Skip to main content

ஒரு எளிய கேள்வி

துவைத்த துணிகளைக் காயவைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் என் மகள் என்னருகே ஓடி வந்தாள். கேள்வி கேட்பது அவள் சுவாபம். நான் தடை ஏதும் செய்வதில்லை.அதிலும் அவள் கேள்வி எப்படிப்பட்டதாக இருந்தாலும்,அது எனது சிந்தனையை தூண்டுவதாகவே இருந்துள்ளது. அவளது கேள்வியை உள்வாங்க நானும் ஆவலாக , ஒடிவந்த என் மகளை அப்படியே தூக்கிக்கொண்டேன். அப்பா! அப்பா! எனக்கு ஒரு சந்தேகம். என்னமா ,சொல்லு! சொல்லூ! என்றேன் ஆவலோடு. அப்பா! அப்பா! துணிகளெல்லாம் எப்படி அப்பா! காயுது? அத, நம்ம கண்ணால பார்க்க முடியலையே ஏனப்பா? என்றாள். “ஓ அதுவாமா, துணிகளெல்லம் சூரிய வெப்பத்தால காயுது.அதிலிருக்கிற ஈரமெல்லாம் காற்றுல காணாம போயிடுது. அதனால நம்மால பார்க்க முடிவதில்லை” என்றேன். அத நம்ம கண்ணால பார்க்க வேற வழி இல்லையாப்பா?என்று இன்னொரு கேள்வியை கேட்டுவிட்டாள். என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. சரி! சரி! அப்புறமா சொல்கிறேன்! என்று அவளை சமாளித்து அனுப்பி விட்டேன். என் மகளின் இந்த கேள்வி அறிவியல் ஆசிரியரான என்னை குடைந்து கொண்டேயிருந்தது. ஆவியாகி காற்றில் கலந்துவிடுகிற நீரை , கண் முன்னால் காட்டினால்தான் பிள்ளைகள் நம்முவார்களல்லவா? எப்படி இதை எளிமையாக செய்துகாட்டுவது?என்றசிந்தனைஎன்னுள் ஓடிக்கொண்டேயிருந்தது.

பள்ளிக்கூடத்திற்கு சென்று பாடங்களை நடத்திக்கொண்டிருந்தாலும், என் மகள் எழுப்பிய கேள்வி மனதின் ஒரு பக்கத்தில் ஓடிக்கொண்டேயிருந்தது. பாடத்தை நடத்திய பிறகு, இதைப் பற்றியும் மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டேன். இதை எப்படி கண் முன்னால் காட்டுவது ? என்றபடியே மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். யோசித்தால் ஒரு எளிமையான விடை கண்டிப்பாக கிடைக்கும் . மாணவர்களே நீங்களும் சிந்தித்து வாருங்கள், நானும் நல்லதொரு விடையோடு வருகிறேன், என்றபடி அன்றைய வகுப்பை முடித்து வெளியே வந்தேன்.

மறுநாள் நான் வகுப்பிற்கு வந்ததும், பிரதீபா, சுவேதா ஆகிய இரு மாணவிகள் ஆவலோடு என்னைப் பார்க்க ஓடி வந்தனர். “சார்! சார்! நேற்று நீங்க கேட்ட கேள்விக்கு ஒரு விடையைக் கண்டுபிடித்திருக்கிறோம், நீங்க சரியான்னு பார்த்துச் சொல்லனும் “ என்றனர். எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மாணவர்களை மனதார பாராட்டினேன். நீங்களே எப்படி என்று சொல்லுங்கள் என்றேன். அவர்கள் பொறுமையாக விளக்க ஆரம்பித்தனர்.

எங்க வீட்டுல ஒரு சிட்டுகுருவி கூடு கட்டியிருக்கு. அதற்கு வசதியாக எங்க அப்பா ஒரு அழகான கூண்டு செய்துவைத்துள்ளார். தற்போது சிட்டுகுருவி தனது குஞ்சிகளோடு ஆனந்தமாக வாழ்ந்துவருகிறது. அதற்கு நாங்கள்தான் தேனீர் கோப்பையில் தண்ணீர் வைப்போம். நேற்று நாங்கள் தண்ணீர் வைக்கும் போது , பழைய நீரை ஒரு கோப்பையில் ஊற்றி வெளியில் வைத்தோம். புதிய நீரை பிடித்து கூண்டுக்குள்ளே வைத்தோம். பிறகு அந்த பழைய நீர் உள்ள கோப்பையை மறந்து போய் எடுக்காமல் வந்துவிட்டோம். நாங்கள் பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வெளியில் இருந்த கோப்பையில் நீர் காணாமல் போயிருந்தது. அனால் கூண்டுக்குள்ளே இருந்த கோப்பையில் சிட்டுக்குருவி குடித்தது போக மீதமிருந்தது. இதிலிருந்து நாங்கள் ஒரு முடிவிற்கு வந்தோம். நீங்கள் வகுப்பில் எழுப்பிய கேள்விக்கு விடைகிடைத்தது போல் இருந்தது என்றோம். அதாவது சூரியவெப்பத்தால் வெளியிலிருந்த கோப்பையில் நீர் ஆவியாகி காற்றில் கலந்துவிட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக கூண்டுக்குள்ளே இருந்த கோப்பையில் நீர் வற்றாமல் இருக்கிறது. இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமென்றால் , வெளியில் காணாமல் போன நீர் உள்ளே இருப்பதாக கொள்ளலாமல்லவா? என்று மாணவிகள் கேட்டவுடன் ஆசிரியராகிய நான் ஆனந்தத்தில் துள்ளிக்குதித்தேன். மீண்டும் மாணவிகளை வெகுவாக பாராட்டிவிட்டு , இதை அழகான எளிய சோதனையாக மாற்றலாம் வாருங்களென்றேன்.

