Skip to main content

ஆனந்தி கோபால்

 

ஆனந்தி கோபால்


அந்த பள்ளியின் ஆண்டு விழா இன்னும் சற்று நேரத்தில் நிறைவுபெற இருக்கிறது . விழா நிகழ்வினைத் தொகுத்துக்கொண்டிருந்த ஆசிரியர் பச்சையம்மாளுக்கு இன்னும் உற்சாகம் குறையவில்லை. மாணவ மாணவியர்களின் திறமை வெளிப்பட்ட காட்சிகள் இன்னும் அவர் மனதை விட்டு அகலவில்லை.  அதுவும் மாணவர்களின் மன எழுச்சியை அறிவு முதிர்ச்சியை கண்முன்னால்  காணும் கலை இன்பம் அல்லவா! ஆக உற்சாகம் குறைவதெப்படி!

அப்பொழுதுதான் முதல் பரிசை அறிவிக்கச் சொல்லி துண்டுத் தாள் ஒன்று ஆசிரியரின் கைக்கு வருகிறது. அதில் ஆனந்தி , கோபால்  என்று இரண்டு மாணவர்களின் பெயர் எழுதப்பட்டிருந்தது. இருவருக்கும் முதல் பரிசை அறிவிக்கச்சொல்லி இருந்தது . இரண்டு மாணவர்களும் மேடைக்கு வர ,  ஆனந்தி கோபால் இருவருக்கும் முதல் பரிசு வழங்கப்படுகிறது என்று மிக உற்சாகமாக வாழ்த்தி வரவேற்றார் பச்சையம்மாள். பள்ளியின் முதலவரும் ஆனந்தி கோபால் என்று உச்சரித்தப்படியே பரிசை வழங்கினார். கைத்தட்டல் ஓசை அடங்க வெகுநேரமானது .கூடவே ஆனந்தி கோபால் என்ற பெயர்களும்  கலைவிழா மேடையெங்கும் எதிரொலித்தது. இருவரும் நாளை நல்ல மருத்துவர்களாக மாறி நமது பள்ளிக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று  ஆசிரியர் பச்சையம்மாள் சொல்ல,  கைத்தட்டல் ஓசை மீண்டும் ஒலிக்கத்தொடங்கி விட்டது.

மறுநாள் பள்ளி முழுவதும் ஆனந்தி கோபால் பற்றியே பேச்சாக இருந்தது. இரண்டு மாணவர்களும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். அவர்கள் மருத்துவர்களாக வரவேண்டும் என்ற பள்ளியின் முதல்வருக்கு மட்டுமல்ல மற்ற ஆசிரியர்களுக்கும் அதே ஆசைதான்! அப்பொழுதுதான் அறிவியல் ஆசிரியர் நாதன் உள்ளே வந்தார். அவரது கண்கள் ஆசிரியர் பச்சையம்மாளைத் தேடியது. இதோ பச்சையம்மாள் ஆசிரியரும் வந்துவிட்டார். விழாவில் உங்களின் வசீகரமான குரல் அனைவரையும் கட்டிப்போட்டு விட்டது. நீங்கள் ஆனந்தி கோபால் என்று உச்சரித்தது என்னை வெகுவாக கவர்ந்து விட்டது. ஆனந்தி கோபால் என்ற பெயர் என் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது. நான் எப்பொழுதோ படித்தது என் ஞாபகத்திற்கு வந்து போனது என்ற படியே நாதன் ஆசிரியர் தன் மனதில் பட்டதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்..

ஆனந்தி கோபால் இருவரும் நமது பள்ளி மாணவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த பெயருக்கு பின்னால் ஒரு மகத்தான் வரலாறு இருக்கிறது. ஒரு பெண்ணின் வலியும் முதல் சாதனையும் இதில் அடங்கியுள்ளன . முதன் முதலில் வெளிநாடு சென்று மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண்மணியின் பெயரும் ஆனந்திகோபால்தான்! அந்த பெண்மணி எடுத்துவைத்த முதல் அடி மிக மிக மகத்துவமானது. அதுவே வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க முடியும் என்ற நம்பிக்கையை மற்ற மாணவர்களுக்குள் விதைத்தது. இதனால் இந்திய மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பல பெண் மருத்துவர்கள் கிடைத்தார்கள் .இதெல்லாம் நடந்தது 1893-ல்,  என்று ஆசிரியர் நாதன் சொல்ல சொல்ல பச்சையம்மாளுக்கு ஆச்சரியம் கூடியது.

சரி! சரி! இது பற்றி பிறகு பேசலாம் என்ற படியே ஆசிரியர் நாதன் அடுத்த வகுப்பிற்குச் செல்ல தயாரானார். அதற்குள் தலைமை ஆசிரியர் வந்துவிட இருவரும் அமைதியாக நின்றனர்.

நாளை நமது பள்ளியில் ஒரு திரைப்படம் திரையிடப்போகிறோம். அதற்கான ஏற்பாடுகளை நீங்கள்தான் செய்ய வேண்டுமென தலைமை ஆசிரியர் கேட்டுக்கொள்ள இருவரும் மகிழ்வோடு சம்மதம் தெரிவித்தனர்.

வெறும் வகுப்பறைப் பாடம் மட்டும் போதாது ; இதுபோன்ற திரையிடல், நாடகம் ,பெரிய நூலகத்திற்கு செல்லுதல், பல சுற்றுலா இடங்களூக்கு செல்லுதல் என்று மாற்று வகுப்பறைக் கல்வியை முன்னெடுக்கத் துடிப்பவர் இந்த தலைமை ஆசிரியர். நாதனுக்கும் ,பச்சையம்மாளுக்கும் இதில் உடன்பாடுதான். அப்புறமென்ன! இப்பொழுதே திரைப்படம் திரையிடலுக்கான திட்டங்களைச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர்.

மறுநாள் மாலை திரையிடல் தொடங்கிவிட்டது. மாணவ மாணவியர்கள்  ஆர்வமாகவும் உற்சாகமாகவும் படம்  பார்த்தனர். தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் ஆர்வத்தோடு படம் பார்த்தனர். திரையிடல் முடிந்தவுடன் ஒவ்வொருவர் முகத்திலும் ஆச்சரியம், உற்சாகம் , மகிழ்ச்சி, சோகம் என பல முக பாவனைகளைப் பார்க்கமுடிந்தது.

தலைமை ஆசிரியர் இந்த திரையிடல் குறித்து பேச ஆரம்பித்தார். “இந்த திரைப்படத்தை அனைவரும் பார்த்தீர்கள் அல்லவா! இந்த அற்புத நிகழ்வு சுமார் நூற்று முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. திருமணமான ஒன்பது வயது சிறுமி தனது இருபத்தி இரண்டாவது வயதில் அமெரிக்காவில் உள்ள மருதுவக்கல்லூரியில் மருத்துவம் பயின்று இந்தியாவிற்கு வந்த கதைதான் இந்த திரைப்படம். அந்த காலத்தில் பெண் பிள்ளைகளை படிக்க வைப்பது கிடையாது. ஆனால் அந்த சிறுமியின் கணவர் திரு கோபால் கோஷி முற்போக்கானவர். பெண்கள் படிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்.அவரின் விடாப்பிடியான தொடர் முயற்சியாலேயே ஆனந்தி மெல்ல இதை உணர்ந்து கொண்டு படிக்கலானார். ஆனால் திடீர் திருப்பமாக அவரின்    முதல் குழந்தை மருத்துவ உதவி இல்லாமல் இறந்துவிட்டது. இந்த சம்பவம் அவர் மனதை வெகுவாக பாதித்துவிட்டது. அதன் பிறகுதான் மிகத்தீவிரமாக தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்பதில் ஆனந்தி  மிக உறுதியாக இருந்தார்.  கோபால் கோஷியும் தீவிரமாக உழைத்தார். தயங்காமல் ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார். அமெரிக்காவிற்கு சென்று மருத்துவ கல்லுரியில் சேர்ந்து பட்டம் வாங்கும் வரை மிகக்கடினமாக உழைத்தார்.  கனவு நினைவாகி இந்தியாவிற்கு திரும்பி வந்த சில வருடங்க்களில் காசநோய் காரணமாக மருத்துவர் ஆனந்தி இறந்து போகிறார். ஆனால் இந்த தம்பதிகளின்  லட்சிய வாழ்வு எவ்வளவு மகத்துவமானது என்பதை மற்ற இந்திய பெண்கள் உணர்வதற்கு இவர்கள் ஒரு சிறந்த கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார்கள். இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் “ என்று தலைமை ஆசிரியர் பேசி முடித்தார்.

தலைமை ஆசிரியர் மிகச்சரியாக இந்த திரைப்படம் குறித்து பேசி இருக்கிறார். இப்பொழுது மாணவர்கள் கலந்துரையாடினால் உங்கள் கருத்தையும் எங்களால் அறியமுடியும். உற்சாகமாக ஆரம்பிங்கள் மாணவர்களே! என்று நாதன் ஆசிரியர் கூறிவிட்டு அமர்ந்தார்.

            அந்தப்படத்தில் வரும் பள்ளிக்கூடத்தில் வெள்ளைக்கார பெண்கள் அழகா கவுன்போட்டு உற்சாகமாக படிக்கிறாங்க. அதுபோல             நமது பிள்ளைகளும்  படிக்க வேண்டுமென அப்பொழுது ஏன் யாருக்கும் தோன்றவில்லை?     என்று ஒரு மாணவி எழுந்துகேட்டாள்.

            அற்புதமான கேள்வியைக் கேட்டுவிட்டாய்! உனக்கு முதலில் நன்றி!

            “அப்பொழுதெல்லாம் யாரும் ஆங்கிலம் படிக்க வேண்டுமென விரும்புவதில்லை. உயர் சாதியினர்கூட  வேதம் படிப்பதையே விரும்பினார்கள். அதுவும் சமஸ்கிருதம் படிப்பதையே உயர்வாக நினைத்தார்கள்.ஆனால்  கோபால் கோஷிமட்டுமே ஆங்கில கல்வியைப் புரிந்துகொண்டார். அந்த மொழியில்தான் பல துறை சார்ந்த படிப்புகளை படிக்க வாய்ப்புள்ளது என்பதை அப்பொழுதே உணர்ந்து கோண்டார். இதனாலேயே தனது மனைவிக்கு அந்த வாய்ப்பை தர முயன்றார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். ஆனால் இந்த வெற்றி சாதாரண விடயம் அல்ல. அப்பொழுதெல்லாம் கணவன்மார்கள் மனைவியிடம் நேரடியாக பேசமுடியாது ஆனால் நமது கோபாலோ தானே ஆசிரியராக மாறி ஆனந்திக்கு வகுப்பெடுத்தார். அதுமட்டுமல்ல மிசனரி பள்ளியில் சேர்ப்பதே அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது “என்று நாதன் ஆசிரியர் அழகாக எடுத்துச்சொன்னார்.

தலைமை ஆசிரியரும் சபாஷ் என்று நாதனைப் பாராட்டினார்.

டாக்டர் ஆனந்திக்கு  ஏன் காசநோய்! வந்தது? அதற்கு மருந்து இல்லையா! என்று ஒரு மாணவன் எழுந்து கேட்டான்.

நல்ல கேள்வி! அவங்க படிக்க பொன இடம் அமெரிக்கா! அங்கெல்லாம் குளிர் அதிகமாக இருக்கும் .நம்ம நாட்டுல அந்த அளவிற்கு குளிர் இல்லை. அதனால் தொடர்ந்து வெப்பத்தை தருகிற கனப்பு அடுப்புகளை உருவாக்கினாங்க. ஆனால் அதில் நிறைய புகை உருவாகும். அந்த காலத்துல புகையில்லா அடுப்பு வரவில்லை. ஆனந்திக்கு அது ஒத்துக்கொள்ளாமல் போய் சுவாசக் கோளாறு ஏற்பட்டுவிட்டது. அது மெல்ல மெல்ல  காச நோயாக மாறிவிட்டது. அப்பொழுது காசநோயை முற்றிலுமாக குணப்படுத்த  மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால்தான் டாக்டர் ஆனந்தியை காப்பாற்ற முடியவில்லை.

ஆனால் ஆனந்திக்கு ஒரு கனவு இருந்தது. அவுங்க ஒரு மருத்துவராக வேண்டுமென்றுதான் அமெரிக்கா சென்றாங்க ! ஆனால் இந்தியாவிற்கு திரும்பி வந்தபோது ஒரு மருத்துவக்கல்லூரியையே இந்தியாவில் உருவாக்க  வேண்டும் என்ற கனவோடு இருந்தாங்க! இதுதான் படிப்போட சக்தி !அவுங்க கனவு இந்தியாவில்  நிறைவேறிவிட்டது. என்ன மாணவர்களே! இந்த திரைப்படம் எவ்வளவு முக்கியமானது என்பது புரிகிறதா! என்று மாணவர்களை ஆர்வமாக பார்த்தார் தலைமை ஆசிரியர்.

மாணவர்கள் மகிழ்வோடு  என்று கையை உயர்த்தி அசைத்தார்கள்.

தலைமை ஆசிரியர் உள்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் பெருமையாக இருந்தது. இதுபோன்ற நல்ல திரைப்படங்களை அடிக்கடி திரையிட வேண்டுமென தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

திரையிடல் நிறைவுபெற்றதாக அனைவருக்கும் நன்றிகூறி ஆசிரியர் பச்சையம்மாளுக்கு முடித்து வைத்தார். மறக்காமல் ஆனந்தியையும் கோபாலையும் அழைத்து பேசினார். உங்களின்  பெயரை இணைத்து பேசியதால் எவ்வளவு நன்மை பாருங்கள் என்றார் பச்சையம்மாள்.

  நாங்கள் நிச்சயம் மருத்துவராகி நாட்டிற்கு நன்மைச் செய்வோம்  என்றபடியே ஆசிரியரை வணங்கி விடைபெற்றனர்.

பச்சையம்மாள் நாதன் ஆசிரியரை நோக்கிச் சென்றார். நாதன் ஆசிரியரும் நெகிழ்வோடு நின்றுகொண்டிருந்தார். சார் எனக்கு இந்த நிகழ்வு ரொம்ம்ப புதுசுசார்! என்னால நம்பவேமுடியவில்லை சார். ஏன் தலைமை ஆசிரியர் ஆனந்தி கோபால் என்ற பெயரை இணைத்தே சொன்னாருன்னு இப்பதான் புரியுது சார்! ஆனந்தி என்கிற இந்த சின்ன பெண்ணிடம் இவ்வளவு பெரிய மேதமை துணிச்சல் எப்படி சார்! அந்த கோபால் கோபால் கோஷியும் சாதாரண மனிதர் இல்லைசார். அவரோட மிடுக்கும் நடையும் ரௌத்தரமான பேச்சும் வேகமும்  எப்படி இருந்தது பார்த்தீங்களா சார் ! படம் முழுக்க அப்படியே நம்ம பாரதியாரை பார்த்த மாதிரி இருந்தது சார். அந்த படத்தோட இயக்குனரை வெகுவாக பாராட்டலாம் சார். அப்படியே அந்த காலகட்டத்தை படம் பிடித்துவிட்டார் இல்லையா  சார்! என்று படபடவென்று கொட்டித் தீர்த்தார் பச்சையம்மாள்.

 

            அதே உணர்வுதான் எனக்கும்!  ஆனா நீங்க பாரதியார் மாதிரி சொன்னீங்களே! அதிலே ஏம் மனசு அப்படியே நிக்குது. அப்ப அப்ப பாரதியார்கள் வந்துகொண்டே இருக்க வேண்டும் பச்சையம்மாள்! என்று நாதன் ஆசிரியர் சொல்ல சொல்ல பச்சையம்மாளுக்குள் ஒரு கம்பீரம் வந்து அமர்ந்து கொண்டது.

 இருவரும் நம்பிக்கையோடு நடைபோட்டார்கள்.

                                                                                          -புதுச்சேரி அன்பழகன்

Anandi Gopal is a 2019 Marathi biography drama movie starring Lalit Prabhakar and Bhagyashree Milind.you may see this picture in utube channel by searching “anandigopalkoshi:

 

 

 

 

 

 

 

 

 



 

 

Comments

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ்

  இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ் ---- புதுச்சேரி அன்பழகன்.          " டாக்டர் யெல்லபிரகட சுப்பாராவ்   என்ற இந்திய விஞ்ஞானி வாழ்ந்ததால் இன்று உலக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று அவரைப்பற்றி நன்கு அறிந்த அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். மருத்துவ உலகிற்கு பல கண்டுபிடிப்புகளையும் பல முன்னெடுப்புகளையும் வழங்கிய அதிசய மனிதர் என்றும் அவர் போற்றப்படுகிறார்.. ஆனாலும் அவரைப்பற்றி   அதிகமாக நாம் கேள்விப்பட்டிருக்க   வாய்ப்பில்லை.         ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரம் என்ற ஊரில் ஒரு ஏழை தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் 1895-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள்   யெல்லபிரகட சுப்பாராவ்   பிறந்தார். தற்போதைய கோவிட்-19 தொற்று போல அன்றைக்கு பிளேக் என்ற தொற்று நோய் பரவியதால் இவரின் தந்தை காலமானார். தன் தந்தையின் இழப்பை சுப்பாராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார்.     தந்தையின் வருமானம் இல்லாமல் குடும்பம் தவித்...

உலகத்தைப் படைத்தது யாரு?

நா ளை எவ்வாறு பாடத்தை எளிமையாக நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதுவும் உலகம் தோன்றியது எப்படி என்பதை நான் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். உலகம் தோன்றியது எப்படி என்று நான் சொல்லத்தொடங்கும் முன் , அது முன்பே படைக்கப்பட்டுவிட்டது என்ற பதில்தானே உடனே வரும்!?. அப்பொழுதுதான் என் மகள் ஓடி வந்து எனது சிந்தனையைக் கலைத்தாள். அப்பா! அப்பா! எங்கள் ஆசிரியர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க , பாடட்டுமா? என ஆவலோடு கேட்டாள். சரி! பாடு கேட்கலாம் என்றேன். உடனே அவள், நான்பாடும்போது நீங்களும் பாடனும்பா! என்றாள். நான் சரி என்று சொல்வதற்குள் அம்மாவும் அக்காவும் கூட பாடனுமென்றாள். அவர்கள் தயாராவதற்குள் பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டாள். அனைவரும் என்னோடு சேர்ந்து பாடவேண்டுமென சொல்லியபடியே பாடத்தொடங்கிவிட்டாள். “சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! அழகாக படைத்தது யாரு! அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமா பாடிகிட்டு அழகாக படைத்தது ...