Skip to main content

மாணவர்கள் கொண்டாடிய சுதந்திர தினவிழா

சுதந்திரதின விழாவில் கொடியேற்றி துவக்கி வைப்பதற்காக, மாணவர் நல சங்கம் சார்பில் என்னை அழைத்திருந்தார்கள். முப்பதாண்டுகாலமாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவன் என்ற தகுதி ஒரு காரணமாக இருக்கலாம். மிக முக்கியமான இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக என்னை தயார் செய்துகொண்டிருந்தேன். அப்போது கதவு தட்டப்படும் ஓசைகேட்டு திறந்தேன். கையில் தேசியக்கொடியோடு மாணவர்கள் சீருடையில் வந்திருந்தனர். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. வாங்க! வாங்க! என்று பரவசத்தோடு உள்ளே அழைத்தேன். அனைவரும் ஒரே குரலில் “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! கொண்டாடுவோம்! என்றபடியே ஒரு வண்ண காகிதத்தை கையில் கொடுத்துவிட்டு அடுத்த வீட்டிற்கு சென்றுவிட்டனர். சுதந்திரமே மாணவர் உருவில் வீட்டு வந்தது போல இருந்தது.

அவர்கள் கொடுத்துச்சென்ற காகிதத்தின் இரு பக்கத்திலும் பதினைந்து என்று எண்ணால் எழுதப்பட்டிருந்தது. மெல்ல பிரித்து பார்க்க அது எட்டாக மடிக்கப்பட்டிருந்தது. இது சுதந்திரதினத்தை குறிக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. காகிதத்தின் உள்ளே “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! வறுமையற்ற வளமான ஓர் இந்தியாவை உருவாக்குவோம்! ” என்று அழகாக வண்ண மைய்யில் கைப்பட எழுதப்பட்டிருந்தது. மாணவர்களுக்கே உரிய இந்த புதுமையான உத்தி சுதந்திரதினத்தை ஆழமாக நெஞ்சில் பதித்துவிட்டது. வீடு வீடாக தேசியக்கொடியோடு சென்று இந்த வண்ணக் காகிதத்தை கொடுத்தது உண்மையிலேயே மக்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கும். நினைக்க நினைக்க இன்பமாக இருந்தது. சுதந்திரம் குறித்த சிந்தனையை என்னுள்ளும் எழுச்சிபெற வைத்துவிட்டது.

அப்பொழுதுதான் அன்றைய செய்தித்தாள் என் வீட்டில் வந்து விழுந்தது. எடுத்து பார்த்த போது, சுதந்திரம் குறித்த நேருவின் சிந்தனையை இந்திய அரசு விளம்பரமாக வெளியிட்டிருந்தது. “ நமது தலைமுறையின் மிகச் சிறந்த மனிதர்கள் கொண்டிருந்த லட்சியம் ஒவ்வொரு கண்ணிலும் வழிகிற கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்பதுதான். அது நமக்கு எட்டாத லட்சியமாக இருக்கலாம்.ஆனால் கண்ணீர் என்பது இருக்கும் வரையிலும், துன்பம் என்பது இருக்கும் வரையிலும் நமது பணி ஓயப்போவதில்லை” ஜவகர்லால் நேருவின் இந்த சிந்தனையும் மாணவர்களின் சிந்தனையும் ஒரே நேர்க்கோட்டில் இணைவதாக உணர்ந்தேன். மாணவர்களின் இந்த செயலூக்கம் மிக முக்கியமானதாக எனக்கு பட்டது.

“விழாவிற்கு வாருங்கள்!” என்ற செல்பேசியின் அழைப்பு என் சிந்தனையைக் கலைத்தது. உடனே தயாராகி விழா மேடையை நோக்கி சென்றேன். “கொடியது! கொடியது! இளமையில் வறுமை! கொடியது! கொடியது!” என்ற அவ்வை பாட்டியின் வரிகள் ஒளி அச்சாக மேடை அருகே தொங்கிக்கொண்டிருந்தது. பசியின் கொடுமை மீண்டும் வந்து தாக்குமோ என்ற அச்சம் எந்த மனிதருக்கும் வந்துவிடக்கூடாது என்ற வள்ளூவரின் வரிகள் அவரின் படத்தோடு மறுபக்கத்தில் மாட்டப்பட்டிருந்தது. மேடையை நெருங்க நெருங்க உற்சாகம் கூடிக்கொண்டேயிருந்தது.

அப்போதுதான் தேசியக்கொடியோடு இன்னொரு மாணவர்கள் குழு தூரத்தில் வருவதை கவனித்தேன். ஒரு தள்ளுவண்டியில் நிறைய புத்தகங்களை அடுக்கி, தெரு வழியாக விற்றுக்கொண்டு வருவதைப் பார்க்க முடிந்தது. புத்தகங்களை மக்கள் ஆர்வமாக வந்து தொட்டுப் பார்ப்பதும் வாங்குவதுமாக இருந்தனர். எனக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை. மாணவர்களின் இந்த செயலூக்கம் என்னை திக்கு முக்காட வைத்துவிட்டது. தொலைக்காட்சிகளின் ஓயாத விளம்பர ஓசைக்கிடையில் அமைதியாக ஓர் புத்தகம் படிப்பதன் பயன் சொல்லி மாளாது, என்ற சிந்தனை பட்டென் பூக்க மெல்ல மாணவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டேன். நானும் ஒரு புத்தகம் வாங்கி, மாணவர்களை மனதார பாராட்டி மகிழ்ந்தேன். என்னால் அத்துடன் நிற்க முடியவில்லை. மாணவர்களின் இந்த புனிதமான செயல்பாடு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணம் சட்டென தோன்றியது.

அப்பொழுதுதான், என்னை மேடைக்கு வந்து தலைமையேற்று தேசியக்கொடியை ஏற்றுமாறு விழாக்குழுவினர் ஒலிபெருக்கியில் அழைத்துக்கொண்டிருந்தார்கள். அதற்குள் நானும் மாணவர்களோடு மேடைக்கு அருகில் வந்துவிட்டோம். நான் மட்டும் மேடையில் ஏறி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தால் மட்டும் போதாது என்று உணர்ந்தேன். உடனே அனைத்து மாணவர்களையும் மேடைக்கு வரும்படி அழைத்தேன்.

விடுதலைக்காக போராடியவர்களின் லட்சியங்கள் உண்மையில் ஈடேறி உள்ளனவா என்பதை அனுபவப்பூர்வமாக மாணவர்கள் மதிப்பிட வேண்டும். அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் எதிர்காலத்திற்கான இலக்குகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்றுநான் பேசியபோது மாணவர்கள் கைதட்டி வரவேற்றார்கள். மேலும் “ இந்த சுதந்திரதின விழாவை புத்தகவிற்பனையோடு புதிய முறையில் கொண்டாடியது மிக முக்கியமான திருப்புமுனை என்பதை உணர்ந்து தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்” என்று பாராட்டி பேசினேன். அதற்கு மேல், என்னால் மட்டும் இந்த தேசியக்கொடி ஏற்றப்படுவதை என் மனம் விரும்பவில்லை. உடனே அனைத்து மாணவர்களோடும், ஊர் பெரியவர்களோடும் சேர்ந்து தேசியக்கொடியை ஒன்றாக இணைந்து ஏற்றினோம். கைதட்டல் ஓசை ஊரெங்கும் ஒலித்தது. அப்பொழுதுதான் என் மனம் லேசாகி அமைதி அடைந்தது. எதிர்காலம் நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு விழாமுடிந்து வீடு திரும்பினேன்.

Comments

  1. உங்க இந்த அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கிறது அய்யா.
    பகிர்வுக்கு நன்றி.
    வாழ்க விடுதலை.

    ReplyDelete
  2. புதுச்சேரி அன்பழகன்August 23, 2010 at 12:58 AM

    கருணாகரனுக்கு நன்றி ! நமது அனுபவங்கள் மிக முக்கியமானவை .சேர்ந்தே சிந்திப்போம் வாருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது....