Skip to main content

காடு ஒழுங்கற்றதா?


காடு ஒழுங்கற்றதா?

பள்ளிக்கூடத்திற்கு ஒரு மணிநேரம் முன்னதாக வந்துவிடுவான் மணிநாத். உடனே பையை வைத்துவிட்டு விளையாட ஆரம்பித்துவிடுவான். அன்று அனால் அப்படி விளையாட முடியவில்லை. பள்ளியின் விளையாட்டு மைதானத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு இருந்தது. பாதுகாப்பிற்காக மரக்கன்றுகளைச் சுற்றி இரும்பு கூண்டு அமைத்திருந்தார்கள். அதன்மீது "காடழிந்தால் நாடே அழிவும், மரம் வளர்ப்போம்" என்று எழுதப்பட்டிருந்தது. அப்பொழுதுதான் அவனின் தோழி சுவேதா ஒடி வந்தாள்.
மரம் வளர்த்தால் எப்படி காடாகும்? மாந்தோப்பு தென்னந்தோப்பு மாதிரி தோப்புதானே உருவாகும்? என்றாள்.
அப்ப தோப்பு காடாவாது என்கிறாயா? என சட்டென கேட்டான் மணிநாத்.
தோப்பு என்றால் ஒழுங்கமைந்து கானப்படும்! காடு அப்படியா? அது ஒழுங்கற்றதுதானே! என்றாள் சுவேதா.
இப்படி உரையாடல் போய்க்கொண்டிருந்த போதுதான், கணக்கு ஆசிரியர் அறிவழகன் அவர்களை வகுப்பறைக்கு உள்ளே அழைத்தார்.
அவர்கள் வணக்கம் சொன்னபடியே உள்ளே வந்தனர். “ஏதோ விவாதம் போய்க்கொண்டிருந்ததே, என்ன அது” ஆவலோடு கேட்டார் ஆசிரியர்
உடனே சுவேதா ஒரு சாக்பீசை எடுத்து கரும்பலகையில் கீழ்கண்டவாறு எழுதினாள்.
 மரம் = தோப்பு = காடு  என்பது சரியா சார்? என்றாள்.
 நான் கணக்கு ஆசிரியர் என்பதால் எனக்கு சமன்பாடு போட்டு காண்பிக்கிறாயா! என சிரித்துக் கொண்டே வினவினார்.
மரக்கன்றுகள் நட்டால் எப்படி காடாகும்? என எங்களுக்குள் பேசிக்கொண்டோம் என்றாள் சுவேதா.
“நல்லது இன்றைக்கு மிகவும் தேவையான சுற்றுச்சூழலுக்கு உதவும்படியான உங்கள் விவாதம் தொடரட்டும்” என்றார் ஆசிரியர்.
உடனே வகுப்பில் இருந்து ஒரு மாணவி எழுந்து வந்து கரும்பலகையில் சுவேதா எழுதியதை சற்றே மாற்றி எழுதினாள். அதாவது சமக்குறியை எடுத்துவிட்டு அம்புக்குறியை போட்டு விட்டாள்.
மரம் à தோப்பு à  காடு
அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். அந்த மாணவி சுமாராக படிக்கக்கூடியவள்தான். "அவள் எப்படி இப்படி சிந்தித்தாள்" என வகுப்பே ஆச்சரியப்பட்டது. உனது சிந்தனை சரிதான். மரங்கள் நிறைய வைத்தாள் அது தோப்பாக மாறும், அந்த தோப்பே பின்பு காடாக மாற வாய்ப்பு உண்டு. உனது சிந்தனைக்கு பாராட்டுக்கள் என அந்த மாணவியை ஆசிரியர் பாராட்டினார்.
மாணவர்கள் சுதந்திரமாக சிந்திக்கும் போது வகுப்பறை சப்தம் மட்டுமல்ல புதிய சிந்தனைகளும் பொங்கி எழும் என்பதற்கு நமது மாணவியே சாட்சியாகி விட்டாள்.
என்ன மணிநாத் உங்கள் விவாதம் முடிவுக்கு வந்ததா! என ஆசிரியர் ஆவலோடு கேட்டார்.
ஒரளவிற்கு முடிவுக்கு வந்தாலும் காட்டின் ஒழுங்கற்ற தன்மை எங்களுக்கு விளங்கவில்லை சார்! என்றான்.
காட்டின் அடிப்படை அலகு மரம்தான். அந்த மரத்தோடு சேர்த்து வளரும் செடி, கொடி, புதர்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் நுண்ணுயிர்கள் இவற்றின் பிரிக்க முடியாத உறவு நிலைகளை நாம் கற்க முனையும் போது உங்களுக்கான விடை கிடைத்தே தீரும் என எடுத்துச் சொல்லி அடுத்த வகுப்பிற்குச் சென்றார் ஆசிரியர்.
பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்தாலும், காட்டின் ஒழுங்கற்றத்தன்மை எங்களுக்கு விளங்கவில்லை சார்! என மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு இன்னும் சரியான அறிவியல் விளக்கத்தை தேட வேண்டும் என்ற சிந்தனையே ஆசிரியருக்கு வந்து போனது.
      அப்பொழுதுதான் காலை நாளிதழில் படிக்காமல் விட்டுப் போன கட்டுரைகளைப் படிக்க புரட்டினார் ஆசிரியர். அதில் மரம் வளர்த்த மாமனிதர் மரம் தங்கசாமியைப் பற்றி கட்டுரை ஒன்று பிரசுரமாகி இருந்தது. அதில் தனி ஒரு மனிதரால் ஒரு குறுங்க்காட்டை எவ்வாறு உருவாக்கிச் சாதித்தார் என்பது பற்றி எழுதி இருந்தது.      
         முதலில் பல இன மரக்கன்றுகளை அவரின் நிலமெங்கும் நட்டு வளர்த்தார் தண்ணீர் பற்றாக்குறை இருந்தபோதும் விடாப்பிடியாக பல வழிகளில் முயன்று மரங்களை வளர்த்திருக்கிறார். தோப்பாகி வளர்ந்த பின்னரும், அதை காடாக உயிர்பெற்று எழுவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து ஒரு குறுங்க்காட்டை மெல்ல மெல்ல உருவாக்கி விட்டிருக்கிறார். வேம்பு, தேக்கு, ஈட்டி, மனோரஞ்சிதம் மற்றும் பலா உள்ளிட்ட பல வகைகளும், அரிய மூலிகை செடிகளும் இணைந்த காடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததில் வியப்பொன்றுமில்லை.

        தற்போது இந்த காடே அவரின் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, தற்போதைய வறண்ட சுற்றுச்சூழலையும் மேம்படுத்துவதாக மாறிவிட்டது. இது போன்ற கற்பகச் சோலைகளை நாமும் முயன்றால் உருவாக்கி நமது சுற்றுச்சுழலை மேம்படுத்த முடியும் என்று அந்த கட்டுரை வழிமொழிந்திருந்தது.

     இந்த கட்டுரையைப் படித்தவுடன், ஒரு புதிய முயற்சி எவ்வாறு நமக்கும் நமது சமுதாயத்திற்கும் பயனுடையதாக மாறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நமது மாணவர்களும் இதைத்தான் கற்பனை செய்திருக்கிறார்கள் என்று நினைத்தபோது பெருமையாக இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் நமது மாணவர்களும் இது போன்ற குறுங்காடுகளை எதிர்காலத்தில் உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை ஆசிரியருக்குள் எழுந்தது.
     அனாலும் தற்போது பாதி கிணறு தாண்டியது போலத்தான் ஆசிரியர் உணர்ந்தார். காடு ஒழுங்கற்றதா என்று மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு இன்னும் பதிலைத் தேட வேண்டும் என்ற சிந்தனை அவருக்குள் மீண்டும் வந்து போனது. நாளிதழை மடித்து வைத்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றார்.
     சில நாட்கள் கழித்து ஒரு இலக்கிய விழாவில் சுற்றுச்சூழல் ஆர்வலர் தமிழ் மணியை ஆசிரியர் சந்தித்தார். தமிழ் மணியோ புதுச்சேரியின் சுற்றுச்சூழலை அனைத்து வகையிலும் பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர். அவரிடம் மாணவர்கள் எழுப்பிய கேள்வியை ஆசிரியர் பகிர்ந்து கொண்டார்.

மாணவர்கள் எழுப்பிய கேள்வி மிக நுட்பமானது. முதலில் மாணவர்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்து விட்டு பேசலானார் தமிழ்மணி.
 காடு என்பது வெளிப்பார்வைக்கு சிக்கலானதாக தெரிந்தாலும் உண்மையில் காடு என்பது தன் எல்லைக்குள் உட்பட்ட அனைத்தையும் தன் நெஞ்சில் வைத்து பாதுகாத்து வளர்த்து வாழ வைக்கிறது. காட்டில் காணப்படும் பலவகை தாவரங்கள் ,விலங்குகள், பறவைகள் மற்றும் நுண்ணுயிர்கள் எல்லாம் ஒன்றை அழித்து ஒன்று வாழும் குணஒழுக்கம் கொண்டவை அல்ல என்பதே . என்ன நான் சொல்வது மிக ஆச்சரியமாக இருக்கிறதா! என்ற கேள்வியோடு மேலும் பதிலைத்தொடர்ந்தார்.
காட்டில் வாழும் ஒவ்வொரு இனத்திற்கும் அதற்கே உரிய சொந்தமான வாழிடம் மெல்ல மெல்ல உருவாகி விடுகிறது. மற்ற இனங்களோடு இணைந்து படர்ந்து நெருங்ககி வாழ்ந்தாலும் அதனதன் உரிமைப் பகுதியில் அத்து மீறுவதோ தலையிடுவதோ கிடையாது. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், அது ஊடும் பாவும் போன்றது என்ற வாசகமே மிக பொருத்தமாக. வருகிறது.
இன்னும் சொல்லப்போனால், இந்த ஊடும் பாவும் உறவும்கூட தொடர்ந்து இயங்குகையில் மாற்றத்திற்குள்ளாகி தன்னை மேலும் புதுப்பித்துக்கொண்டு மேலும் மேலும் தன்னை தகவமைத்துக் கொண்டு ஒரு உயிர்க் கூட்டமாக செழித்து வளர்கிறது
       உங்களின் விளக்கம் உயிரோட்டமாக அற்புதமாக இருக்கிறது. ஏதேனும் ஒரு உதாரணம் மூலம் மேலும் இதை விளக்க முடியுமா?என ஆசிரியர் ஆவலோடு கேட்டார்.
        காட்டைப் பற்றி இன்னும் நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் பறவைகள், மிருகங்கள் மற்றும் பூச்சியினங்களின் உணவு உண்ணும் வழக்க நெறிகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது காட்டின் தரைப்பகுதியானது மக்கிய இலைகளால் எருவாக மாறும் போது அதனிடத்தில் புழு பூச்சிகள் அதிகம் உருவாகும். அந்த புழு பூச்சிகளை மட்டுமே உண்டு வாழும் பறவைகள் உண்டு. ( காடை கவுதாரி போன்ற தரை வாழ் பறவையினங்கள்) அதேபோல் மரத்தின் இடைமட்டப் பகுதியில் உருவாகும் மரப்பொந்துகள், மரப்பட்டைகளின் இடுக்குகளில் உள்ள புழு பூச்சிகளை மட்டுமே உணவாகக் கொண்டு வாழும் பறவைகள் உண்டு. (மரம்கொத்தி, கொட்டைக்கொத்தி போன்றவை). சில பறவைகள் மரத்தின் தலை மட்டத்தில் அதாவது உச்சானிக்கொம்பில் கூடமைத்து அங்குகிடைக்கும் புழு பூச்சிகள் மற்றும் பழங்களை மட்டுமே உண்டு வாழும் பறவைகள் உண்டு ( தூக்கணாங்குருவிகள், இலை நார்களை வைத்து கூடுகட்டும் பறவைகள்). எனவே இப்பறவைகள் ஒன்றுக்கொன்று பகையாகாமல் அதனதன் வாழ்வுரிமையில் குறுக்கிடாமல் தனக்கான இரையைத்தேடி தின்று வாழ்கின்றன.

       இது ஒரு உதாரனம்தான். இன்னும் ஆய்வுசெய்தால் பல ஆச்சரியங்கள், உண்மைகள் வெளிவரலாம். இதுதான் காட்டின் உயர்ந்த பண்பு. இப்ப சொல்லுங்கள் காடு ஒழுங்கற்றதா?. காடுகள் நமக்கே பாடம் நடத்துகிறது. ஆனால் நமக்குத்தான் அது புரிவதில்லை. அதனால் தான் காடுகளை அழிக்க மனம் வருகிறது. காடு என்பது மரங்களின் வெறும் கூட்டமல்ல. அது உயிர்களின் பெரும் கூட்டம். அவ்வுயிர்களின் வாழ்க்கையை நாம் பாதுகாத்தால் அது நமது வாழ்க்க்கையைப் பாதுகாக்கும்.

      காட்டின் உயிர் சுழற்சிகள் நாம் தலையிட முடியாது. அதன் உயிர் சங்கிலி ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை உண்டு. ஒரு பிணைப்பு உண்டு. ஒரு இணக்கம் உண்டு. காட்டிற்கு இணை ஏதும் இல்லை. என தமிழ்மணி நீண்ட விளக்கம் தந்தபோது, அவரின் சுற்றுச்சூழல் ஆர்வம் ஆசிரியருக்கு பிடிபட்டது. காடென்பது ஒரு உயிர் ஜீவன். அதன் ஒரு சிறு பகுதியை அழித்தாலும் ,அது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் அழிவு என்பது மட்டும் தெளிவாக விளங்கியது. காட்டைப் பாதுகாத்தே ஆக வேண்டும். நம்மால் முடிந்த அளவிற்கு சிறு காடுகளை மரம் தங்கசாமி போல நாம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஆசிரியர் மனதில் வலிமையாக எழுந்தது.

மாணவர்களுக்கு இதை எளிதாக உணர வைக்கமுடியும்  என்ற நம்பிக்கை உங்களால் எனக்கு உண்டானது என தமிழ்மணிக்கு நன்றி சொன்னார் ஆசிரியர். உங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு  இயக்கத்திற்கு எனது ஆதரவு எப்பொழுதும் உண்டு என ஆசிரியர் அவரிடம் கூறி விடைபெற்றார்.



Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது....

மாணவர்கள் கொண்டாடிய சுதந்திர தினவிழா

சு தந்திரதின விழாவில் கொடியேற்றி துவக்கி வைப்பதற்காக, மாணவர் நல சங்கம் சார்பில் என்னை அழைத்திருந்தார்கள். முப்பதாண்டுகாலமாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவன் என்ற தகுதி ஒரு காரணமாக இருக்கலாம். மிக முக்கியமான இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக என்னை தயார் செய்துகொண்டிருந்தேன். அப்போது கதவு தட்டப்படும் ஓசைகேட்டு திறந்தேன். கையில் தேசியக்கொடியோடு மாணவர்கள் சீருடையில் வந்திருந்தனர். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. வாங்க! வாங்க! என்று பரவசத்தோடு உள்ளே அழைத்தேன். அனைவரும் ஒரே குரலில் “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! கொண்டாடுவோம்! என்றபடியே ஒரு வண்ண காகிதத்தை கையில் கொடுத்துவிட்டு அடுத்த வீட்டிற்கு சென்றுவிட்டனர். சுதந்திரமே மாணவர் உருவில் வீட்டு வந்தது போல இருந்தது. அவர்கள் கொடுத்துச்சென்ற காகிதத்தின் இரு பக்கத்திலும் பதினைந்து என்று எண்ணால் எழுதப்பட்டிருந்தது. மெல்ல பிரித்து பார்க்க அது எட்டாக மடிக்கப்பட்டிருந்தது. இது சுதந்திரதினத்தை குறிக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. காகிதத்தின் உள்ளே “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! வறுமையற்ற வளமான ஓர் இந்தியாவை உருவாக்குவோம்! ” எ...