Skip to main content

நான் ஒன்றும் காக்கை அல்ல !

 


நான் ஒன்றும் காக்கை அல்ல !

அன்று பள்ளிக்கூடம் திறந்த முதல் நாள். மாணவ மாணவியர்கள் முக மலர்ச்சியோடு பார்க்க அழகாக வந்திருந்தார்கள். இந்த விடுமுறையில் தாங்கள் பார்த்த கேட்ட அனுபவங்களை எப்படியாவது சொல்லிவிட துடித்தார்கள். பக்கத்தில் தமது நண்பர்களோடு பேசி பேசி மகிழ்ந்தார்கள். குழந்தைகளின் இந்த இரைச்சலான சப்தம் ஆசிரியரான என்னைப் பொறுத்தவரை மகிழ்வான சப்தமே! இசையை ரசிப்பதைப்போல என்னால் கேட்டுக்கொண்டிருக்க முடியும். இந்த முதல் வகுப்பில் மாணவ மாணவியர்கள் சொல்வதை கேட்பதைத் தவிர நான் எதுவும் செய்வதில்லை.

      அப்பொழுது ஒரு மாணவி என்னை நோக்கி ஓடி வந்தாள். அவள் வரைந்த  ஓவியத்தை ஒவ்வொன்றாக எனக்கு காண்பித்தாள். முதல் ஓவியத்தில் நெஸ்ட்(NEST) என்று எழுதியிருந்தது, அடுத்து அதன் தொடர்ச்சியைக் காட்டும்  ஒரு அம்புக்குறி. அதன் மேல் நெக்ஸ்ட்(NEXT) என்று எழுதியிருந்தது. அப்புறம் திரும்பவும் அதேபோல் நெஸ்ட்(NEST) நெக்ஸ்ட்(NEXT), நெஸ்ட்(NEST) நெக்ஸ்ட்(NEXT) என்று போய்க்கொண்டிருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.

                    NEST   NEXT>  NEST   NEXT> NEST   NEXT> NEST

      இந்த ஓவியமும் அழகாக இருக்கிறது. இதன் மூலம் நீ என்ன சொல்ல வருகிறாய்! என்று அன்போடு கேட்டேன். சார்! அடுத்த ஓவியத்தைப் பாருங்க புரியும் என்றாள்.

 ஒரு காக்கை தன் கூட்டைக் கட்டிக்கொண்டிருப்பது போல வரையப்படிருந்தது. அடுத்து அதன் தொடர்ச்சியைக் காட்டும்  ஒரு அம்புக்குறி. மீண்டும் ஒரு காக்கை தன் கூட்டைக் கட்டிக்கொண்டிருப்பது போல வரையப்படிருந்தது, அடுத்து அதன் தொடர்ச்சியைக் காட்டும்  ஒரு அம்புக்குறி. மீண்டும் மீண்டும் அதே காட்சி  வரையப்படிருந்தது. இப்படி அந்த ஓவியம் போய்க்கொண்டே இருந்தது.

இந்த காட்சி என்னுள் அப்படியே பதிந்துவிட்டது, இதில் ஏதோ கதை இருப்பது போல எனக்கு பட்டது. இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அவளை வெகுவாக பாராட்டினேன்.அவள் அக மகிழ்ந்து இன்னும் இருக்கிறது என்று சொல்லி அடுத்த பக்கத்தைக் காட்டினாள்.

