Skip to main content

அண்ட ரெண்ட பட்சி

அண்ட ரெண்ட பட்சி  
மாணவர்கள் சுதந்திரமாகவும்   நட்பாகவும் விளையாட  வேண்டும்  என்று விரும்புபவன்  நான் .அவர்கள்  விளையாடும்போது  மட்டும்தான்  மனசு  லேசாகி சமநிலை அடைவர் . வாரத்தில்  ஒரு  நாளாவது  எனது  மாணவர்களை   விளையாட  அனுமதிப்பேன் .

அன்று  மாணவர்களை ,” பறவைகளைப் போல நடித்து விளையாடுங்கள் :கண்டிப்பாக தரையில் மட்டும்”  என்று  கூறிவிட்டு  அவர்களை  கவனிக்க ஆரம்பித்தேன்.

ஒருவன் கைகளை மடக்கி றெக்கையாக்கி கோழியைப் போல பறந்து காட்டினான் . ஒரு மாணவன்  கைகளை  நன்றாக விரித்து காக்கையைப் போல பறந்து காட்டினான். சற்று தூரம் பறந்து  அமரும் கொக்கைப் போல ஒரு மாணவன் நடித்து காட்டினான் . வானத்தில் வட்டமிடும் கழுகைப் போல ஒரு மாணவன் வட்டமாக பறந்து எலியைப் பிடிப்பதைப் போல பாய்ந்து காட்டினான் .பறவைகள் கூட்டமாக பறப்பது போல மாணவர்கள் அனைவரும் இணைந்து கூட்டமாக கைகளை விரித்து தரையில் பறந்தபடியே நடித்தார்கள் .

 திடீரென ரொம்ப தடிமனான ஒரு மாணவனை அழைத்து வந்தார்கள் . அவனுக்கு வண்ணக்  காகிதத்தாலான  ஒரு பெரிய மூக்கு செய்து அவன் முகத்தில் மாட்டி விட்டார்கள். தலைக்கு கிரீடமும் ,அவன் கைகளில் இருபுறமும் வண்ண றெக்கைகளை மாட்டி விட்டார்கள் .மூக்கின் நுனி சிகப்பு வண்ணத்தில்  ஒளிர்ந்தது அனைவரையும் ஈர்த்தது   .  றெக்கைக்கு தோதாக மாணவர்கள் இருபுறமும்அணிவகுத்து  நின்று  கொண்டார்கள் .”நான்தான் அண்ட ரண்ட பட்சி” ! இந்த உலகத்தைச் சுற்றி வரப்போறேன்! . இந்த வானத்தை அளந்து காட்டப் போகிறேன்! என்று கத்திக் கொண்டே விளையாட்டு மைதானத்தைச் சுற்றி  வந்தார்கள்.

அந்த நேரம் பார்த்து விளையாட்டு மணி அடிக்க, மற்ற மாணவர்களும் சேர்ந்து  கொண்டு நடித்து விளையாட ஆரம்பித்து விட்டனர் . மாணவர்களின் கற்பனை கலந்த இந்த விளையாட்டை நிறுத்த எனக்கு மனம் வரவில்லை  மாணவர்களின் கற்பனை திறனைக்  கண்டு நான்  பெரிதும் வியந்து  போனேன் .

ஒருவழியாக  மாணவர்களின்  விளையாட்டை முடித்து வைத்தேன் . அதுசரி அது என்னஅண்ட ரெண்ட பட்சி”  என்று கேட்டேன் .

அது எங்க பாட்டி சொன்ன கதை சார்!  அதுல ஒரு பெரிய பறவை வரும். அதுதான்  “ அண்ட ரெண்ட பட்சி” .அது மிகப் பெரிய ராட்சஸப் பறவை .கடல் மலைகளைத்தாண்டி ஓயாது பறந்து கொண்டே இருக்கும்

அது என்ன கதை ? ஆவலோடு  கேட்டேன் .

ஒரு நாள் ஒரு இளவரசி மொட்டைமாடியில் தலை துவட்டிக் கொண்டு இருந்தாள். அந்த நேரம் பார்த்து ,அந்த பட்சி அவளை தூக்கிக்கொண்டு பறக்க ஆரம்பித்து விட்டது . அது ஏழு கடல் ஏழு மலை தாண்டி , எட்டாவது மலையில் உள்ள மாளிகையின் உள்ளே போய் இளவரசியை இறக்கிவிட்டது. இளவரசி தப்பித்து போகாமல் இருக்க அந்த மாளிகையைப் பூட்டிவிட்டது. இது போதாதென்று ஒரு சிங்கத்தைக் காவலுக்கு வைத்தது. அந்த மாளிகையின் சாவியை எடுத்து சிங்கத்தின் நாவில் வைத்துவிட்டு அந்த பட்சி பறந்து சென்றுவிட்டது.

அப்புறம் அந்த இளவரசியை யார் காப்பாற்றினாங்க என ஒரு மாணவன் கேட்க இது என்ன கேள்வி இளவரசன்தான் வந்து காப்பாற்றி இருப்பான் என மற்றொரு மாணவனிடமிருந்து சட்டென பதில் வந்தது.

“இந்த கதை நல்லாயிருக்கே! அடடா! என்ன கற்பனை” என நான் யோசிக்க ஆரம்பித்தேன்.

“அண்ட் ரெண்ட பட்சி ஒரு கற்பனையா? அல்லது இது போல பறவைகள் இன்றும் உண்டா சார்!”  என ஒரு மாணவன் கேட்டான்.

ஒரு ஆளையே தூக்கிக்கொண்டு செல்கிற வலிமையுடைய பறவை உண்டா என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் பறவைகள் இதமான சூழ்நிலைகளை நோக்கி இடம் பெயர்ந்து செல்வது உண்டு கடல் மேல் நீண்ட நாட்களுக்கு பயணம் செய்கிற பறவைகளும் உண்டு என ஒரு பதிலை சொல்லிவிட்டு அடுத்த வகுப்பிற்கு சென்று விட்டேன்.

மாணவர்களுக்கு நான் சொன்ன பதில் முழுமையாக இருந்திருக்காது என்று மட்டும் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது.

மறுநாள் விலங்கியல் ஆசிரியரிடம் இந்த பறவையைப் பற்றி நான் கேட்டேன் , அவர் சற்றே யோசித்தவாறு பேசலானார்.

எனக்கு அந்த பறவையோட பெயர் சரியாக ஞாபகத்திற்கு வரவில்லை ஆனால் அந்த பறவை சிறகை விரித்தாள் சுமார் பனிரெண்டு  அடி அளவுக்கு விரியும்.  அதன் கால் பாதம் வாத்தின் பாதம் போல இருந்தாலும் அவை மிகப்பெரியவை .மிக வலுவானவை .பறவை இனத்தில் மிகப் பெரியது. இதை புயற் பறவை கடல் பறவை என்றும் சொல்வார்கள் என்றார்.

எனக்கோ ஆச்சரியமாக இருந்தது. இப்படி ஒரு பறவையை நான் வாழ்நாளில் பார்த்ததில்லை.

நமது முன்னோர்கள் ஒரு வேலை பார்த்திருக்கலாம். அல்லது வேறு யாராவது  பார்த்தவர்கள் சொல்லியிருக்கலாம். எனவே அந்த பெரிய பறவைக்கு “அண்ட ரெண்ட பட்சி” என்று பெயர் வைத்திருக்கலாம் சார்” என்று அவரிடம் கூறினேன். அவரும் நீங்கள் சொல்வது சரிதான் என்றார். நான் அவரிடம் விடைபெற்று வீட்டிற்கு வந்தேன்.

எனது மேசையில் ஓவிய கண்காட்சிக்கான அழைப்பிதழைப் பார்த்தேன். எனக்கு ஓவியம் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் ஓவிய கண்காட்சி என்றால் இன்னும் பிடிக்கும். அணைத்து புதிய ஓவியங்களையும் ஒன்றாகப் பார்க்கலாம். உடனே போக வேண்டுமென்று மனசு சொன்னது.

மாலையில் கண்காட்சிக்கு சென்றேன் ஒவ்வொரு ஓவியமாக பார்த்துக்கொண்டே வந்தேன் அதில் ஒரு ஓவியம் என்னை வெகுவாக ஈர்த்தது . விலங்கியல் ஆசிரியர் சொன்னது போல ஒரு பெரிய பறவை சிறகை விரித்தபடியே இருந்தது. கடலும் மலையும் இணைந்த இடமாக காட்சி விரிந்து இருந்தது. பக்கத்தில் உள்ள ஒரு பெரிய மேட்டில் காதலனும் காதலியும் அந்த பெரிய பறவையை அதிசயமாக அண்ணாந்து பார்த்தபடியே இருந்தனர். பின்புறம் பெரிய கப்பல் பயணத்தில் இருந்தது. கடலும் மலையும்,  இணைந்த காதலர்களும் என ஒவ்வொன்றும் உயிர் பெற்ற  சிற்பமாக உயிர்த்து நம் முன் காட்சிகளாக நின்றது. நான் வியந்து பார்த்தபடியே இருந்தேன்.

