Skip to main content

கண்ணப்பன் கேட்ட கேள்வி!?

        

    அன்றைய பாடத்தை வழக்கமாக நடத்தி முடித்தாலும் வகுப்பறையில் மாணவன் கண்ணப்பன் இல்லாதது அவருக்கு வெறுமையாக தோன்றியது.    சக மாணவர்களை அழைத்து விசாரித்தார். இன்றைக்கு கண்ணப்பன் ஏன் வரவில்லை என்றார்?!

     “ சார்! அதை ஏன்சார் கேட்கறீங்க! அவன் மீண்டும் கிரிக்கெட் பார்த்து பரவசப்பட்டுப் போய் கைதட்டி, மீண்டும் விழுந்து விட்டான் சார்! அதனால் ஏற்கனவே இடது முழங்கால் எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டிருந்தது அல்லவா! அந்த இடத்திலேயே  மீண்டும் முறிவு ஏற்பட்டுள்ளது சார்! இதனால் தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் சார்!” என்றனர் மாணவர்கள்.

     சரி நீங்க வகுப்புக்கு போங்க,  நான் போய் கண்ணப்பணைப் பார்க்கிறேன் என்றார் ஆசிரியர்.

     ஆசிரியருக்கு கண்ணப்பன் ஞாபகமே வந்து வந்து போனது. கண்ணப்பன் நன்றாக படிக்கக்கூடியவன். அவன் அறிவியல் ரீதியாக கேள்வி கேட்பதிலும் வல்லவன். அதே நேரத்தில் விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவன். குறிப்பாக கிரிக்கட்டில் அவன் சாதிக்க வேண்டுமென துடிப்பவன். அவன் ரப்பர் பந்தில் விளையாடும் போதே அவனது திறமையைக் கண்டுகொண்டார் உடற்பயிற்சி ஆசிரியர். அவனுக்கு கிரிக்கெட் பாலில் பயிற்சிக்கொடுத்து தற்போதுதான் கிரிக்கெட் குழுவில் சேர்த்திருந்தார். அதற்குள்ளாக காலில் அடிபட்டு விட்டது! அவனைப்பார்த்தே ஆகவேண்டுமென முடிவு செய்துவிட்டார் ஆசிரியர்.

     மறுநாள் மாலையில் மருத்துவமனைக்கு சென்றார். கண்ணப்பணைப் பார்த்து நலம் விசாரித்தார். அவனின் முழங்காலில் பிளேட் வைத்து அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகு நடப்பதற்கு பயிற்சி கொடுப்பார்கள். அதன்பிறகு அவனால் இயல்பாக நடக்கமுடியும் என்றனர் அவனது உறவினர்கள்.

     . விரைவில் நீ நலம்பெற்று பள்ளிக்கு வருவாய் ! தைரியமாக இரு! உனது படிப்புக்கு வேண்டியதெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றார் ஆசிரியர்!

     கண்ணப்பனுக்கு அப்பொழுதான் நம்பிக்கை வந்தது போல ஆசிரியரைப் பார்த்தான். மெல்ல புன்னகை எட்டிப்பார்தது.

      நான் மீண்டும் பழையபடி விளையாடலாமா சார்! என்றான். கவலைப்படாதே நீ எப்பொழுதும் போல விளையாடலாம்.ஆனால் மருத்துவர் சொல்வதை சரியாக கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இதில் எப்பொழுதும் போல விளையாட்டுத் தனமாக இருக்கக் கூடாது என்றார் ஆசிரியர்.

கண்ணப்பன் சரிசார்! என்று தலையாட்டினான்.

     கண்ணப்பன் மெல்ல தலையணையை சரி செய்தபடியே சாய்ந்து உட்கார்ந்தான். சார்! எனக்கு ஒரு சந்தேகம் என்றான்!. எதுவாக இருந்தாலும் தயங்காம சொல்லு என்றார் ஆசிரியர்.

     சார்! நம்ம மாதவனுக்கு இரும்பு தகடில் தவறாக விழுந்து காலில் கிழித்துக்கொண்டான் அல்லவா! அப்பொழுது உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஏதோ ஊசி போட்டதா சொன்னீங்களே சார்! ஞாபகம் இருக்கா சார்! என்றான் கண்ணப்பன். ஆமாம் அதற்கு என்ன! என்றார் ஆசிரியர்.

