அ ன்று வகுப்பிற்கு ஒரு புதிய ஆசிரியர் வந்திருந்தார். சராசரி உயரத்திற்குச் சற்று குறைவான தோற்றத்தில் இருந்தார். கரும்பலகையைத் துடைக்கும் போதெல்லாம் அவரின் பாதங்கள் மேலே தூக்கி நிற்பதைப் பார்த்து, மாணவர்கள் சப்தம் வராமல் சிரித்தப்படி இருந்தனர்.அவர் சட்டென திரும்பும் போது மாணவர்கள் மவுனமாக சிரிப்பதை அவர் காண முடிந்தது. இது பற்றியெல்லாம் அவர் கவலைப் படாமல் பாடம் நடத்துவதிலேயே குறியாக இருந்தார். அவர் நடத்தும் விதத்தை விரைவில் புரிந்து கொண்ட மாணவர்கள் மெல்ல மெல்ல அமைதியாகிவிட்டனர்.
அப்போதுதான் ஒரு மாணவர் புதியதாக வகுப்பிற்கு வந்தார்.ஆசிரியர் அவரை உள்ளே அழைத்த படியே, உனது பெயரென்ன? உனது அப்பா என்ன செய்கிறார்? என்று கேட்டார். “எனது பெயர் இராமமூர்த்தி. எனது அப்பா மாடு வளர்க்கிறார்; அதோடு மாட்டு தரகு வேலையும் பார்க்கிறார்.”என்றான் அமைதியாக. உடனே எல்லா மாணவர்களும் சிரித்து விட்டனர். இதை சற்றும் எதிர்பாராத ஆசிரியர் மாணவர்களை அமைதியாக இருக்கச் சொன்னார். அன்றைய வகுப்பை ஒருவழியாக முடித்து விட்டு வெளியே வந்துவிட்டார். இருந்தாலும் ‘மாடு வளர்ப்பது’ என்றவுடன் மாணவர்கள் கேலியாக சிரித்தது, இவர...