Skip to main content

மாணவர்கள் கொண்டாடிய அறிவியல் விழா!


    
        காலை இறைவணக்கத்தை முறைப்படி செலுத்துவதற்காக மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் வரிசையாக நிற்கத் தொடங்கினார்கள். ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களை ஒழுங்கு படித்தியபடியே மேடைக்கு வந்தார்கள். சற்று நேரத்தில் பள்ளியின் முதல்வரும் மேடைக்கு அருகில் வரவும்,, மாணவர்களிடையே சப்தம் படிப்படியாக குறைந்து அமைதி நிலவியது. மாணவத் தலைவர் இறைவணக்கத்தை ஆரம்பித்து வைக்க, மாணவர்கள் ஒரே குரலில் பாடி முடித்தார்கள். சில முக்கியச் செய்திகள் மற்றும் அறிவிப்புகளோடு அன்றைய இறைவணக்க நிகழ்வு முடிவுக்கு வந்தது.


மாணவர்கள் தத்தம் வகுப்பிற்குச் செல்லத் தொடங்கினார்கள். மைதானம் வெற்றிடமாக மாறியது. சிறிது நேரத்தில் மீண்டும் சில மாணவர்கள் மைதானத்தை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்களுக்குள் பேசிக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக ஓடினார்கள். பள்ளி முதல்வர் தொடங்கி ஆசிரியர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏன் சில மாணவர்கள் மட்டும் மீண்டும் ஏதோ அணிவகுப்பு நடத்த முயற்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை!.


மீண்டும் மைதானத்தில் ஓடிய மாணவர்கள் ஏதோ ஒரு ஒழுங்கிற்கு வந்தது போல தெரிந்தது. குறுக்கும் நெடுக்குமாக ஒரு அட்டவணையைப் போல மாணவர்கள் அழகாக நின்றார்கள். சட்டென வேதியியல் ஆசிரியருக்கு புரிந்து விட்டது. என்னதான் நடக்குது பார்ப்போமென அவரும் ஆர்வமானார்.


பள்ளி முதல்வர் உட்பட அனைத்து ஆசிரியர்கள் கவனமும் மாணவர்களின் இந்த புதிய அணிவகுப்பை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.


ஒரு அட்டவணையைப்போல அணிவகுத்த மாணவர்கள் திடீரென ஆளுக்கொரு அட்டையை தூக்கிப் பிடித்தார்கள். அதில் தனிமங்களின் குறியீடுகள் எழுதப்பட்டிருந்தன. 

ஆசிரியர்களுக்கு புரிய ஆரம்பித்துவிட்டது. தனிமங்களின் இந்த அட்டவணையை மெண்டலேயேவ் என்ற அறிவியலாளர் தயாரித்து 150 ஆண்டுகள் கடந்துவிட்டது. இதை உலகம் முழுவதும் தற்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நமது மாணவர்களும் இப்படி புதிய முறையில் கொண்டாடுவது பாராட்டுக்குரியது என்ற சிந்தனை ஆசிரியர்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.


அதற்குள் ஒரு மாணவன் ஒரு பெரிய கொடியை கம்பீரமாக வீசியபடியே மாணவர்களின் அணிவகுப்பைச் சுற்றிச் சுற்றி வந்தான். அந்த கொடியின் ஒரு பக்கத்தில் விஞ்ஞானி மெண்டலயேவின் உருவம் வரையப்பட்டிருந்தது. மறுபுறம் 150 என்று எண்ணால் எழுதப்பட்டிருந்தது. அனைவரும் அந்த கொடியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த கொடியை உயர்த்திப் பிடித்தப்படியே மையத்தில் வந்து நின்றான் அந்த மாணவன்.


வகுப்பறைக்குச் சென்ற மாணவர்கள் மீண்டும் மைதானத்திற்கு வந்து என்ன நடக்கிறது என பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.


