Skip to main content

கணக்கும் கனவும்

கணக்கும்  கனவும்


          

கணக்கும் கனவும்

          சுற்றுலா என்றதும் ஒரு புதிய உற்சாகம் வந்து விடுகிறது. நந்தினியும் உற்சாகமாகி விட்டாள். அப்பொழுதான் அவளுக்கு வீட்டுப்பாடம் ஞாபகத்திற்கு வந்தது. அனைத்து வீட்டுப்பாடத்தையும் வேகமாக முடித்துக்கொண்டே வந்தாள். கணக்கு பாடத்தில் ஒரு கணக்கை மட்டும் அவளால் போடமுடியவில்லை.

     ஆனால் கணக்கில் அவளுக்கு ஆர்வம் அதிகம். சரியான விடை வந்துவிட்டால் சந்தோழத்தில் துள்ளிக் குதிப்பாள். ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் இடையில் எந்த வீதி செயல்படுகிறது என்பதில் ஆர்வமாக இருப்பாள். சில நேரங்களில் கற்பனையில் மூழ்கிவிடுவாள். கணக்கின் படிகளில் ஏறி விடையைத் தொடுகிற மாயத்தை எண்ணி எண்ணி வியப்பாள். இதனால் அவளை பள்ளியில் கணக்குப்புலிஎன்று அழைப்பார்கள். யாருக்கும் தெரியாமல் ஆசிரியரைப்போல கரும்பலகையில்  கணக்கைப் போட்டு மகிழ்வது அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த ஒரு கணக்கை அவளால் போட முடியவில்லை.

     அப்பொழுதுதான் அவளின் அம்மா வந்து அவளின் தலையைத் தடவி கொடுத்தாள். என்னம்மா கணக்கு வரலையா! என்று அன்போடு கேட்டாள்.

     நாளைக்கு டூர் போற இல்ல , இப்ப போய் கணக்கு பாடம் எழுத வேண்டாம், அத டூர் போய் வந்து பாத்துக்களாம். இப்ப டூருக்கு வேண்டியதெல்லாம் எடுத்து வை!  என்றாள்.

     சரிம்மா! என்று அரைமனதோடு  கணக்குப் பாடத்தை எடுத்து வைத்துவிட்டு சுற்றுலா செல்ல தயாரானாள்.

     மறுநாள் சுற்றுலா முடித்து வீட்டிற்கு வந்தாள். குளித்து முடித்து சுத்தமாகி புதிய உடையை அணிந்து கொண்டாள். உடனே பாதியில விட்ட கணக்கு ஞாபகத்திற்கு வந்தது.. போட முடியாத அந்த கணக்கை எடுத்து வைத்துக்கொண்டு யோசனையில் ஆழ்ந்தாள். சுற்றுலா போய் வந்த அசதியும் இந்த கணக்கு சிந்தனையும் சேர்ந்துகொள்ள, உடனே அசந்து தூங்கிவிட்டாள்.               

     ஒரு பெரிய காட்டில் இவள் ஓடிக்கொண்டிருக்கிறாள். மரங்கள் காற்றில் ஆடும் ஓசை காதில் கேட்கிறது. ஒரு குரங்கு இவளை துரத்துவதுபோல வந்துகொண்டிருந்தது. இவள் சற்றே ஓதுங்க ஆரம்பித்தாள். பெரிய பெரிய வாழைமரங்களைப்  பார்த்து வியந்தாள்.. அந்த குரங்கு வாழைப்பழத்தை பறித்து சாப்பிட நேரம் பார்த்துக்கொண்டிருந்தது.இவள் மீண்டும் ஒதுங்க ஆரம்பித்தாள்.அந்த குரங்கின் எதிரே ஒரு சிங்கத்தை பார்த்து பயந்துவிட்டாள். ஆனால் சிங்கம் பசியோடு குரங்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. குரங்கு வாழைப்பழம் சாப்பிட நினைத்தால் சிங்கத்திடம் மாட்டிக்கொள்ளும். குரங்கு இப்படியும் அப்படியுமாக யோசனையில் இருந்தது.  குரங்கு எங்கோ போவதுபோல பின்வாங்கியது.  திடீரென சிங்கத்தின் பின்பக்கமாக ஓடியது. என்ன நினைத்ததோ தெரியவில்லை, சட்டென திரும்பி வாழைப்பழத்தை நோக்கி தாவியது. பட்டென பழத்தைப் பறித்துக்கொண்டு சிங்கத்திடம் பிடிபடாமல் ஓடிவிட்டது. சிங்கம் குரங்கைத் துரத்த ஆரம்பித்தது. இவளுக்கு உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்துவிட்டது. திடீரென சிங்கம் கர்சிக்கும் சப்தம் அதிகமாகவே திடுக்கிட்டு எழுந்தாள் நந்தினி.

