிய சோகம் நம்கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது புரியாமல் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது என்னுள் முள்ளாய் தைத்தது.

அந்த பெரியவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு திரும்பும் வழியில் ஒரு பெரிய ஏரி வறண்டு போய் கிடப்பதை பார்க்க நேர்ந்தது. மனசு தாங்காமல் மெல்ல அந்த ஏரியில் இறங்கினோம். ஏரி முழுவதும் பாளம் பாளமாய் வெடித்து கிடந்தது. நாம் கால் வைத்து நடக்க முடியாதபடி காய்ந்து வெடித்த மண் முள்ளாய் குத்தியது. ஆனாலும் அந்த வெடிப்பின் வழியே ஒரு புல்செடி தன் பசுமையை வெளிப்படுத்தியபடி அழகாய் துளிர் விட்டிருந்தது. இந்த வறண்ட ஏரியில் இந்த ‘புல்லின் இதழ்‘ எங்களுக்கு பெரும் அமைதியையும் ஆறுதலையும் தந்தது. அந்த ஏரிக்கு இன்னும் உயிர் இருப்பதாக எனக்கு பட்டது. மீண்டும் பறவைகள் சப்தத்தோடு தண்ணீர் நிரம்மி மதகு வழியே வழிந்தோடி வயலுக்கு பாயும் அந்த கற்பனை எங்கள் மனதில் எட்டிப்பார்த்தது.

என்ன சார்! மீண்டும் இப்படி நடக்குமென நினைக்கிறீர்களா? என்றான். நம்பிக்கை கொள்! வறண்ட ஏரியில் ஒரு சிறு புல்லால் பசுமையை தரமுடியுமென்றால் நம்மால் முடியாதா? என நான் எடுத்துச் சொன்னதும், நிச்சயம் முடியும் சார்! என நம்ப்க்கையோடு என் முன்னே நடந்தான்.

நாம் பார்த்த இந்த ஒரு கிராமத்தின் ஏரி, குளம், கிணறுகளெல்லாம் வற்றிப் போய் கிடக்கிறது என்றால், இந்தியா முழுவதும் இந்த நிலைதானே! என எண்ணும் போது நெஞ்சமெல்லம் பதறுகிறது. “நீர் ஆதாரம் உயிர் ஆதாரம்” என்ற எண்ணம் அனைவருக்கும் வரவும் மாற்று திட்டங்களை துணிந்து செய்யவும் நாம் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும், என்ற எண்ணம் என் மனதில் தோன்றி நிலைப்பெற்றது.

இந்த அடிப்படையை முன்வைத்து கட்டுரையை எழுதுமாறு அந்த மாணவனிடம் சொன்னேன். அவனும் ஒரு நல்ல மாற்றம் வர வேண்டுமென ஆவேசத்தோடு எழுதிமுடித்து என்னிடத்தில் காட்டினான். உனது கட்டுரை மட்டுமல்ல இந்த கட்டுரையின் சிந்தனையும் நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையோடு, உலக தண்ணீர் தினத்திற்கான கட்டுரைப் போட்டிக்கு அனுப்பி வைத்தோம்.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

உலகத்தைப் படைத்தது யாரு?

நா ளை எவ்வாறு பாடத்தை எளிமையாக நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதுவும் உலகம் தோன்றியது எப்படி என்பதை நான் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். உலகம் தோன்றியது எப்படி என்று நான் சொல்லத்தொடங்கும் முன் , அது முன்பே படைக்கப்பட்டுவிட்டது என்ற பதில்தானே உடனே வரும்!?. அப்பொழுதுதான் என் மகள் ஓடி வந்து எனது சிந்தனையைக் கலைத்தாள். அப்பா! அப்பா! எங்கள் ஆசிரியர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க , பாடட்டுமா? என ஆவலோடு கேட்டாள். சரி! பாடு கேட்கலாம் என்றேன். உடனே அவள், நான்பாடும்போது நீங்களும் பாடனும்பா! என்றாள். நான் சரி என்று சொல்வதற்குள் அம்மாவும் அக்காவும் கூட பாடனுமென்றாள். அவர்கள் தயாராவதற்குள் பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டாள். அனைவரும் என்னோடு சேர்ந்து பாடவேண்டுமென சொல்லியபடியே பாடத்தொடங்கிவிட்டாள். “சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! அழகாக படைத்தது யாரு! அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமா பாடிகிட்டு அழகாக படைத்தது ...