அதில் முதலில் ஒரு குடிசை வீடு வரையப்படிருந்தது, அதன் கீழே இது எனது பாட்டியின் பாட்டி  வீடு என எழுதப்பட்டிருந்தது அடுத்து அதன் தொடர்ச்சியைக் காட்டும்  ஒரு அம்புக்குறி. இப்பொழுது ஒரு ஓடு வேயப்பட்ட வீடு வரையப்படிருந்தது, அதன் கீழே இது எனது பாட்டியின்   வீடு என எழுதப்பட்டிருந்தது. அடுத்து அதன் தொடர்ச்சியைக் காட்டும்  ஒரு அம்புக்குறி இப்பொழுது ஒரு மெத்தை விடு  வரையப்படிருந்தது, அதன் கீழே இது எனது அம்மாவின் வீடு என எழுதப்பட்டிருந்தது. அடுத்து அதன் தொடர்ச்சியைக் காட்டும்  ஒரு அம்புக்குறி.  இப்பொழுது குடிசை வீடு, ஓடு வேய்யப்பட்ட வீடு மெத்தை வீடு எல்லாம் இணைந்த ஒரு புதிய வீடு வரையப்பட்டிருந்தது. அதன் கீழே இது எனது புதிய வீடு என எழுதப்பட்டிருந்தது. இப்படியாக அந்த ஓவியம் ஒரு வழியாக முடியுற்று இருந்தது.

இந்த ஓவியத்தைப் பார்த்து நானே சற்று அசந்து போய்விட்டேன். இதை அவளே வண்ணப் பென்சிலால் வரைந்திருந்தாள். நாண்காம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பிற்கு வந்திருக்கும் இந்த மாணவிக்கு ஓவியத்தில் கருத்து சொல்லும் அளவிற்கு அவள் சிந்தித்திருப்பாள் என்று நான் கருதவில்லை. இந்த விடுமுறையில் அவள் பாட்டி வீட்டிற்கு சென்று வந்துள்ளாள் என்பது மட்டும் புரிகிறது. அவள் அங்கே பார்த்த காட்சிகளை ஓவியமாக வரைந்திருக்கிறாள். இது பற்றி அவளிடம் அப்புறம் கேட்கலாம் என்று எண்ணியபடியே அவளை மீண்டும் பாராட்டினேன். இன்னும் எனக்கு நிறைய படங்களை  வரைந்து காட்டு என அன்பாக சொன்னேன். அவள் மகிழ்ந்தபடியே துள்ளிக் குதித்தாள். அவள் மகிழ்ச்சியில் மிதந்தாள்.

அடுத்த நாள் அந்த மாணவியிடம் இன்னும் ஏதாவது ஓவியம் இருக்கிறதா? என கேட்டேன். அவள் இல்லை என்று தலையசைத்தாள். அது சரி  நேற்று அழகா ஒரு ஓவியம் எடுத்து வந்தீங்களே! அந்த ஓவியத்தை நீங்க ஏன் வரைந்தீங்க? என  கேட்டேன்.

ஓ அதுவா என ஆவலோடு சொல்ல ஆரம்பித்தாள்.

எங்க வீட்டிற்கு அருகில் ஒரு மரம் இருக்கிறது. அந்த மரத்தில ஒரு காகம் கூடு கட்டுவதை நான் பார்த்தேன். சின்னச் சின்ன குச்சிகளை தன் வாயில் வைத்து எடுத்துச் சென்றதை நான் பார்த்தேன். கொஞ்ச நாள்ல ஒரு கூட்டை கட்டி முடித்துவிட்டது. நான் தினமும் அதைப் பார்ப்பேன். அதுபோல நாமும் ஒரு வீடு கட்ட வேண்டும் என ஆசை வந்தது. அதை என் அம்மாவிடம் சொன்னேன். அவங்க அதெல்லாம் நீ பெரியவளா வளர்ந்த பிறகு கட்டிக்கலாம் என சொல்லிட்டாங்க!

 அப்புறம் என்னாச்சு!  சரி! நீங்க உட்கார்ந்தபடியே மீதி கதையைச் சொல்லுங்க என்றேன்.

அம்மா! நீ எப்படிமா வீடு கட்டணஎன கேட்டேன். நம்மால காகம் மாதிரி தனியா வீடு கட்ட முடியாது. நாம அதற்கான பணத்தை சேர்த்து வைக்கனும். அப்புறம் இஞ்ஞினியர். மேஸ்திரி போன்ற இதர மனிதர்களோட ஆதரவோடுதான் நாம வீடு கட்ட முடியும். “அப்ப! நம்ம பாட்டியும் அப்படிதான் வீடு கட்டணாங்களா!” என்றேன். இதெல்லாம் உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது! நாம எல்லா வீட்டிற்கும் போகலாம் என்று சொல்லி என்னை அழைத்துச் சென்றார்கள்.

அப்பதான் நான் எங்க பாட்டியின் அம்மா வாழ்ந்த  குடிசை வீட்டைப்பார்த்தேன். அப்புறம் எங்க பாட்டியின் ஓடு வேய்யப்பட்ட  வீடு, எங்க அம்மாவின் மெத்த வீடு எல்லாம் பார்த்தேன்.அப்படியே எல்லா வீட்டு மரத்திலேயும் காகத்தின் வீட்டையும் பார்த்தேன். எனக்கு ஒரே ஆச்சரியம். எப்படி காக்கா மட்டும் ஒரே மாதிரி வீடு கட்டுது.நாம மட்டும்  ஏன் மாத்தி மாத்தி வீடு கட்டுறோம் என அம்மாவிடம் நான் கேட்டேன். அதெல்லாம் நீ பெரியவளா வளர்ந்த பிறகு எல்லாம் புரியும் என்று சொல்லிட்டாங்க சார்! என்றாள்.

அப்புறம் நான் என்ன செய்ய ! வீட்டுல போயி அப்படியே இதெல்லாம் வரைய ஆரம்பிச்சிட்டேன்.

சரி! சரி! உங்க கதை அருமையாக இருக்கிறது. “நீங்க ஏன் அந்த காக்கா போல ஒரே மாதிரி வீடு வரையல?”

இப்பதான் எனக்கு எல்லாம் தெரிந்துவிட்டதே! ஆதான் நான் எங்க பாட்டி வீடு, அப்புறம் எங்கம்மா வீடு எல்லாம் சேர்த்து வரைந்துவிட்டேன்என்று அவள் சொன்னவுடன் நான் சற்று தயங்கியபடியே அவள் முகத்தைப் பார்த்தேன். நான் யோசிப்பது தெரிந்தவுடன். “ அய்யோ! நான் ஒன்னும் காக்கா இல்லையே! அப்படியே மாத்தாம கட்டுவதற்குஎன்று சட்டென பதில் வந்தது.

நான் அப்படியே அசந்து போனேன். இப்படி பளிச்சென்று ஒரு பதில் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை! என் முகமாற்றத்தை அவள் கவனிக்கும் முன்பாக சட்டென நானும் ஒரு சாக்லெட்டை எடுத்து கொடுத்து சமாளித்து விட்டேன். அந்த மாணவியும் மகிழ்ந்தபடியே அவள் இடத்தில் போய் அமர்ந்து கொண்டாள்.

இப்பொழுது எனக்குள் சிந்தனை ஓட ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் அன்றைய வகுப்பை முடித்துவிட்டு அடுத்த  வகுப்பிற்கு சென்றுவிட்டேன்.

நான் வீடு வந்து சேர்ந்தாலும்நான் ஒன்னும் காக்கா இல்லையேஎன்ற வார்த்தை என்னுள் ஓடிக்கொண்டிருந்தது. நாம பாடம் நடத்துறமா! இல்ல பிள்ளைகள் நமக்கு பாடம் நடத்துகிறார்களா! என்ற சந்தேகம் எனக்குள் அடிக்கடி ஏற்படுவதுண்டு. கற்பித்தலும் கற்றலும் புரிதலை இரண்டு பக்கமும் விரிவுப் படுத்துவதாகவே எனக்கு பட்டது.

பறவைகள் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு இடையேயான அந்த பரிணாம இடைவெளி எத்தனை மகத்தானது என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. காக்கை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தன் கூடு கட்டும் விதத்தை மாற்றப் போவதில்லை. ஆனால் வாழ்க்கை இன்னும் புரியாத அந்த நாண்காம் வகுப்பு மாணவி தன் முன்னோர்கள் கட்டியது போல் அப்படியே விடு கட்ட எண்ணாமல் , அவளவில் ஒரு புதிய வீடாக அவளால் கற்பனை செய்ய முடிகிறது. இதுதான் பரிணாம வளர்ச்சியின் உச்சம். மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய அந்த இடைப்பட்ட காலத்தின் மகத்தான மாற்றத்தை அறிய என் மனம் துடித்தது.

அதுமட்டுமல்ல! அந்த சிறுமியின் படைப்பாற்றல் வெளிப்பட்ட விதம் அற்புதமானது. அதில்தான் அவளுக்கு எவ்வளவு மகிழ்ச்சி. இத்தகைய மகிழ்ச்சியை அந்த காகம் அடைய முடியுமா? மனிதனின் சிந்தனையும் உழைப்பும் இணைந்த இந்த செயல்தான் எவ்வளவு அற்புதமானது!.

அதுமட்டுமா தனது கலைப்படைப்பின் மூலம் தான் உணர்வுமிக்க உயிரினம் என்பதை மனிதன் நிருபித்துக்கொண்டெ  இருக்கிறான். இப்படியான் சிந்தனை என்னுள் எழுந்து கொண்டே இருந்தது.

அடுத்த நாள் வகுப்பிற்கு செல்ல இன்றே எனக்கு  உற்சாகம் கூடிவிட்டது.

 

Comments

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ்

  இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ் ---- புதுச்சேரி அன்பழகன்.          " டாக்டர் யெல்லபிரகட சுப்பாராவ்   என்ற இந்திய விஞ்ஞானி வாழ்ந்ததால் இன்று உலக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று அவரைப்பற்றி நன்கு அறிந்த அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். மருத்துவ உலகிற்கு பல கண்டுபிடிப்புகளையும் பல முன்னெடுப்புகளையும் வழங்கிய அதிசய மனிதர் என்றும் அவர் போற்றப்படுகிறார்.. ஆனாலும் அவரைப்பற்றி   அதிகமாக நாம் கேள்விப்பட்டிருக்க   வாய்ப்பில்லை.         ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரம் என்ற ஊரில் ஒரு ஏழை தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் 1895-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள்   யெல்லபிரகட சுப்பாராவ்   பிறந்தார். தற்போதைய கோவிட்-19 தொற்று போல அன்றைக்கு பிளேக் என்ற தொற்று நோய் பரவியதால் இவரின் தந்தை காலமானார். தன் தந்தையின் இழப்பை சுப்பாராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார்.     தந்தையின் வருமானம் இல்லாமல் குடும்பம் தவித்...

உலகத்தைப் படைத்தது யாரு?

நா ளை எவ்வாறு பாடத்தை எளிமையாக நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதுவும் உலகம் தோன்றியது எப்படி என்பதை நான் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். உலகம் தோன்றியது எப்படி என்று நான் சொல்லத்தொடங்கும் முன் , அது முன்பே படைக்கப்பட்டுவிட்டது என்ற பதில்தானே உடனே வரும்!?. அப்பொழுதுதான் என் மகள் ஓடி வந்து எனது சிந்தனையைக் கலைத்தாள். அப்பா! அப்பா! எங்கள் ஆசிரியர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க , பாடட்டுமா? என ஆவலோடு கேட்டாள். சரி! பாடு கேட்கலாம் என்றேன். உடனே அவள், நான்பாடும்போது நீங்களும் பாடனும்பா! என்றாள். நான் சரி என்று சொல்வதற்குள் அம்மாவும் அக்காவும் கூட பாடனுமென்றாள். அவர்கள் தயாராவதற்குள் பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டாள். அனைவரும் என்னோடு சேர்ந்து பாடவேண்டுமென சொல்லியபடியே பாடத்தொடங்கிவிட்டாள். “சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! அழகாக படைத்தது யாரு! அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமா பாடிகிட்டு அழகாக படைத்தது ...