Skip to main content

புதிய வைரஸ்

புதிய வைரஸ்

   மாணவன் நீலனை உடனே பார்த்து பேச வேண்டுமென ஆவலாய் இருந்தார் ஆசிரியர். அவனின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்கிறார். அவர் உடனே இந்தியாவிற்கு திரும்பி வருகிறார் என்று ஆசிரியர் கேள்வி பட்டார். தற்போது அவர் வேலை செய்யும் நாட்டில் புதியதாக ஒரு வைரஸ் நோய் (கொரொனா வைரஸ்) உருவாகி பரவி வருவதாக செய்தித் தாளில் படித்தார். அவர் நலமுடன் திரும்பி வந்தவுடன் அவரிடத்தில் அந்த புதிய வைரஸ் குறித்து பேச ஆவலாய் இருந்தார். இதோ மாணவன் நீலனே வந்து விட்டான். ஆசிரியர் அவனை அன்புடன் வரவேற்றார். மதியம் உணவு இடைவேளையில் வந்து சந்திக்குமாறு அவனை வேண்டினார். அவனும் வருவதாக அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு வகுப்பிற்கு சென்று விட்டான்.

     மதிய உணவு இடைவேளையில் ஆசிரியர் அந்த புதிய வைரஸ் குறித்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்..

     அந்த நாடு தம் மக்களைக் காப்பாற்ற எடுக்கும் நடவடிக்கைகளை கவனித்து வருகிறார். மக்களிடையே இந்த புதிய வைரஸ் நோய் விரைவாக பரவாமல் இருக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதிலும் மேற்கொண்டு இந்நோய் பரவாமல் இருக்க, புதியதாக ஆயிரம் படுக்கை வசதிகளோடு கொண்ட பெரிய மருத்துவமனையை சில நாட்களில் உருவாக்கிட அந்த நாடு பெரும் முயற்சி எடுப்பதை நினைத்து பெருமை பட்டார். இந்த மனிதர்களின் உலகத்தை கண்ணுக் தெரியாத  சிறிய நுண்ணுயிர்களின் உலகம் அச்சுறுத்த முயல்வதை எண்ணிப்பார்த்தார். இந்த அறிவியல் முன்னேற்றம் இல்லாவிட்டால் நம்மால் என்ன செய்ய முடியும். இப்படித்தான் அந்த காலத்தில் மனிதர்கள் ஏன் சாகிறோம் என்று தெரியாமலே பல இலட்ச கணக்கில் இறந்து போனார்கள்.

     அப்பொழுதுதான் மாணவன் நீலன் வந்து மதிய வணக்கம் சார் என்றான்! வா! நீலா! வா! என்றபடியே ஆசிரியர் தனது சிந்தனையில் இருந்து இயல்புக்கு வந்தார்.

      அப்பா நலமாக இருக்கிறாரா? என்றார் ஆசிரியர்.

      வைரஸ் பாதிப்பின் தாக்கம் ஏதாவது இருக்கிறதா! என்பதைத் தகுந்த சோதனையின் மூலம் நன்கு பரிசோதிக்க ஆய்வகதிற்கு அனுப்பபட்டுள்ளது.தற்போது அப்பா அரசு கண்காணிப்பில் உள்ளார். 

     இதற்கெல்லாம் மருந்தே கிடையாதா சார்! என்றான் நீலன்.

      பாக்டீரியா கிருமிகள் ஆன்டிபயாட்டிகளுக்கு கட்டுப்படுவது போல  வைரஸ் நோய்கள் பெரும்பாலும்  கட்டுபடுவதில்லை. நமது நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருக்கும் போது அதன் தாக்கம் தெரிவதில்லை. புதிய வைரஸ்கள் உருவாகும் போது உடனடியாக அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது மிகச் சிரமமான காரியமாகும். நாம் உருவாக்கும் ஆண்டிபயாடிக் மருந்துகள் வைரஸ்களின் உற்பத்தியைக் குறைக்கவும் வேகமாக பரவுவதைத் தடுக்கவும் மட்டுமே பயன்படுகிறது.

     உடனடியாக புதிய வைரஸை எதிர்கொள்ளக்கூடிய  மருந்தை கண்டுபிடிக்கும் வரை நாமும் நமது அரசாங்கமும் இந்த கொடுமையான வைரஸ் நோய் பரவாமல் இருக்க இந்த சூழ்நிலையைச் சரியாக புரிந்து கொண்டு இருவருமே விரைந்து தற்காப்பு நடவடிக்கைகளில் செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் உடனடியாக மனித உயிர்களின் அழிவைத் தடுக்க முடியும் என்றார் ஆசிரியர்.

     நீலனால் ஆசிரியர் சொல்வதை புரிந்து கொள்ள முடிந்தது. இருந்தாலும் அவனுக்குள் இன்னும் கேட்க கேள்விகள் இருந்தன. அவன் முகத்தில் மகிழ்ச்சியை ஆசிரியரால் பார்க்க முடியவில்லை.

     என்ன நீலா! இன்னும் கேள்விகள் இருக்கிறதா என்றார் ஆசிரியர்.

ஆமாம் அய்யா! என்றபடியே “புது புது வைரஸ்கள் ஏன் சார் உருவாக வேண்டும்? எந்த புதிய வைரஸ்ஸாக இருந்தாலும் அதற்கான எதிர்ப்பாற்றலை கொண்டவராக மனித இனத்தை மாற்ற முடியாத சார்! என்றான் நீலன்.

     இப்படி ஒரு கேள்வி வருமென்று ஆசிரியர் எதிர் பார்க்கவில்லை. இதற்கான சரியான அறிவியல் பதிலை அவர் தேடியாக வேண்டும்.

     நீலா! நீ  சரியான கேள்வியைக் கேட்டு விட்டாய். அதற்கு நாம் விரிவான அறிவியல் பதிலைத் தேடியாக வேண்டும்.

     சரி! நாளை நாம் மீண்டும் விவாதிக்கலாம்! என்றபடியே நீலனிடம் விடைபெற்று அடுத்த வகுப்பிற்குச் சென்று விட்டார் ஆசிரியர்.

     ஆசிரியர் வீட்டிற்கு வந்து விட்டாலும் மாணவன் கேட்ட கேள்வியே மனதில் மீண்டும் மீண்டும் வந்து போனது.

     அன்றைய செய்தித் தாளை மீண்டும் ஒரு முறை படித்தார். கொரொனா வைரஸ் குறித்தச் செய்திகள் வந்திருந்தாலும், கொரொனா வைரஸ் குறித்த  அறிவியல் செய்திகள் மிகச் சுருக்கமாக இடம்பெற்று இருந்தன. எவ்வாறு திடீரென்று வைரஸ்கள் உருவாகி அழிவை ஏற்படுத்துகின்றன? என்பதற்கான விரிவான விடைகளை தேட வேண்டுமென மனதில் உறுதி எடுத்துக்கொண்டார் ஆசிரியர்.

     அன்று மாலை அவர் அன்பாக வளர்த்து வரும் பசுமாடு தீனி எடுக்க வில்லை  என்று அவரின் மனைவி வந்து தெரிவித்தார்.

சரி! நான் வந்து பார்க்கிறேன்! என்றார் ஆசிரியர்.

     ஆசிரியர் மாட்டுத் தொழுவத்திற்கு சென்று பார்வையிட்டார். பசுவின் வயிறு சற்றுப் பெருத்திருந்தது. சரியாக செரிக்காமல் இருப்பதைப் புரிந்து கொண்டார். உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தொலைபேசி வழியாக தகவல் தெரிவித்தார். அவர் வந்து பரிசோதித்து உள்ளுக்கு மருந்து கொடுத்தார்.

     அவர் மிகச் சிறந்த கால்நடை மருத்துவர். தகவல் கொடுத்தால் எந்த வேலை இருந்தாலும் உடனே ஓடி வந்திடுவார். கால்நடைகளின் மீது பாசம் கொண்டவர். அவைகளின் ஒவ்வொரு அசைவையும் மிக உன்னிப்பாக கவனித்து மருத்துவம் செய்வார். கால்நடைகளை மட்டுமல்ல அதன் தொழுவமும் மிகச் சுத்தமாக இருக்க வேண்டுமென வலியுறுத்திக்கொண்டே இருப்பார். குறிப்பாக குளிர்காலத்தில் பல்வேறு தொற்று நோய்கள் உருவாக வாய்ப்பு உண்டு என்பதால் , விடாமல் அனைவரிடமும் பேசிக்கொண்டே இருப்பார்.

     மருத்துவருக்கு ஆசிரியர் நன்றி தெரிவித்துவிட்டு, அவரை தேநீர் அருந்த சற்று நேரம் அமரும்படிக் கேட்டுக்கொண்டார். அவரிடம் மெல்ல கொரொனா வைரஸ் குறித்து பேச்சை ஆரம்பித்தார். தனது மாணவன் எழுப்பிய கேள்வியை அவரிடம் பகிர்ந்து கொண்டார். இந்த வைரஸ்கள் திடீரென தோன்றி ஏன்சார் மனித குலத்தை அச்சுறுத்துகின்றன? என்றார் ஆசிரியர்.

     இப்படி ஒரு நல்ல கேள்வி கேட்ட உங்கள் மாணவனை நான் மனதார பாராட்டுகிறேன். இதற்கு பதில் வேண்டுமென்றால் முதலில் அறிவியல் விளக்கத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இதை நாம் விரிவாக புரிந்துகொண்டு செயல் பட முடியும்.

     “இரண்டு வெவ்வேறு வைரஸ்கள், அதாவது ஒன்று பறவையினுடையதாகவோ இன்னொன்று விலங்கினுடையதாகவோ இருக்கலாம். இந்த இருவேறு வைரஸ்கள் ஒரே நேரத்தில் ஒரு உயிரினத்தின் ஒரு செல்லில் மட்டும் உட்புகுந்து விடும். இது போன்ற ஒரு அரிய நிகழ்வு எப்பொழுதாவதுதான் ஏற்படும். இந்த நிகழ்வின் விளைவாக இந்த இரண்டு வெவ்வேறு வைரஸ்களின் மரபணுக்கள் அதாவது டி‌என்‌ஏ அல்லது ஆர்‌என்‌ஏ ஒரே நேரத்தில் இணைந்து ஒரு புதிய மரபணுவோடு ஒரு புதிய வைரஸ் பிறந்துவிடுகிறது. இந்த புதிய வைரஸ் அந்த உயிரினத்தில் பல்கி பெருக ஆரம்பித்து விடுகிறது. இந்த வைரஸ்களை அந்த உயிரனம் எதிர்த்து போராட்டவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது. அந்த உயிரினத்தின் எதிர்ப்பாற்றலும் அதன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக வலிமையாக தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருந்தால் அந்த உயிரினம் பாதுகாப்பாக இருக்கும். இல்லையென்றால் அந்த வைரசின் தாக்கத்தால் அந்த உயிரனம் அழிய நேரிடலாம்” என்ற ஒரு எளிய விளக்கத்தை மருத்துவர் அழகாக ஆசிரியரிடம் எடுத்துரைத்தார்.

     மரபணுச் சிதைவால் எவ்வாறு ஒரு புதிய வைரஸ் உருவாகிறது என்பதை மருத்துவர் அழகாக எடுத்துரைத்ததை ஆசிரியர் உள்வாங்கிக்கொண்டார். இதை எளிமையாக எடுத்து சொல்ல மனதில் பதிய வைத்துக்கொண்டார். இன்னும் மருத்துவர் பேசட்டுமென ஆவலோடு மருத்துவரை புன்னகையோடு பார்த்தார். மருத்துவர் புரிந்துகொண்டு மேலும் பேச ஆரம்பித்தார்.

     இப்படி ஒரு மரபணுச் சிதைவிற்கான சூழ்நிலை மிக முக்கியமானதாகும். அதாவது எங்கு விலங்குகள், பறவைகள் வாழிடம் நெருக்கமானதாக இருக்கிறதோ, அதேநேரத்தில் அதன் கழிவுகள் அதிகம் சேருமிடத்தில் இந்த வைரஸ்கள் உருவாகின்றன. அதேபோல் காய்கறி மற்றும் இதர மாமிசக் கழிவுகள் சந்தையில் வீணாவதை சுகாதாரமான  முறையில் அப்புறப்படுத்தாமல் இருக்கும்போது அங்கே வைரஸ்கள் அதிகம் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. குளிர்காலங்களில் மிகக் குறைந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அதிகமிருக்கும் சூழ்நிலைகளில் வைரஸ்கள் பல்கி பெருக ஏதுவாகிறது. மிக முக்கியமாக சுகாதாரமற்ற சூழ்நிலைகள் நோய் பெருக ஏதுவாகின்றன. எலிகளின் வழியே பரவிய பிளேக் நோய், பன்றிகளின் வழியே பரவிய எச்‌ஐ‌வி , பறவைகளின் வழியே பரவிய பறவைக்காய்ச்சல் போன்றவற்றைச் சொல்லலாம். அதேநேரத்தில் மனிதர்களின்  ஆரோக்கிய நிலை மிக மோசமாக இருப்பதும் இந்நோய் மனிதர்களைத் தாக்க எதுவாகிறது. எனவே பொது சுகாதாரம் என்பது மிக முக்கியமானதாகும். தனிநபர் சுத்தம் என்பதும் மிக மிக முக்கியமானதாகும்” என்றார் ஆசிரியர் சொல்லிக்கொண்டே வந்தார்.

     அதற்குள் ஆசிரியரின் மனைவி சூடாக தேநீரோடு வந்ததுவிட்டார்.

     சூடாக தேநீர் அருந்திவிட்டு பிறகு நாம் விவாதிக்கலாம் ஐயா! என்றார் ஆசிரியர்.

     சிறிது நேரத்தில் மருத்துவரும் ஆசிரியரும் தேநீரை அருந்திவிட்டு மீண்டும் விவாதிக்க தயாரானார்கள்.

     மாணவன் எழுப்பிய  முதல் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. எந்த புதிய வைரஸ் வந்தாலும் அதற்கான எதிர்ப்பாற்றலை கொண்டவராக மனித இனத்தை மாற்ற முடியாத சார்?! என்று மாணவன் எழுப்பிய இரண்டாவது கேள்வியை ஆசிரியர் மருத்துவருக்கு ஞாபகப்டுத்தினார். 

     இதற்கு நாம் விடைகாண வேண்டுமென்றால் வைரஸ் நோய்களின் தாக்கத்தை அதன் வரலாற்றை நாம் ஆராய வேண்டும். கொடும் பஞ்சத்தால் இறந்தவர்களைவிட இந்த வைரஸ் நோய்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். எர்சினிய பெட்டிஸ் என்ற ஒரு வைரஸ், தெள்ளுப்பூச்சிகள் போன்றவை எலி வழியாக மனிதனுக்கு பரவியதால் கோடிக்கணக்கான மக்கள் இறந்து போனார்கள். பெரியம்மை, சளிக்காய்ச்சல், தட்டம்மை போன்ற தொற்று நோய்கள் அடுத்தடுத்து தோன்றி மீண்டும் கோடிக்கணக்கான மக்களை அழித்தொழித்தது. அதன் பிறகு “ஸ்பானிய காய்ச்சல்” என்ற கொள்ளைநோய் பரவி இலட்சக்கணக்கான மக்களை தாக்கி அழித்தது.    

     “பெரியம்மை” என்னும் கொள்ளை நோய்தான் தொடர் அறிவியல் ஆராய்ச்சியின் விளைவாக முழுமையாக ஒழிக்கப்பட்டதாகும். சார்ஸ், பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்ற கொள்ளை நோய்களை நாம் ஓரளவிற்கு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளோம். அதாவது மனிதர்களின் இறப்பு விகிதத்தை முந்தய மனித இழப்போடு ஒப்பிட்டால் இது மிகவும் குறைவாகும்.

     எய்ட்ஸ் போன்ற நோய்களை எதிர்கொண்டது மிக சவாலானதாகும். ஏனெனில் எய்ட்ஸ் நோயின் நச்சுயிரியின் தாக்கத்தை உடனடியாக அறிந்துகொள்ள முடியாததால், அது மனிதனின் நோய்எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்குவதை அறிவதற்கு காலதாமதமானது. இந்த நச்சுயிரியை கண்டுபிடித்த பிறகே அது எப்படி பரவியது என்பதை புரிந்துகொண்டு அதன் வேகத்தை தடுக்க முடிந்தது. இதை அறிந்த பிறகே இந்நோயை நாம் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிந்துள்ளது.

     இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன வென்றால் அறிவியல் உலகம் வெகுவாக முன்னேறி உள்ளது. வைரஸ்களின் வேகத்திற்கு இணையாக அறிவியல் உலகமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மனித இழப்பு என்பது வெகுவாக குறைந்துள்ளது. அதாவது முந்தய ஆண்டுகளில்  மனித இழப்பு என்பது உலக அளவில் கோடிக்கணக்கில் இருந்தது. தற்போதய நாட்களில் இது  ஆயிரக்கணக்கில் மட்டுமே என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

     தற்போது நேனோ ரோபாடிக்ஸ் முறையை பயன்படுத்தி நமது இரத்த ஓட்டத்தின் வழியே நோய் கிருமிகளைக் கண்டுபிடித்து அவற்றை அழிக்கமுடியும் என்ற நிலை உருவாகி வருகிறது. எனவே புதிய வைரஸ் தோன்றினால் நம்மால் கட்டுப்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையை அறிவியல் உலகம் நமக்கு வழங்கி கொண்டே இருக்கிறது. இந்த வாய்ப்பை உலகம் சரியாக பயன்படுத்திக்கொண்டால் நாம் இதுபோன்ற திடீர் நோய்தாக்குதலில் எளிதாக தப்பித்துக்கொள்ளலாம்! என்ற தனது விளக்கத்தை அழகாக எடுத்து வைத்தார் கால்நடை மருத்துவர்.

     ஆசிரியருக்கு தனது மாணவன் எழுப்பிய கேள்விக்கு நம்பிக்கையான விடை கிடைத்ததை எண்ணி அக மகிழ்ந்தார்.

     அதே நேரத்தில் பொது சுகாதாரம் என்பது மனித இனத்தை பாதுகாக்கிற மிக முக்கிய பணி என்பதை ஆசிரியர் உணர்ந்து கொண்டார். அது கண்டிப்பாக சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய முன் தேவையை உலகத்தின் முன் வைப்பதை எண்ணிப்  பார்த்தார். முக்கியமாக உணவு தேவைக்காக்க உள்ள சந்தைப் பகுதிகளின் கழிவுகளை பாதுகாப்பாக சுத்தப்படுத்த வேண்டியதின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து திட்டமிட்ட வேண்டும். மேலும் இந்த திடீர் நோய் பரவலை தடுக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு நாடும் தனது சுகாதாரத்துக்கான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியே தீர வேண்டும் என்ற நிலை உருவாகிவருகிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நாடும் தனது அண்டை நாடுகளுடனும் சுகாதார பாதுகாப்பு வளையத்தையும் உருவாக்கியே தீரவேண்டும் என்ற முன் நிபந்தனையும் முன்னுக்கு வந்துள்ளதையும் ஆசிரியர் மருத்துவரோடு பகிர்ந்துகொண்டார்.