நேராக பள்ளியின் அறிவியல் ஆய்வகத்திற்கு சென்றோம். ஒரு கண்ணாடி கோப்பையை எடுக்கச் சொன்னேன். அதில் பாதியளவு உயரம் வரை வெளிப்பகுதியில் ஒரு கோடு வரையச்சொன்னேன். பின்னர் அந்த கோடுவரை நீரை நீரப்பச்சொன்னேன். அந்த அளவு நீரை எடுத்து ஒரு சிறிய தட்டில் ஊற்றி வெளியில் வைக்கச் சொன்னேன். மீண்டும் அதே அளவு நீரை ஒரு கண்ணாடி கோப்பையில் எடுத்து, அதன் வாய்ப்பகுதியை ஒரு சிறிய தட்டால் மூடச்சொன்னேன். பிறகு அதன் மேல் ஒரு பெரிய கண்ணாடி கோப்பையை தலைகீழாக கவிழ்த்து மூடச்சொன்னேன். மாணவர்கள் சரியாகச் செய்துமுடித்தனர். தற்போது சமபங்கு நீர், சூரிய ஒளி நன்றாக படும்படி வெளியில் உள்ள தட்டிலும்; சூரிய ஒளி நன்றாக படாதவாரு மூடிய கண்ணாடி கோப்பையிலும் உள்ளது. இந்த இரண்டையும் சூரிய ஒளி படும்படி வெளியில் வைத்து அரைநாள் காத்திருந்தோம். வெளியில் உள்ள தட்டில் நீர் ஆவியாகிவிட்டது. ஆனால் மூடிய கோப்பையில் வரையப்பட்ட கோட்டில் நீர் அப்படியே எந்த மாற்றமுமில்லாமல் இருந்தது. எனவே காற்றில் கலந்த அதேயளவு நீர் மூடப்பட்டக் கோப்பையில் கண் முன் இருப்பதை நாம் தெளிவாக பார்க்க முடிவதாக கொள்ளலாமல்லவா?. சார்! அற்புதம் சார்!. நாங்களும் இதைத் தான் ஊகித்தோம் சார்! நீங்க தெளிவான ஒரு சோதனையையே உருவாக்கிட்டிங்க சார்! என்றனர் மாணவிகள். நீங்க சொன்ன சம்பவத்தால்தான் இந்த சோதனையை உடனடியாக உருவாக்க முடிந்தது. எல்லா பாராட்டுகளும் உங்களையே சேரும் என்றேன் மகிழ்வோடு.

எப்படியோ என் மகள் எழுப்பிய கேள்விக்கு சரியான விடையை மட்டுமல்ல ஒரு எளிய சோதனை முறையையும் நாம் கண்டுபிடித்து விட்டோம். கேள்வி எப்படி பட்டதாக இருந்தாலும் கவனமாக சிந்தித்தால் மாணவர்கள் இதுபோன்ற பல ஆய்வுகளை செய்யமுடியும் என்பதற்கு இந்த மாணவர்களே சாட்சியாக உள்ளனர். அன்பான ஆசிரியர்களின் வழிகாட்டுதல் இன்னும் பல ஆய்வுகளைச் செய்யதூண்டுமல்லவா?. ஆய்வு மனப்பான்மை இதுபோன்ற எளிய கேள்வில் அல்லவா தொடங்குகிறது. கேள்விகள் தோன்றிக்கொண்டே இருக்கட்டும். விடைகள் வந்துகொண்டே இருக்கட்டும். மனித சமுகம் இதனால் மட்டுமே மேம்படும்.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது....

மாணவர்கள் கொண்டாடிய சுதந்திர தினவிழா

சு தந்திரதின விழாவில் கொடியேற்றி துவக்கி வைப்பதற்காக, மாணவர் நல சங்கம் சார்பில் என்னை அழைத்திருந்தார்கள். முப்பதாண்டுகாலமாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவன் என்ற தகுதி ஒரு காரணமாக இருக்கலாம். மிக முக்கியமான இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக என்னை தயார் செய்துகொண்டிருந்தேன். அப்போது கதவு தட்டப்படும் ஓசைகேட்டு திறந்தேன். கையில் தேசியக்கொடியோடு மாணவர்கள் சீருடையில் வந்திருந்தனர். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. வாங்க! வாங்க! என்று பரவசத்தோடு உள்ளே அழைத்தேன். அனைவரும் ஒரே குரலில் “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! கொண்டாடுவோம்! என்றபடியே ஒரு வண்ண காகிதத்தை கையில் கொடுத்துவிட்டு அடுத்த வீட்டிற்கு சென்றுவிட்டனர். சுதந்திரமே மாணவர் உருவில் வீட்டு வந்தது போல இருந்தது. அவர்கள் கொடுத்துச்சென்ற காகிதத்தின் இரு பக்கத்திலும் பதினைந்து என்று எண்ணால் எழுதப்பட்டிருந்தது. மெல்ல பிரித்து பார்க்க அது எட்டாக மடிக்கப்பட்டிருந்தது. இது சுதந்திரதினத்தை குறிக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. காகிதத்தின் உள்ளே “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! வறுமையற்ற வளமான ஓர் இந்தியாவை உருவாக்குவோம்! ” எ...