     சுற்றும் முற்றும் பார்த்தாள்!.சிங்கம் எதையும் காணவில்லை. ச்சே! கனவா இது! என்றபடியே நிதானத்திற்கு வந்தாள் நந்தினி.

     எதிரே! அப்பா காலையிலேயே குளித்து முடித்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தாதார். அம்மா சமையலுக்கு காய்கறி நருக்கிக் கொண்டிருந்தாள். நந்தினி அவள் அப்பாவை நோக்கி ஓடினாள். அப்பா!அப்பா! ஒரு பயங்கர கனவுப்பா!.

     என்ன கனவா! பயந்துட்டியா! பயப்படாமல் சொல்லு! என்றார் அதற்குள் அவளின் அம்மாவும் சேர்ந்துகொண்டார்.

     அவள் கண்ட கனவை ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்! அதெல்லாம் நல்ல கனவுதான். அதுசரி நேற்று உனக்கு என்னாச்சு! அத முதலில் சொல்லு என்றார்.

     ஓ அதுவா! நேற்று வீட்டுப்பாடத்தில் ஒரு கணக்கை என்னால் போடமுடியலப்பா! என்றாள் நந்தினி

     சரி! சரி! இதுக்கெல்லாம் பயப்படக்கூடாது. அதான் நான் வந்துட்டேன் இல்ல! நேற்று நீ  சுற்றுலாவிற்கு போன இல்ல! அதுவும் மிருகக்காட்சி சாலைக்கெல்லாம் போயிருக்க ! அதுதான் கனவா வந்திருக்கும். சரியா! கனவையெல்லாம் மறந்திடு! இப்ப போய் கணக்கப் போடு விடை சரியா வரும் என்றார் அவளின் தந்தை.

     சரிப்பா! என்றபடி மீண்டும் கணக்கைப் போட ஓடினாள்! 

     புள்ள பயந்திட்டாங்கிரிங்க! இப்ப என்ன செய்யறதுங்க! “!

     அப்பொழுதுதான் அழைப்புமணியின் ஓசை கேட்டது. “யாருன்னு போய் பாருங்க” என்றாள் அவளின் அம்மா.

     வாங்க! வாங்க! நீங்க என் பிள்ளை படிக்கிற பள்ளியில கணக்கு ஆசிரியர் அல்லவா!?. சரியான நேரத்திற்குதான் வந்திருக்கிங்க உள்ளே வாங்க என அன்போடு அழைத்தார் அவளின் அப்பா!

     ஆசிரியர் மெல்ல மகிழ்ந்தபடியே உள்ளே வந்தார்.

     உங்க பொண்ணு நேற்று சுற்றுலாவிற்கு வந்தா இல்லையா! அவ தன்னோட மணிபர்சை பஸ்சிலேயே விட்டுட்டா. ஓட்டுனர் எடுத்து என்கிட்ட கொடுத்தார். அதுல உங்களோட முகவரியைப் பார்த்தேன். நானும் இந்த நகர்லதான் குடியிருக்கேன். அதான் நடந்தே வந்துட்டேன் என்றார் ஆசிரியர்.