சில மாணவர்கள் ஒன்றுகூடி அறிவியல் கொடி என்ற ஒரு புதிய குழுவை உருவாக்கி இருந்தார்கள். அதாவது பள்ளியின் மைதானத்தில் அறிவியல் கொடியை ஒரு புதிய கொடிக்கம்பத்தில் பறக்க விடுவது. இந்த அறிவியல் கொடிக் குழு கூடி எந்த விஞ்ஞானியை கொண்டாட விரும்புகிறதோ அவரின் படம் பொறித்த கொடியை உருவாக்கி அந்த அறிவியல் கொடிக்கம்பத்தில் பறக்க விட்டு அவருக்கு மரியாதை செய்வது. அதோடு அவரைப்பற்றிய கருத்துக்களை கற்றுத் தேர்ந்து மாணவர்களிடையே பரப்புவது. 


அதன் படி கொடியை மாணவர்களிடம் அறிமுகம் செய்துவிட்டு புதிய கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்ற சில மாணவர்கள் கொடிக்கம்பத்தை நோக்கிச் சென்றனர். ஏற்கனவே தயாரித்து வைத்தக் கொடியை அனைவரும் ஏற்றினார்கள். கொடியேற்றப்பட்ட பொது பட்டென்று மெலிதாய் ஒரு சப்தம் கேட்டது. அப்பொழுது கொடியிலிருந்து பிக்பேங், யுனிவர்ஸ், மற்றும் நெபூலா போன்ற வார்த்தைகள் வண்ண மத்தாப்புக்களாய் வெடித்துச் சிதறி விழுந்தன. மாணவர்கள் துண்டு துண்டாய் சிதறி விழுந்த வண்ணக் காகிதங்களை பறந்து வரும்போதே கைகளால் தாவிப் பிடித்தனர். சற்று நேரத்தில் ஒரே மகிழ்ச்சி ஆரவாரம்.


அய்யா! எனக்கு ஹைட்ரஜன் கிடைத்தது என ஒரு மாணவி கையை உயர்த்தினாள். அதில் ‘H’ என்ற எழுத்து ஒளிர்ந்தபடியே இருந்தது. அய்யா! என்று இன்னொரு மாணவி கையை உயர்த்தினாள் . அதில் O2 என்ற எழுத்து ஒளிர்ந்தபடியே இருந்தது. இப்படியே ஒவ்வொரு மாணவரும் கைகளை உயர்த்த உயர்த்த 118 தனிமங்களின் குறியீடுகளும் ஒரே நேரத்தில் ஒளிர்ந்தது. மாணவர்கள் உற்சாகமாக துள்ளிக் குதித்தனர். ஒரே சப்தம். மாணவர்கள் மகிழ்ந்து! மகிழ்ந்து! “மெண்டலியேவ்” வாழ்க! வாழ்க! என கோஷமிட்டனர். ஆசிரியர்களும் இந்த ஆரவாரத்தில் தங்களையும் இணைத்துக்கொண்டனர். இந்த மகிழ்ச்சியின் ஆரவாரம் அடங்க சற்று நேரமானது.


அப்பொழுது ஒரு மாணவன் மேடைக்கு அருகே இருந்த ஒலிப்பேருக்கியை நோக்கிச் சென்றான். மாணவர்களை நோக்கிக் கையை அசைத்துவிட்டு பேசலானான்.


முதலில் எங்களை மன்னிக்குமாறு பள்ளி முதல்வர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களையும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம். உங்களிடம் அனுமதி பெறாமல் இப்படி ஒரு விழாவை ஏற்பாடு செய்துவிட்டோம். யாரும் எதிர்பாராத நேரத்தில் வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்து, இவ்விழாவை தொடங்கிவிட்டோம். உங்களின் பலத்த கரவொலி மூலம் இவ்விழா தொடர்ந்து நடக்க அனுமதி அளிக்குமாறு அன்போடு மாணவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்றான் அந்த மாணவன். உடனே ஆசிரியர்கள் உள்பட அனைவரும் கரவொலி எழுப்பி உற்சாகப்படித்தினார்கள். உங்களின் பலத்த ஆதரவுக்கு நன்றி! 


இந்நேரம் நாங்கள் என்ன செய்தோம் என்பதை நன்றாக அறிந்திருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்றபடியே அந்த மாணவன் தன் பேச்சைத் தொடர்ந்தான். 


இந்த பிரபஞ்சமே தனிமங்களால் ஆனதுதான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த பூமியில் கிடைக்கக்கூடிய தனிமங்களை அறிவியலாளர்கள் ஆராய்ந்து கொண்டே இருந்தார்கள். அதில் ஏதோ ஒரு ஒழுங்குமுறை இருப்பதாக உணர்ந்தார்கள். அதன்மூலம் தனிமங்களை இன்னும் சரியாக புரிந்து கொள்ளலாம் என ஆய்வை மேலும் தொடர்ந்தார்கள். இப்படிப்பட்ட ஆய்வை மேற்கொண்டவர்தான் மெண்டலவேவ் ஆவார். இவர் தனிமங்களின் அணு எடையை அடிப்படையாக வைத்து ஒரு அட்டவணையை உருவாக்கினார். மேலும் இந்த அட்டவணையில் ஒரு சில இடங்களை காலியாக விட்டார். இது பல புதிய தனிமங்களை கண்டுபிடிக்க உதவியது. இந்த அட்டவணை வெளியான பின்னால்தான் வேதியியல் என்பது மேலும் பல முன்னேறங்களை அடைந்தது. அதுமட்டுமல்லாது வேதியியல் வினைகள் குறித்தப்பார்வை மேலும் மேலும் தெளிவாக புரிந்தது. அறிவியல் உலகம் இதை கொண்டாடத் துவங்கியது. இதனால் உலக மக்கள் பல நன்மைகளைப் பெற்றார்கள். 


இந்த அட்டவணை உருவாகி சரியாக 150 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைக்கு இந்த நிகழ்வை உலகமே கொண்டாடுகிறது. இதை நமது பள்ளியிலும் கொண்டாடுவது என முடிவு செய்து இப்படி உங்கள் முன்னால் கொண்டாடிவிட்டோம். ஏதேனும் குறை இருந்தால் ஆசிரியர்கள் மன்னிக்க வேண்டுகிறோம்” என்று அந்த மாணவன் பேசி முடித்தான்.


அப்பொழுது மாணவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. எல்லாம் சரிதான்; இந்த தனிமங்கள் எல்லாம் மண்ணில் உருவானதாக ஒரு சில மாணவர்கள் சொல்கிறார்கள். இல்லையில்லை அது விண்ணில் உருவாகி மண்ணுக்கு வந்தவை என மற்ற மாணவர்கள் சொல்கிறார்கள். இதில் எது சரி! இப்படி மாணவர்களுக்குள் பேசிக்கொண்டதால் சலசலப்பு உருவாகிவிட்டது. இந்த சலசலப்பு ஓய்வதாக தெரியவில்லை.


இதை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஒரு மாணவி மேடையேறினாள். மாணவ மாணவியர்களே! சற்று அமைதியாக இருங்கள். உங்கள் கேள்விகள் மிகச்சரியானவை. இந்த நேரத்தில் உங்களின் சரியான சிந்தனை பாராட்டுக்குரியது. என்னால் முடிந்தவரை உங்களுக்கு சொல்கிறேன் என அந்த மாணவி மிக ஆர்வமாக பேசலானாள்.


நாம் காணும் இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்று தெரிந்தால்தான் உங்களின் கேள்விகளுக்கு சரியான பதிலை நாம் பெறமுடியும். அதாவது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் இந்த பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதைப்பற்றி அறிவியலார்கள் கணித்ததை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். 


இடைவிடாத வெப்பமும் அழுத்தமும் ஒரு புள்ளியில் குவிந்து அதிகமாகும் போது காஸ்மிக் துகள்களுக்கிடையே ஒரு பெரும் வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. அந்த பெருவெடிப்பின் நிகழ்வாகத்தான் பிரபஞ்சம் உருவானது. அப்படி உருவான பிரபஞ்சம் விரிந்துகொண்டே இருக்கிறது. இப்படி பிரபஞ்சம் உருவான அதே நேரத்தில் மிகவும் அணு எடை குறைவான ஹைட்ரஜன் , ஹீலியம் போன்ற வாயுக்கள் உருவாகின. தற்போதுகூட இந்த பிரபஞ்சத்தில் 73% சதவீதம் ஹைட்ரஜனும் 25% சதவீதம் ஹீலியமும் உள்ளன என்பதை நாம் அறிவோம். 


இதன் தொடர் நிகழ்வாக பிரபஞ்சத்தின் அழுத்தமும் வெப்பநிலையும் குறையும் பொது விண்மீன்கள் உருவாகின்றன. இந்த விண்மீன்கூட்டங்கள் ஒன்று சேர்ந்து விண்மீன்திரள்களை (galaxies) உருவாக்குகின்றன.

     

ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் தவிர மற்ற தனிமங்கள் விண்மீன்களில்தான் உருவாகின்றன என்றால் நீங்கள் நம்புவீர்களா?. ஆனால் அதுதான் உண்மை. நட்சத்திரங்களும் நம்மைப்போல பிறந்து வளர்ந்து பின்பு இறந்து போகின்றன. அதாவது சூப்பர் நோவாக்களாக மாறி வெடித்து மீண்டும் இந்த பிரபஞ்சத்தில் கரைந்து விடுகின்றன. நட்சத்திரத்தில் உள்ள உயர்ந்த வெப்ப நிலையில்தான் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற தனிமங்கள் தொடர் அணு எதிர்வினை புரிந்துகொண்டே இருக்கின்றன. இந்த தொடர் எதிர்வினை காரணமாக புதிய தனிமங்கள் உருவாகின்றன. அதாவது ஆக்ஜிஜன் தொடங்கி மிக அதிக எடையுள்ள தங்கம், வைரம், யூரோனியம் போன்ற எல்லா தனிமங்களும் நட்சத்திரங்களின் வளர்ச்சிப் போக்கில் தொடர் நிகழ்வாக உருவாகிக்கொண்டே இருக்கின்றன. பின்னர் சூப்பர் நோவாவாக மாறி வெடித்து பிரபஞ்சத்தில் கரைந்து விடுகின்றன. இந்த தூசுக்கூட்டங்கள் திரண்டு பெரும் கோள்களாக உருவாகின்றன. அப்படிதான் நாம் இருக்கும் இந்த பூமியும் உருவானது.


என்ன மாணவர்களே! பிரபஞ்சத்தில் இருந்து பூமிக்கு வந்து விட்டோமா! இதுதான் என்னளவில் நான் புரிந்துகொண்ட தனிமங்களின் வரலாறு. என்னைவிட நமது ஆசிரியர்கள் இன்னும் விரிவாக உங்களுக்குச் சொல்வார்கள் என்றாள் அந்த மாணவி.


இனியும் வேதியியல் ஆசிரியரால் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. மேடையை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்துவிட்டார். வேதியியல் ஆசிரியர் மேடைக்கு வருவதை கவனித்த மாணவர்கள் உற்சாகமாக கரவொலி எழுப்பி வரவேற்கத் தொடங்கிவிட்டனர். ஆசிரியர் மேடைக்கு ஏறி “ அன்புள்ள மாணவ மாணவியர்களே!” என்றவுடன் கரவொலி இன்னும் அதிகமானது. 

இப்படி ஒரு விழாவை ஏற்பாடு செய்தமைக்காக முதலில் உங்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதன் முதலில் “அறிவியல் கொடி” என்ற பெயரில் ஒரு கொடிக்கம்பத்தை நட்டு இவ்விழாவை தொடங்கியதற்காக மீண்டும் உங்களை மனதார பாராட்டுகிறேன். இனி பல அறிவியல் அறிஞர்களின் நினைவை கொண்டாட நமக்கு ஒரு வழி கிடைத்துள்ளது. இனி அறிவியல் கொடி என்பது நமது பள்ளியின் அடையாளமாக மாறிவிடும். அதுமட்டுமல்லாமல் ஒரு விஞ்ஞானிக்கு கொடியேற்றி மரியாதை செய்வது என்பது மிக முக்கியமான நிகழ்வாக எனக்கு தோன்றுகிறது. ஒவ்வொரு கண்டுபிடிப்பும் மக்களின் வாழ்வில் இன்பங்களை தொட்டுக் காட்டிக்கொண்டே செல்கின்றன. கலைஞர்களை கொண்டாடி மகிழும் இந்த பிள்ளைகள் விஞ்ஞானிகளையும் கொண்டாடி மகிழ்வார்கள். அதில் மாணவர்களுக்கு எந்த மனத்தடையும் இல்லை என்பதை இன்றைக்கு நான் நேரில் பார்த்து பெரு மகிழ்ச்கி அடைந்தேன்.


                 மெண்டலயேவ் இன்று உயிரோடு இருந்திருந்தால் உங்களை எல்லாம் பாராட்டி மகிழ்ந்து முத்த மழை பொழிந்திருப்பார். ஆனால் மாணவர்களாகிய உங்களுக்கு இன்னொரு செய்தியை நான் சொல்லியாக வேண்டும்.


இந்த விஞ்ஞானி மெண்டலயேவ் பற்றி நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மெண்டலயேவின் தாயாரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? உண்மையில் அந்த தாயார் தான் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாளர். ஏன் அப்படி சொல்கிறேன் தெரியுமா! அந்த தாய்க்கு மொத்தம் 14 பிள்ளைகள். அந்த 14 பிள்ளைகளில் கடைசி பிள்ளைதான் இந்த மெண்டலயேவ். இந்த பிள்ளைதான் மிகவும் கூர்மதி கொண்டவன் என்பதை அந்த தாய் கண்டுகொண்டாள். அதோடு இவனை எப்படியாவது ஒரு நல்ல கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்பதை உறுதி செய்துகொண்டாள்.


அவர்களின் குடும்பம் சற்று வசதியான குடும்பம்தான்.இவர்களின் முன்னோர்களும் நன்றாக படித்திருந்தனர்.இவரின் தந்தை தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். இடையில் கண்பார்வை போய்விட மெண்டல்யேவின் தாயார்தான் குடும்பத்திற்காக ஒரு கண்ணாடி தொழிற்சாலையில் மேலாளராக வேலைப் பார்த்தார்.அந்த கண்ணாடி தொழிற்சாலை ஒரு தீ விபத்தில் அழிந்து போனது. இதற்கிடையில் அந்த தாயின் கணவரும் திடீரென இறந்துவிட குடும்பம் கழ்டத்தில் ஆழ்ந்தது. இந்தத் தாய் அதை வெற்றிகரமாக சமாளித்ததோடு மட்டுமல்லாமல் இருந்த கொஞ்ச நிலத்தையும் விற்று மெண்டலயேவை மட்டுமாவது மேல் படிப்பு படிக்க வைக்க வேண்டுமென்று உறுதியாக இருந்தாள். 

பலரிடம் விசாரித்து செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்தில் உள்ள நல்ல கல்லூரியில் சேர்ப்பது என முடிவு செய்து விட்டாள். ஆனால் இவர்கள் வசிக்கும் சைபீரியாவின் தெற்கு பகுதி செயிண்ட் பீட்டெர்ஸ்பெர்க்கிலிருந்து கிட்டதட்ட 4000 கிலோமீட்டராகும். அதாவது கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை உள்ள தூரத்தைவிட சற்று அதிகமாகும் என்றால் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். 


ஆனால் இந்த தாய் மனம் சோர்ந்திடவில்லை. தனது மகனை அழைத்துக்கொண்டு இரயிலிலும், பேருந்துகளிலும் மேலும் நடந்தும் ஒருவழியாக செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்தை அடைந்தாள். தனது மகனை ஒரு கல்வியியல் கல்லூரியில் சேர்த்தாள். அங்கிருந்த ஒரு பேராசிரியரிடம் தனது மகனை ஒப்புவித்து, தன்னிடமிருந்த மீதிப்பணத்தையும் கொடுத்து படிக்கவைக்க வேண்டிக்கொண்டார். இப்படி தன் மகனின் கல்விக்காக கடினமாக உழைத்த அந்த தாயும் அடுத்த ஒரு வருடத்தில் காலமாகிவிட்டார். அந்த பேராசிரியரே நமது மெண்டலேயேவை படிக்க வைத்தார். நமது மெண்டலயேவும் நன்றாக படித்து அந்த கல்லூரியிலேயே பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அதன் பிறகு வேதியியலைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு மகத்தான இந்த தனிமங்களின் பட்டியலை அவர் வெளியிட்டார்.


இப்பொழுது சொல்லுங்கள்! அந்த தாயின் மகத்தான உள்ளுணர்வை என்னவென்று சொல்வது! அவர்களின் மன உறுதியும் கடின உழைப்பும் இல்லையென்றால் மெண்டலயேவ் போன்ற ஒரு மகத்தான விஞ்ஞானி உருவாகி இருக்க முடியுமா? 


அன்புள்ள மாணவர்களே! இதுதான் இந்த விழாவின் செய்தியாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். உங்கள் பெற்றோர்க்கு நன்றி சொல்லுங்கள். அவர்களின் உழைப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை. நீங்கள் மெண்டலேயேவ் போல நன்றாக படித்து நாளை நீங்களும் ஒரு விஞ்ஞானியாக மாறவேண்டும் என்று உங்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.


அதுசரி! அந்த தாயின் பெயர் என்ன தெரியுமா?


மெண்டலயேவ் என்பது தான் அந்த தாயின் பெயராகும். உண்மையில் அந்த விஞ்ஞானியின் பெயர் டிமிட்ரிவ் என்பதாகும். டிமிட்ரிவ் கூட மெண்டலயேவும் சேர்ந்தே வந்து விட்டது. இதுதான் அந்த தாய்க்கு செய்யும் மரியாதை ஆகும்.


என்ன மாணவ மாணவியர்களே! “இனி நீங்கள் டிமிட்ரியை மறக்கமாட்டீர்கள்! மெண்டலயேவையும் மறக்கமாட்டீர்கள்!. அதோடு உங்கள் பெற்றோரையும் மறக்க மாட்டீர்கள்! நீங்கள் நன்றாக படித்து வெற்றியாளராக வரவேண்டுமென உங்களை மனதார வாழ்த்தி விடைபெறுகிறேன்” என்றபடியே வேதியியல் ஆசிரியர் மேடையை விட்டு கீழே இறங்கினார்.


மாணவர்களின் கரவொலி அடங்க வெகு நேரமானது. மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். உறுதி எடுத்துக்கொண்டனர்.


விழா முடிவுக்கு வந்தது! என்று விழா குழுவினர் நன்றி பெருக்கோடு எடுத்துக்கூற, மாணவர்ககள் தத்தம் வகுப்பிற்கு பெரும் உற்சாகத்தோடு பாடம் படிக்க உள்ளே சென்றார்கள்..


இப்பொழுது மைதானம் வெறுமையாக இருந்தது. ஆனால் அறிவியல் கொடிக் கம்பத்தில் மெண்டலேயேவ் கம்பீரமாக பறந்து கொண்டிருந்தார்.


Comments

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அந்த நேரம் பார்த்து தலைமை ஆசிரியர் அவரை அழைப்பதாகச் சொல்ல, மாணவ மாணவியரிடம் ஆளுக்கு

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை

வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு

  வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு இ ராபர்ட்   ஐந்தாம் வகுப்பில் புதியதாக வந்து சேர்ந்திருந்தான் . பார்ப்பதற்கு வெள்ளைக்காரரைப் போல சிவப்பாக இருந்தான் . யார் வகுப்பிற்கு வந்தாலும் அவனையே விசாரித்தார்கள் . வகுப்பறையைத் தாண்டி பள்ளி முழுவதுமே அவனையே   வியப்பாக   பார்த்தார்கள் .   இ ராபர்ட் வந்ததிலிருந்து இ ராமு தன் நிறத்தையே அடிக்கடிப் பார்த்துக்கொண்டான் . கருப்பாகவும் இல்லை . வெள்ளையாகவும் இல்லை . இரண்டு நிறமும் கலந்த மாதிரி இருந்தது . நாம் ஏன் சிகப்பாக பிறக்க வில்லை என்று தனக்குள் கேட்டுக்கொண்டான் . சிவப்பாக இருந்தால் ஏன் இப்படி மதிப்பாக பார்க்கிறார்கள்   என்பதை   ராமுவால் புரிந்துகொள்ள   முடியவில்லை . இ ராமு தன் நண்பர்களிடம் அடிக்கடி இது பற்றி கேட்டான் . அதெல்லாம் ஒன்னுமில்லடா , நம்ம கண்ணுக்குத் தான் அப்படி அழகா தெரியுது ! நீ நல்லா படித்து முதல் ரேங்க் எடுத்தா அப்புறம் உன்னைப்பற்றியே எல்லோரும் பேசுவார்கள் . ராமுவுக்கு இது சரி என்று பட்டாலும் . மனம் மட்டும் கேட்பதாக இல்லை . என்ன செய்வதென்று யோசிக்கத்தொ