அப்பொழுதுதான் கவனித்தேன் அந்த ஓவியத்தின் அடியில் “அல்பெட்ராஸ்” என்று ஆங்கிலத்தில் எழுதப்படிருந்தது. அங்கிருந்த ஒரு நண்பரிடம் கேட்டேன் “இது என்ன அல்பெட்ராஸ் ஓவியர் பெயரா? என்றேன். அவரோ இல்லையில்லை அது அந்த பறவையின் பெயர் என்றார். இதை வரைந்த ஓவியர் நான்தான் என்றார். நான் நியூஸ்லாந்து சென்றபோது இந்த அதிசய பறவையைப் பார்த்தேன் அப்படியே என் மனதில் பதிந்து விட்டது . உடனே அதை ஓவியமாக வரைந்து விட்டேன் என்றார் எனக்கோ விடை கிடைத்தது போல இருந்தது அவருக்கு நன்றியும் வாழ்த்தும் சொல்லிவிட்டு அந்த உயிரோவியத்தை விலைக்கு வாங்கி வந்து விட்டேன். வீட்டில் வந்து பிரித்து பார்த்ததில் அதன் பின்புறத்தில் அந்த பறவையைப் பற்றிய முழு விபரம் இருந்தது.

      மறுநாள் அந்த ஓவியத்தை எனது வகுப்பறைக்கு எடுத்துச் சென்றேன் மாணவர்கள் அனைவரும் அந்த ஓவியத்தை வியந்து பார்த்த படியே இருந்தனர். சார் இதுதான் “அண்டரெண்டபட்சி யா” என்று ஒரு மாணவன் கேட்டான். இல்லையில்லை அது கற்பனை. கிட்ட தட்ட அது போன்ற ஒரு நிஜமான பறவை. அதன் பெயர் அல்பெட்ராஸ் என்றேன்.

              மாணவர்கள் அந்த பறவையைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆவலாய் துடித்தனர்.

ஒரு நாளில் சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை அது எளிதாக கடக்கும். காற்றின் விசையவும் திசையையும் நன்றாக அறிந்து அதற்கேற்றபடி பறக்கும் தன்மையுடையது. அதாவது குறைந்த சக்தியைப் பயன்படுத்தி அதிக தூரத்தை அது எளிதாக கடந்து விடும். அது தன்  சிறகை விரித்து அசைக்காமலேயே காற்றின் வேகமறிந்து மேலே ஏறவும், அப்படியே இறங்கி மிதந்தபடியே தூரத்தை அதனால் கடக்க முடியும்.

நான் சொல்ல சொல்ல மாணவர்கள் ஆவலாகக் கேட்டபடியே இருந்தனர்.
“சிறகை அசைக்காமல் இருந்தால் பறவைக்கு வலிக்காத சார்!” என்றார் ஒரு மாணவன். “அப்படியே சிறகை எவ்வளவு நேரம் வைத்துக் கொள்ள முடிவும்?” என்றான் இன்னொரு மாணவன். உங்கள் கேள்வி சரியானது தான். அந்த பறவையின் அமைப்பு அப்படி. அந்த பறவை முழுவதுமாக சிறகை விரிக்கும்போது அதன் தோள் பகுதியில் உள்ள ஒரு அமைப்பு அதன் சிறகுகளை வலுவாக பிடித்துக் கொள்கிறது. இதனால் பறவையின் உடலுக்கு அந்த சிறகின் பளு வந்து சேர்வதில்லை. இதனால் அது எளிதாக பறக்கிறது என்றேன்.

மாணவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மேலும் நான் ஏதாவது சொல்ல மாட்டேனா ! என்று ஆவலோடு எதிர்பார்த்தார்கள்.இந்த பறவை கூட்டமாக வாழும் தன்மையுடையவை. ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மட்டுமே இடும். ஆண் பறவையும் பெண் பறவையும் இணைபிரியாமல் அன்பாக வாழும். இந்தப் பறவைகளை நாம் அழியவிடாமல் பாதுகாக்க வேண்டும்” என நான் சொல்லி முடித்தபோது வகுப்பறையில் அமைதி நிலவியது. இந்த பறவையைப் பற்றி நிறைய கேள்விகள் உங்களுக்கு எழுந்து கொண்டே இருக்கும். அதற்கான பதில்களை நாம் தேடிக் கண்டுபிடிக்கலாம். 