     உலகம் ஒன்றிணைந்தால் சுகாதாரம் அனைவருக்குமானதாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதாக நாம் புரிந்து செயல்பட வேண்டுமென என்று மருத்துவரும் ஆசிரியரின் கருத்தை ஆமோதித்தார்..

     ஆசிரியருக்கு இப்பொழுதுதான் தெம்பு வந்தது போல இருந்தது. நீலனுக்கு மட்டுமல்ல அனைத்து மாணவர்களுக்கு இதை உடனே விளக்க வேண்டுமென முடிவெடுத்து விட்டார் ஆசிரியர்.

     மருத்துவருக்கு நன்றி தெரிவித்தார்.

     உங்களோடு பயனுள்ள கருத்துகளை பகிர்ந்துகொண்டதில் எனக்கும் மகிழ்ச்சிதான் என்றார் மருத்துவர் .

     ஆசிரியர் அன்போடு கைகுலுக்கி மருத்துவரை  பத்திரமாக அனுப்பி வைத்தார்.

           ஆசிரியர் அடுத்தநாள் வகுப்பிற்கு மிக உற்சாகத்தோடு சென்றார். அப்பொழுது கொரொனா வைரஸ் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் ஒன்றை நடத்த வேண்டுமென  தலைமை ஆசிரியர் சக ஆசிரியருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

     மிக உற்சாகத்தோடு தலைமை  ஆசிரியரின் கையைக் குலுக்கிப் பாராட்டு தெரிவித்தார் ஆசிரியர். இந்த பொன்னான வாய்ப்புகாகத்தான் ஆசிரியர் காத்திருந்தார். இந்த முகாமை தானே தலைமையேற்று நடத்துவதாக தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார். அவரும் அக மகிழ்ந்து சிறப்பாக நடத்துங்கள் என்றார். ஆசிரியரும் இந்த முகாமை எவ்வாறு மிகச் சிறப்பாக நடத்துவது என்று  இப்பொழுதே திட்டமிட்ட தொடங்கி விட்டார்.


Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை

மாணவர்கள் கொண்டாடிய அறிவியல் விழா!

             காலை இறைவணக்கத்தை முறைப்படி செலுத்துவதற்காக மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் வரிசையாக நிற்கத் தொடங்கினார்கள். ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களை ஒழுங்கு படித்தியபடியே மேடைக்கு வந்தார்கள். சற்று நேரத்தில் பள்ளியின் முதல்வரும் மேடைக்கு அருகில் வரவும்,, மாணவர்களிடையே சப்தம் படிப்படியாக குறைந்து அமைதி நிலவியது. மாணவத் தலைவர் இறைவணக்கத்தை ஆரம்பித்து வைக்க, மாணவர்கள் ஒரே குரலில் பாடி முடித்தார்கள். சில முக்கியச் செய்திகள் மற்றும் அறிவிப்புகளோடு அன்றைய இறைவணக்க நிகழ்வு முடிவுக்கு வந்தது. மாணவர்கள் தத்தம் வகுப்பிற்குச் செல்லத் தொடங்கினார்கள். மைதானம் வெற்றிடமாக மாறியது. சிறிது நேரத்தில் மீண்டும் சில மாணவர்கள் மைதானத்தை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்களுக்குள் பேசிக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக ஓடினார்கள். பள்ளி முதல்வர் தொடங்கி ஆசிரியர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏன் சில மாணவர்கள் மட்டும் மீண்டும் ஏதோ அணிவகுப்பு நடத்த முயற்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை!. மீண்டும் மைதானத்தில் ஓடிய மாணவர்கள் ஏதோ ஒரு ஒழுங்கிற்கு வந்தது போல தெரிந்தது. குறுக்கும் நெடுக்குமாக ஒரு அட்

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது.