Skip to main content

விட்டு விடுதலையாகி...

 

                           

  விட்டு விடுதலையாகி...

          தருண் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். பள்ளி விட்டு வந்தவுடன் சுறுசுறுப்பாகி விடுவான். அவனால் விளையாடாமல் இருக்க முடியாது

இன்று ஒரு பட்டம் வாங்கித் தரச்சொல்லி அம்மாவிடம் நச்சரித்தான்.  இரு குருவிகள் இணைந்து பறக்கிற படம் போட்ட ஒரு பட்டம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையே வாங்கிக்கொண்டான். அந்த பட்டத்தோடு மொட்டை மாடிக்கு ஒடினான்.

பட்டத்தின் நூலைப் பிடித்துக்கொன்டு காற்றில் வீசினான். பட்டம் காற்றின் மேல் தவழ முயன்றது. காற்றின் வேகத்தில் மேலே எழுவதும் பின்னர் கீழே சாய்வதுமாக இருந்தது.

 தருண் லாவகமாக நூலை விட்டு விட்டு இழுத்தபடியே இருந்தான். தற்போது காற்று மெதுவாக வீசியது. பட்டம் மெல்ல காற்றில் தவழ ஆரம்பித்தது விட்டது. மெதுவாக காற்றின் வேகம் அதிகரித்தது. பட்டம் காற்றில் தத்தி தத்தி நீந்தி பறக்க ஆரம்பித்தது. தருண் இப்பொழுதுதான் குதித்துக் கொண்டே பற்கள் தெரிய சிரித்தான். பட்டம் மெதுவாக பறந்து கொண்டே இருந்தது.

 

          அப்பொழுதுதான் எதிர் வீட்டு புவிக்கா வெளியே வந்தாள். புவிக்காவும் மூன்றாம் வகுப்புதான் படிகிறாள். எதிர் எதிர் வீடு என்பதால் இருவரும் சேர்ந்தே விளையாடுவார்கள் தருண் பட்டம் விடுவதை அப்பொழுதுதான் பார்த்தாள். தானும் பட்டம் விடவேண்டுமென ஆவல் கொண்டாள். அவனோடு போய் சேர்ந்து நின்று கொண்டாள். கொஞ்ச நேரம் எனக்கு பட்டம் கொடு!” என்றாள். அவன் பட்டம் விடுவதிலே குறியாக இருந்தான். அவன் தோள் மீது கைபோட்டு, "எனக்கு கொஞ்சம்  நேரம் பட்டம் குடு தருண்". என உரிமையோடு மீண்டும் கேட்டாள் புவிக்கா. அவன் ஒன்றும் சொல்லாமல் படத்தைக்கொடுத்தான்.

          பட்டத்தின் நூலை இவள் பிடித்து இழுத்து இழுத்து விட்டாள்.பட்டம் காற்றில் எக்கி எக்கி நீந்தியது. இப்பொழுது இருவரும் மகிழ்ந்தனர். சற்று நேரத்தில் இருவரும் மாறி மாறி பட்டம் விட்டுக்கொண்டார்கள். இருவரும் வலது கையால் பட்டத்தை விட்டுக்கொண்டே தனது இடது கைகளை ஒன்றாக இணைத்து பட்டத்திற்கு டாடா காண்பித்தார்கள்.

          அப்பொழுது இரண்டு பறவைகள் ஜோடியாக அந்த பட்டத்தின் அருகே பறந்து சென்றன. இந்த ஜோடி பறவைகளைப் பார்த்த  புவிக்காவிற்கு  தங்களது பட்டம் தனியாக பறப்பது பிடிக்கவில்லை. இந்த பட்டமும் அந்த பறவைகள் போல ஜோடியாக பறந்தால்  அழகாக இருக்கும் என்று நினைத்தாள். உடனே தருணிடம் பட்டத்தைக் கொடுத்துவிட்டு தனது அப்பாவை நோக்கி ஒடினாள் .

          அப்பா! அப்பா! எனக்கு ஒரு பட்டம் வேணும்ப்பா. அதுவும் தருண்  பட்டம் போலவே வேணும்பா! என்று அடம்பிடித்தாள். அடம் பிடித்தால் விட மாட்டாள் என்பது அவளது அப்பாவிற்கு நன்றாக தெரியும்.

          சரி!சரி! நானும் இப்ப கடப்பக்கம்தான் போகிறேன்; கண்டிப்பாக வாங்கி வருகிறேன் என்றார்.

          சற்று நேரத்தில் ஒரு புதிய பட்டத்தோடு வந்தார் புவிக்கா அப்பா. அதில் கயிற்றை கட்டி புவிக்காவிடம் கொடுத்தார். அந்த பட்டத்தை எடுத்துக் கொண்டு தருணிடம் ஓடினாள். அவனிடம் பட்டத்தைக் காட்டி மகிழ்ந்தாள். இந்த புதிய பட்டத்தையும்  காற்றில் பறக்க விட்டாள் . பட்டம் காற்றில் தாவி தாவி ஏறியது. தருனும் பட்டத்தின் நூலைப்பிடித்து உதவி செய்தான்.

          புவிக்காவின் பட்டம் தருணின் பட்டத்தை நெருங்கி விட்டது இப்பொழுது இரண்டு பட்டமும் இணையாக காற்றில் நீந்தி நீந்தி பறந்தன. புவிக்காவிற்கு இப்பொழுதுதான் மனசிற்கு நிம்மதியாக இருந்தது. இருவரும் மகிழ்ந்து பட்டத்தை இணையாக பறக்க விட்டுக்கொண்டே இருந்தனர்.

சற்று நேரத்தில் பட்டங்களுக்குச் சிறகு முளைத்தன . இரண்டு பறவைகளாக மாறி காற்றில் இணையாக  பறந்தன. இரண்டும் அவ்வப்பொழுது முட்டி மோதின, பின்னர் விலகின. இந்த விளையாடுத் தொடர்ந்தது.

          திடீரென இருவரும் பட்டத்தின் நூலை விட்டு விட்டார்கள். கைதட்டி மகிழ்ந்தார்கள்.

          அப்பொழுதுதான் புவிக்காவின் அப்பா மேலே வந்தார். பட்டம் எங்கே! என்று வேகமாக கேட்டார்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.உடனே புவிக்கா முந்திக்கொண்டு பதில் சொன்னாள்.

          அதுவா பறக்க ஆரம்பித்து விட்டது! அதாம் விட்டுட்டோம்! என்றபடி இருவரும் கீழே இறங்கி ஓடினார்கள்.

          புவிக்காவின் அப்பா ஒருகணம் திகைத்தார்.      

இந்த பசங்களை புரிஞ்சிக்கவே முடியலையே! என்றபடி

 மொட்டை மாடியிலிருந்து கிழே இறங்கினார்.


Comments