       அண்டரெண்டபட்சி” ஒரு கற்பனை பறவையாக இருந்தாலும், கிட்டத்தட்ட அது போன்ற ஒரு  நிஜமான பறவையைப் பற்றி நாம் தெரிந்து கொண்டோம்.

      அன்பு மானவர்களே உங்களால் நானும் இந்த பறவைகளைப் பற்றித் தெரிந்துகொண்டேன்.வாழ்த்துகள்.ஆனால் அன்பால் மட்டுமே இணைந்து வாழும் இந்த பறவைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள  நிறைய  இருக்கிறது.

மனிதர்கள் வேற்றுமை மறந்து அன்பால் வாழ கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அந்த ஓவியரும் அன்பின் வெளிப்பாடாகவே உயிரோவியமாக இந்த அல்பெட்ராஸ் பறவையை வரைந்திருக்கிறார். அவருக்கு நன்றி சொல்வோம் அன்பாய் பறவைகளை நேசிப்போம் . அன்பாய்  நாமும் வாழ்வோம்.

என்ன மாணவர்களே நாளை சந்திக்கலாமா! என்று பேசி முடித்த போது மாணவர்கள் நெகிழ்ந்துப் போய் அமர்ந்திருந்தனர். மாணவர்கள் அந்த ஓவியத்தை மீண்டும் பார்த்தனர். அன்பின் வடிவாய் அந்த ஓவியம் அவர்களுக்கு காட்சி அளித்தது. நான் அகமகிழ்ந்து அடுத்த வகுப்பிற்குச் சென்றேன் . 

Comments

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ்

  இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ் ---- புதுச்சேரி அன்பழகன்.          " டாக்டர் யெல்லபிரகட சுப்பாராவ்   என்ற இந்திய விஞ்ஞானி வாழ்ந்ததால் இன்று உலக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று அவரைப்பற்றி நன்கு அறிந்த அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். மருத்துவ உலகிற்கு பல கண்டுபிடிப்புகளையும் பல முன்னெடுப்புகளையும் வழங்கிய அதிசய மனிதர் என்றும் அவர் போற்றப்படுகிறார்.. ஆனாலும் அவரைப்பற்றி   அதிகமாக நாம் கேள்விப்பட்டிருக்க   வாய்ப்பில்லை.         ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரம் என்ற ஊரில் ஒரு ஏழை தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் 1895-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள்   யெல்லபிரகட சுப்பாராவ்   பிறந்தார். தற்போதைய கோவிட்-19 தொற்று போல அன்றைக்கு பிளேக் என்ற தொற்று நோய் பரவியதால் இவரின் தந்தை காலமானார். தன் தந்தையின் இழப்பை சுப்பாராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார்.     தந்தையின் வருமானம் இல்லாமல் குடும்பம் தவித்...

உலகத்தைப் படைத்தது யாரு?

நா ளை எவ்வாறு பாடத்தை எளிமையாக நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதுவும் உலகம் தோன்றியது எப்படி என்பதை நான் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். உலகம் தோன்றியது எப்படி என்று நான் சொல்லத்தொடங்கும் முன் , அது முன்பே படைக்கப்பட்டுவிட்டது என்ற பதில்தானே உடனே வரும்!?. அப்பொழுதுதான் என் மகள் ஓடி வந்து எனது சிந்தனையைக் கலைத்தாள். அப்பா! அப்பா! எங்கள் ஆசிரியர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க , பாடட்டுமா? என ஆவலோடு கேட்டாள். சரி! பாடு கேட்கலாம் என்றேன். உடனே அவள், நான்பாடும்போது நீங்களும் பாடனும்பா! என்றாள். நான் சரி என்று சொல்வதற்குள் அம்மாவும் அக்காவும் கூட பாடனுமென்றாள். அவர்கள் தயாராவதற்குள் பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டாள். அனைவரும் என்னோடு சேர்ந்து பாடவேண்டுமென சொல்லியபடியே பாடத்தொடங்கிவிட்டாள். “சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! அழகாக படைத்தது யாரு! அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமா பாடிகிட்டு அழகாக படைத்தது ...