Skip to main content

கிரிக்கெட் சூதாட்டம்

பார்த்தும் பேசியும்

பரவசப்பட்டுப்போன

எங்கள் நெஞ்சில் வலி!


நெறிகெட்டுப்போன உங்களால்

நெஞ்சில் வலி

நெறிகட்டிக்கொண்டிருக்கிறது!


தாய்நாட்டிற்காக ஆடச்சொன்னால்

இப்படி ,

தரகுக்கு ஆடிவிட்டீர்களே!


நீங்கள் பேட்ஸ்மேன்களா?

அல்லது

பகடைக்காய்களா?


விக்கெட்டுக்களை வீழ்த்திய நீங்கள்

உங்களை நீங்களே

வீழ்த்திக்கொண்டது

விசித்திரம்தான்!


எல்லாவற்றையும் மாட்டிக்கொண்டு

களத்தில் இறங்கிய நீஙகள்

இதயத்தை மட்டும்

எங்கே கழற்றி வைத்தீர்கள்!


நீங்கள் பெவிலியனுக்கு

திரும்பும் போதெல்லாம்

நாங்கள் வருத்தப்படுவோம்

ஆனால், நீங்கள்

மகிழ்ந்திருப்பீர்கள் என்று

இப்போதுதான் தெரிகிறது!


உங்கள் ரன்களை

வாசித்தறிந்த ரசிகர்கள்

உங்கள் , ரணங்களை

வாசிக்கிறார்கள்!

உங்கள் விக்கெட்டுக்களை

வாசித்தறிந்த ரசிகர்கள்

உங்களை நீங்களே

விற்றுக்கொண்டதை வாசிக்கிறார்கள்!


கடைசி ஓவரில் இதயம் துடிதுடிக்க

நீங்கள் ஆடினீர்களோ என்னவோ

நாங்கள் இதயம் துடிதுடிக்கத்தான்

பார்த்துக்கொண்டிருந்தோம்!


ஆனால் , ரசிகர்கள் சிலர்

கடைசி ஓவரின் கடைசி பந்தில்

தங்கள் இதயதுடிப்பையே

நிறுத்திக்கொண்டார்களே!

அவர்களின் ஆத்மாவிற்கு

என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்!


தேசத்தின் வந்தேமாதரப்பாடல்களில்

வந்து போவது

உங்கள் முகமா? அல்லது

முகமூடியா?


முகமூடிகள் ஆட்சிசெய்யும் தேசத்தில்

இன்னும் எத்தனை முகமூடிகள்

வந்து விழுமோ

யார் அறிவார்?


நீங்கள் ஆடியதும் ஓடியதும்

நாட்டுக்கா?

இல்லை உங்கள் வீட்டுக்கா?


வீழாதிருப்பவன்தான் வீரன்

இப்படி வீழ்ந்து கிடக்கீறீர்களே

ஞாயமா?


எம் ரசிகர்கள் கிரிக்கெட்டை

கை கழுவ தயாராயில்லை

உங்கள் மனங்களை கழுவவே

துடிக்கீறார்கள்!


கிரிக்கெட்டில்

விக்கெட்டுகள் வீழும்

கிரிக்கெட்டே வீழ்ந்து போகுமா?


அம்மாவின் முந்தானைக்காசைத்

திருடியாவது, எம் ரசிகர்கள்

கிரிக்கெட் ஆடிக்கொண்டுதான் இருப்பார்கள்!

ஆனால் எம் ரசிகர்கள்

ஆடும் ஆட்டம் நிஜமானது

நீங்கள் எப்போது நிஜமான

ஆட்டத்தை ஆடப்போகிறீர்கள்!


Comments

  1. புதுச்சேரி அன்பழகன்February 14, 2011 at 8:39 PM

    உங்களின் சரியான விமர்சனத்திற்கு நன்றி !

    ReplyDelete

Post a Comment