     இரும்பு போன்ற பொருட்களை நம்ம உடம்பு ஏற்றுக்கொள்ளாது என்று சொன்னீங்களே சார்! இப்ப என்னோட காலுக்குள்ள எப்படி சார் பிளேட் வைச்சாங்க! அதை எப்படி என்னோட உடம்பு ஏற்றுக் கொள்ளும் சார்! நாளைக்கு ஏதாவது எனக்கு பிரச்சனை வருமா சார்! என்றான் கண்ணப்பன்

     மிகச் சரியான கேள்வியைக் கேட்டுவிட்டான் கண்ணப்பன். இவனுக்கு எப்படி பதில் சொல்வது என்று ஆசிரியர் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்.

     இதையெல்லாம் மருத்துவ உலகம் ஆய்வு செய்யாமல் இருக்குமா? கவலைப்படாதே! நமது உடம்பு ஏற்றுக்கொள்ளும் ஏதோ ஒரு தனிமத்தில் செய்த பிளேட்டைத்தான் உனக்கு  வைத்திருப்பார்கள். அதனால் உனக்கு எதிர்காலத்தில் ஒன்றும் ஆகாது. நீ உடனடியாக நலம்பெற்று பள்ளிக்கு வா! அப்புறம் இதைப்பற்றி நாம் விவாதிக்கலாம் என்றார் ஆசிரியர்.

     கண்ணப்பனும் சரி சார் என்று நம்பிக்கையோடு தலையாட்டினான்!

     ஆசிரியர் விடைபெற்று வீடு வந்து சேர்ந்தாலும் கண்ணப்பன் கேட்டகேள்வியே அவர் மனதில் வந்து வந்து போனது.ஆசிரியர் அறிவியல் ரீதியான பதிலை இப்பவே தேட ஆரம்பித்து விட்டார்.

     ஒருநாள் மாலை மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைக்குச் சென்றார். தன்னை அறிமுகம் செய்துகொண்டு அந்த விற்பனை பிரதிநிதியிடம் தனது மாணவன் எழுப்பிய கேள்வியைப் பகிர்ந்துகொண்டார்.

     அந்த விற்பனை பிரதிநிதி ஆசிரியரை ஆச்சரியமாக பார்த்தார். இப்படிப்பட்ட ஆசிரியர்கள் இருந்துவிட்டால் மாணவ சமுதாயம் நன்றாக சிந்திக்க ஆரம்பிதுவிடும். பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு கூட இது திறவுகோலாக அமையும். உங்கள் முயற்சித் தொடரட்டும் என்று ஆசிரியரை வாழ்த்தியபடியே பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

     பொதுவாக மருத்துவ உபகரணங்கள் பெரும்பாலும் துருப்பிடிக்காத உயர்ந்த தரத்தினால் ஆன உருக்கு இரும்பினால் செய்யப்படுபவை. மேலும் டைட்டானியம், டாண்டாலம், பிளாட்டினம் மற்றும் பலாடியம் போன்ற தனிமங்களிலிருந்தும் செய்யப்படுகின்றன. இவை பெரும்பாலும் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்காதவை என்று  எடுத்துக் கூறினார் மருத்துவ பிரதிநிதி.    

           மருத்துவபிரதிநிதியிடம் கலந்துரையாடிவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார் ஆசிரியர். கண்ணப்பன் எழுப்பிய கேள்விக்கு ஏதோ கொஞ்சம் பதில் கிடைத்தாலும் முழுமையான பதிலை எப்படி அடைவது என்பதிலேயே குறியாக இருந்தார் ஆசிரியர். அப்பொழுதுதான் அவர் வசிக்கும் தெருவிலேயே ஒரு வேதியியல் பேராசிரியர் இருப்பது ஞாபகத்திற்கு வந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை நிச்சயம் வீட்டிலிருப்பார். அவரைச் சென்று சந்திக்கலாம் என்று முடிவு செய்து, சற்று நேரத்தில் தயாராகி நடந்தே அவர் வீட்டிற்கு சென்று விட்டார் ஆசிரியர்.

     அழைப்பு மணியை அடித்ததும் பேராசிரியரே வந்து கதவைத் திறந்தார். ஆசிரியர் வணக்கம் சொன்னதும் பேராசிரியர் பதிலுக்கு வணக்கம் சொல்லியபடியே உள்ளே அழைத்துச் சென்று அமரவைத்தார்.

     சற்று நேரம் பொறுத்திருங்கள் தேநீரோடு வருகிறேன், பிறகு பேசலாம் என்றபடி பேராசிரியர் உள்ளே சென்று விட்டார்.

     அப்பொழுதுதான் ஆசிரியர் கவனித்தார். ஒரு அலமாரியில் நிறைய புத்தகங்கள் அழகாக அடுக்கு வைக்கப்பட்டிரிந்தது. அதில் சிறிய சிறிய புத்தகங்கள் அதிகமாக இருந்தன. அனைத்தும் குழந்தைகளுக்கான படக்கதைகளாக இருந்தன. அதுவும் மிகவும் பழமையான கதை புத்தகங்கள் கண்ணுக்கு விருந்தாக இருந்தது ஆசிரியருக்கு. உடனே எடுத்து படிக்க வேண்டுமென ஆவல் பிறந்தது. உடனே கிரேக்க நாட்டுக் கதை வரிசையிலிருந்தது ஒரு புத்தகத்தை வெளியில் எடுத்தார். அதில்
டாண்டாலம் என்ற பெயர் பெரியதாக அச்சிடப்பட்டிருந்தது.

      அந்த புத்தகத்தை எடுத்து சற்று நேரத்தில் படித்து முடித்து விட்டார். ஆசிரியருக்கு ஒரே வியப்பு! . அந்த கதையைப்பற்றிய சிந்தனையே மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

     டாண்டாலம் என்ற மன்னருக்கு ஏதோ ஒரு தவருக்காக தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அதாவது அவர் ஒரு குளத்தில் நிற்க வைக்கப்பட்டிருக்கிறார். மேலே மரக்கிளைகள் கொத்துக் கொத்தாக பழங்களோடு எட்டிப் பறிக்கும் தூரத்தில் உள்ளன. ஆனால் தாகத்திற்கு தண்ணீர் குடிக்க முயன்றால் தண்ணீர் தரை மட்டத்திற்கு கீழே போய்விடுகிறது.சரி பழங்கள் சாப்பிடலாம் என்று கையை மேலே உயர்தினால் பழக்கிளைகள் மேலே சென்று விடுகின்றன. இருந்தும் இல்லாத நிலை! என்ன செய்வார் அந்த மன்னர்! இத்தகைய  நிலையை என்னவென்று சொல்வது! நமது வாழ்க்கையிலும் இப்படி ஒரு நிலைமை வரலாம் என்பதை விளக்கத்தான் இந்த கதையா?இது தண்டனையாக தெரியவில்லை. வாழ்வின் விசித்திரங்களை விளக்க எழுதி இருப்பாங்களோ! என்று ஆசிரியர் சிந்தித்துக்கொண்டு இருக்கும்போது பேராசிரியர் தேநீரோடு வந்துவிட்டார்.

           ஆசிரியரின் கையில் இருந்த புத்தகத்தை பார்த்துவிட்டு,என்ன! டாண்டாலம் கதையா படித்தீர்கள்! என்றார் பேராசிரியர். ஆமாம்! விசித்திரமான கதையாக இருக்கிறது என்றார் ஆசிரியர்.

     இந்த புத்தகங்கள் நான் மட்டும் படிப்பதற்கு அல்ல, எனது பேரப்பிள்ளைகளும் ஆவலோடு எடுத்து படிக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய கற்பனை வளம்மிகுந்த மிகவும் பழமையான படக்கதைகளை வாங்கி வைத்துள்ளேன். அப்பொழுதுதான் புதிய சிந்தனைகள் பிள்ளைகளுக்கு தோன்றும் .வாழ்க்கையில் ஏற்படுகின்ற எதிர்பாராத பிரச்சனைகளை சமாளித்து வாழ பெரும் உதவியாக இருக்கும் என்றார் பேராசிரியர்.

     ஆசிரியருக்கு நாமும் இது போன்ற புத்தகங்களை வாங்க வேண்டுமென்ற ஆவல் பிறந்தது. உங்கள் பேச்சு எனக்கு உற்சாகத்தை தருகிறது சார் என்றார் ஆசிரியர்.

நல்லது! சரி நான் கதைக்கு வருகிறேன் என்று பேராசிரியர் மேலும் பேச ஆரம்பித்தார்.

     நான் வேதியியல் பேராசிரியர் இல்லையா! இந்த கதைக்கும் வேதியலுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்றார் பேராசிரியர். ஆசிரியருக்கு ஒரே ஆச்சரியம்! என்னஅது! சற்று விரிவாக சொல்ல முடியுமா? என்றார் ஆசிரியர்.

     டாண்டாலம் என்று ஒரு தனிமம் இருக்கிறது. அந்த தனிமத்தை கண்டு பிடித்த விஞ்ஞானி இந்த கதையில் வரும் டாண்டலஸ் கடவுளின் பெயரைத்தான் இதற்கு வைத்தார்.

     இந்தப் பெயரை ஏன் இந்த தனிமத்திற்கு வைத்தார்? என்றார் ஆசிரியர்.

     இந்த தனிமமும் டாண்டலஸ் போலத்தான். அமிலங்களோடு வினைபுரிய வேண்டுமென நினைக்கும் ஆனால் அதனால் வினைபுரிய முடியாது. மற்ற பொருட்களின் ஈரத்தன்மையை அதனால் ஈர்க்கவும் முடியாது. இதனால் அந்த விஞ்ஞானி இந்த டாண்டலஸின் பெயரை சரியாக வைத்தார் என்றார் பேராசிரியர்.

           அந்த விஞ்ஞானி ஒரு இலக்கியவாதியாக இருப்பாரோ என்றார் ஆசிரியர். ஆமாம் அவருக்கும் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்தான் என்றார் பேராசிரியர்

     இந்த டாண்டலஸால் மனிதர்களுக்கு ஏதாவது பயன் உண்டா சார்? என்றார் ஆசிரியர்.

     ஏன் இல்லை நிறைய பயன்கள் உண்டு. மிக முக்கியமான ஆச்சர்யமான ஒரு பயனை நான் சொல்லட்டுமா என்றார் பேராசிரியர்.

     தாராளமாக சொல்லுங்கள் என்றார் ஆசிரியர்.

     நமது உடல் சில தனிமங்களை ஏற்றுக்கொள்ளும்.ஆனால் முழுமையாக அல்ல.  ஆனால் டாண்டலஸை     பொறுத்தவரை கிட்டத்தட்ட நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை அனுசரித்து எதிர்வினை ஆற்றாமல் அமைதியாக நமது உடலில் அமர்ந்திருக்கும். இதனால் நமது உடலுக்கு ஒரு தீங்கும் இல்லை.

     நமது உடல் திரவத்தோடு அது எதிர்வினை புரியாது. இந்த பண்புதான் நாம் உடைந்துபோன எலும்புகளுக்கு பதிலாகவும் துணையாகவும் இந்த தனிமத்தால் செய்த பிளேட்டுகளை பயன்படுத்துகிறோம்.அந்தபிளேட்டில் சிறிய நுண் துளைகள் இட்டுவிட்டால் அதில் நமது உடல் திரவங்கள் ஊடுருவி சதையும் எலும்பும் இணைவதை போல இந்த பிளேட்டும் இணைந்துவிடும். அதாவது நமது இயற்கை எலும்பின் பண்புகள் என்னவோ அந்த நிலையை இந்த தனிமத்தால் செய்யப்பட்ட பிளேட்டுகள் அசல் எலும்புகள் போலவே செயல்படுகிறது. இதனால் அறுவை சிகிச்சை செய்த பிறகும் இந்த பிளேட்டுகளை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார் பேராசிரியர்.

     இது எவ்வளவு பெரிய செய்தி பார்த்தீர்களா! என்றார் ஆசிரியர்.

     இதுபோன்று மற்ற தனிமங்கள் உதவினாலும் இது கிட்டத்தட்ட 99% பாதிப்பிலாதது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இது மட்டுமல்ல அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் மருத்துவ உபகரணங்கள் இந்த தனிமத்தால் செய்யப்படுகின்றன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் இந்த தனிமத்தால் ஆன சிறுசிறு உபகரணகள் பெரும் உதவியை செய்கின்றன என்றார் பேராசிரியர்.