     உங்களுக்கு மிக்க நன்றி! என்றார் அவளின் தந்தை. ஆசிரியருக்கு வணக்கம் சொன்னபடியே அவர் அருகில் வந்து நின்றாள் நந்தினி.

     “சரியான நேரத்திற்குத்தான் வந்திருக்கேன்” என்று சொன்னீங்களே! என்று ஆசிரியர் ஆரம்பித்தார்.

     நந்தினி சுற்றுலா செல்லும் அவசரத்தில் அவளால் சில கணக்குகளைப் போட முடியவில்லை! அவளுக்கு கணக்கில் ஆர்வம் அதிகம் என்று உங்களுக்குத் தெரியும். அந்த நினைவோட அவள் இருந்ததால் அது ஒரு கனவாக அவளுக்கு வெளிப்பட்டுவிட்டது.

சின்ன புள்ள இல்லையா! பயந்திட்டா .இது சம்பந்தமாகத்தான் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம் என்றார் அவளின் தந்தை.

     என்ன கனவு என்றார் ஆசிரியர் ஆவலோடு

     அப்படியே அந்த கனவைப்பற்றி விரிவாக ஆசிரியருக்கு எடுத்துச் சொன்னார் அவளின் அப்பா..

     இதுல பயப்பட என்ன இருக்கிறது என்றபடியே ஆசிரியர் நந்தினி பக்கம் திரும்பினார். நந்தினி இப்ப நீ கணக்கை போட்டுவிட்டாயா? என்றார் ஆசிரியர். இப்பதான் விடை சரியாக வந்தது சார்!. உடனே நீங்களும் வந்துட்டீங்க சார்! என்றாள் நந்தினி.

      வெரிகுட்! நீதான் கணக்கு புலியாச்சே! உன்னால முடியும்! எதற்கும் பயப்படக்கூடாது! நேற்று முடியலைன்னா, நாளைக்கு முடியும்! உடனே நாம நம்பிக்கை இழந்துவிடக் கூடாது! சரியா! என்றார் ஆசிரியர்

 சரி சார்! என்றபடியே அமைதியாக நின்றாள் நந்தினி.

     என்ன சார்! கொஞ்சம் புரியும் படியாக சொல்லுங்க!என்றாள் அவளின் அம்மா.   

     ஒவ்வொரு நாளும் நமக்கு ஏதாவது ஒரு பிரச்சனை கண்டிப்பாக வரும். அதை எதிர்கொள்ள நமது மனம் தயாராக வேண்டும். நமது மனதை சமநிலைக்கு கொண்டுவரவே கனவுகள் வருகின்றன. அதோடு கனவுகள் நமக்கு நம்பிக்கை அளிக்கின்றன என்று மனோ தத்துவ அறிஞர்கள் சொல்வதை நான் படித்திருக்கிறேன் என்றார் ஆசிரியர்.

     இதை கேட்ட பிறகுதான் அவள் அம்மாவின் முகத்தில் லேசாக புன்னகை பூத்தது.

     ஆசிரியருக்கு சற்றே நம்பிக்கை வர  மேலும் பேசலானார்.

     அப்படித்தான் உங்கள் மகளின் கனவிலும் ஒரு குரங்கு சிங்கத்தையே ஏமாற்றி பழம் சாப்பிட்ட மாதிரி கனவு வந்திருக்கு. அந்த கனவுதான் அவளுக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கும். நாம தூங்கிவிட்டாலும் நம்ம மனதோட ஒரு பகுதி தூங்காம இருக்கும். அதுதான் கனவாக வரும்.  அவ  சந்தோழமாக சுற்றுலா போகவேண்டும் என்று அவள் மனம் விரும்பிருக்கு. அதுக்குள்ள வீட்டுப்பாடத்தை முடிக்கவேண்டும். இதனால் அவ மனம் சோர்ந்து போய்விட்டது. அதை சரி செய்யத்தான் அவளுக்கு கனவு வந்திருக்கு. இதெல்லாம் நம்ம  ஆழ்மனதோட செயல்பாடு என்பார்கள் என்றார் ஆசிரியர்..

     “அட நம்ம மனதைப்பற்றி இவ்வளவு அறிவியல் புரிதல் இருக்கிறதா! ரொம்ப ஆச்சரியமா இருக்கு! என்றார் அவளின் அப்பா!

     இன்னும் மனித மனம் பற்றி நாம் பேசிக்கொண்டே போகலாம். அதற்கு இப்பொழுது நேரமில்லை என்றபடி ஆசிரியர் மெல்ல எழுந்தார்.

     எந்த கணக்காக இருந்தாலும் உடனே போட வேண்டுமென ஆவல் வந்துவிடுகிறது சார் என்றாள் நந்தினி

     இந்த ஆர்வம்தான் மகத்தானது. அது ஒரு சிறு நெருப்பு! அதை அணையவிடாமல் நாம் பாதுகாக்க வேண்டும்.முக்கியமா பெற்றோர்கள் இந்த ஆர்வத்தை போற்றி வளர்க்கவேண்டும்.அதேநேரத்தில் எந்த தடை வந்தாலும் உன் கணித முயற்சியை விட்டுவிடாதே! அமைதியாக நிதானமாக யோசிக்க வேண்டும். உடனே விடை வரவில்லையென்றால் சற்று நேரம் அமைதியாக இருந்து மீண்டும் உன் முயற்சியை தொடங்கு! நீ கணிதத்தில் நிறைய சாதிக்க வாய்ப்பு இருக்கு! சரி கவனமாக படி! என்றபடி ஆசிரியர் விடைபெற்றுச் சென்றார்.

     பெற்றோர்கள் இருவரும் மகிழ்ந்தபடியே ஆசிரியரை வழி அனுப்பி வைத்தனர்.

 

    

    

 

Comments

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அந்த நேரம் பார்த்து தலைமை ஆசிரியர் அவரை அழைப்பதாகச் சொல்ல, மாணவ மாணவியரிடம் ஆளுக்கு

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை

வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு

  வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு இ ராபர்ட்   ஐந்தாம் வகுப்பில் புதியதாக வந்து சேர்ந்திருந்தான் . பார்ப்பதற்கு வெள்ளைக்காரரைப் போல சிவப்பாக இருந்தான் . யார் வகுப்பிற்கு வந்தாலும் அவனையே விசாரித்தார்கள் . வகுப்பறையைத் தாண்டி பள்ளி முழுவதுமே அவனையே   வியப்பாக   பார்த்தார்கள் .   இ ராபர்ட் வந்ததிலிருந்து இ ராமு தன் நிறத்தையே அடிக்கடிப் பார்த்துக்கொண்டான் . கருப்பாகவும் இல்லை . வெள்ளையாகவும் இல்லை . இரண்டு நிறமும் கலந்த மாதிரி இருந்தது . நாம் ஏன் சிகப்பாக பிறக்க வில்லை என்று தனக்குள் கேட்டுக்கொண்டான் . சிவப்பாக இருந்தால் ஏன் இப்படி மதிப்பாக பார்க்கிறார்கள்   என்பதை   ராமுவால் புரிந்துகொள்ள   முடியவில்லை . இ ராமு தன் நண்பர்களிடம் அடிக்கடி இது பற்றி கேட்டான் . அதெல்லாம் ஒன்னுமில்லடா , நம்ம கண்ணுக்குத் தான் அப்படி அழகா தெரியுது ! நீ நல்லா படித்து முதல் ரேங்க் எடுத்தா அப்புறம் உன்னைப்பற்றியே எல்லோரும் பேசுவார்கள் . ராமுவுக்கு இது சரி என்று பட்டாலும் . மனம் மட்டும் கேட்பதாக இல்லை . என்ன செய்வதென்று யோசிக்கத்தொ