     ஆசிரியர் மிகவும் மகிழ்ச்சியாக இதைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஒரு பக்கம் மாணவன் கண்ணப்பன் கேட்ட கேள்விக்கு விடை கிடைத்தாலும் மனித குலத்திற்கு இந்த  மகத்தான கண்டுபிடிப்பை செய்த அந்த விஞ்ஞானியை நினைத்து பெருமை பட்டார். அவரின் அளப்பரிய உழைப்பைப் போற்றினார்.

     அந்த விஞ்ஞானியைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா சார்! என்றார் ஆசிரியர்.

     அந்த விஞ்ஞானியின் பெயர் ஆண்டர்ஸ் குஸ்டாஃப் எக்பெர்க். அவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, கணிதவியலாளர் மற்றும் கவிஞர். அவர் கவிஞராகவும் விஞ்ஞானியாகவும் இருந்ததால் பொதுவான  வேதியியல் கூறுகளுக்கு சுவீடன் பெயர்களை      முன்மொழிந்ததன் மூலமும் புகழ் பெற்றார். 1802 ஆம் ஆண்டில் டான்டலமின் ஆக்சைடை எக்பெர்க் கண்டுபிடித்தார், இரண்டு வெவ்வேறு தாதுக்களின் மாதிரிகளிலிருந்து தனிமைப்படுத்தினார், இந்த டான்டலமின் ஆக்சைட் பொதுவான அமிலங்களுடன் வினைபுரிவதில் அவர் அனுபவித்த சிரமங்களை பிரதிபலிப்பதற்காகவும், பண்டைய கிரேக்க இலக்கியத்தின் மீதான அவரது ஆர்வத்திலிருந்து ஓரளவுக்கு டான்டலம்என்ற பெயரை எக்பெர்க் தேர்ந்தெடுத்தார்.

இன்றைக்கு டாண்டலத்தின் பயன் வியக்கத்தக்க அளவில் பெரும் பங்காற்றி வருகிறது. என்று பேராசிரியர் ஆர்வத்தோடு கூறினார்.

ஆசிரியரும் ஆவலோடு கேட்டுக்கொண்டார்.இதை நாளை கண்ணப்பனுக்கு மட்டுமல்ல அனைத்து மானவர்களுக்கும் எப்படி விரிவாக எடுத்துக்கூறலாம் என்பதைஇப்பவே சிந்திக்க ஆரம்பித்ட்டுவிட்டார்.

பேராசிரியருக்கு நன்றி சொல்லிவிட்டு அவரிடமிருந்த்து மிக மகிழ்வான மனநிலையோடு தனது வீட்டிற்கு செல்ல வெளியே வந்தார்.


Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது....

மாணவர்கள் கொண்டாடிய சுதந்திர தினவிழா

சு தந்திரதின விழாவில் கொடியேற்றி துவக்கி வைப்பதற்காக, மாணவர் நல சங்கம் சார்பில் என்னை அழைத்திருந்தார்கள். முப்பதாண்டுகாலமாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவன் என்ற தகுதி ஒரு காரணமாக இருக்கலாம். மிக முக்கியமான இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக என்னை தயார் செய்துகொண்டிருந்தேன். அப்போது கதவு தட்டப்படும் ஓசைகேட்டு திறந்தேன். கையில் தேசியக்கொடியோடு மாணவர்கள் சீருடையில் வந்திருந்தனர். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. வாங்க! வாங்க! என்று பரவசத்தோடு உள்ளே அழைத்தேன். அனைவரும் ஒரே குரலில் “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! கொண்டாடுவோம்! என்றபடியே ஒரு வண்ண காகிதத்தை கையில் கொடுத்துவிட்டு அடுத்த வீட்டிற்கு சென்றுவிட்டனர். சுதந்திரமே மாணவர் உருவில் வீட்டு வந்தது போல இருந்தது. அவர்கள் கொடுத்துச்சென்ற காகிதத்தின் இரு பக்கத்திலும் பதினைந்து என்று எண்ணால் எழுதப்பட்டிருந்தது. மெல்ல பிரித்து பார்க்க அது எட்டாக மடிக்கப்பட்டிருந்தது. இது சுதந்திரதினத்தை குறிக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. காகிதத்தின் உள்ளே “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! வறுமையற்ற வளமான ஓர் இந்தியாவை உருவாக்குவோம்! ” எ...