Skip to main content

குழல்விளக்கு குமரேசன்

குழல்விளக்கு குமரேசன்

 மாணவர்கள் அனைவரும் குமரேசனை ‘குழல்விளக்கு குமரேசன்’ என்றுதான் அழைப்பார்கள். எந்த கேள்வி கேட்டாலும் அவனால் சட்டென பதில்சொல்லமுடியாது, சற்று தாமதமாகத்தான் பதில் வரும். முன்பெல்லாம் மாணவர்கள் அவனை ‘டியூப்லைட்’ என்றுதான் அழைத்தார்கள். தமிழாசிரியர்தான் ‘குழல்விளக்கு குமரேசன்’ என தமிழ்படுத்தினார். தற்போது ‘கு.கு’ என்று சுறுக்கமாக  அழைக்கத்தொடங்கிவிட்டார்கள். 
குமரேசன் இதற்கெல்லாம் வேதனைப்படுகிற மாணவன் அல்ல.ஆனால் இதை எப்படி எதிர்கொள்வது என சிந்திக்க ஆரம்பித்துவிட்டான். ஒருநாள் அறிவியல் ஆசிரியர் அங்கமுத்து பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, அந்த வகுப்பறையிலிருந்த குழல்விளக்கு விட்டுவிட்டு எரிந்துகொண்டிருந்தது. உடனே எல்லோரும் குமரேசனைப் பார்த்து, ‘கு.கு உன்னைப்போலவே இந்த குழல்விளக்கு பேசுவதைப்போல இருக்குடா’, என கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். உடனே குமரேசன் எழுந்தான், ‘என்னைக் கிண்டலடிப்பது இருக்கட்டும்; குழல்விளக்கு ஏன் விட்டு விட்டு எரிகிறது? அதனோடு சேர்ந்து ஒரு ஒலி வருகிறதே அது எதனால் என சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்றான். ‘மின்சாரம் குறைவாக வருவதால் இப்படி விட்டி விட்டு எரிகிறது’  என சக மாணவர்கள் எழுந்து ஒரே குரலில் பதில் சொன்னார்கள். இதற்கு நீங்கள் எளிதாக பதில் சொல்லிவிடுவீர்கள் என எனக்கும் தெரியும். இதுவல்ல என் கேள்வி,‘ குண்டு விளக்கானது இணைப்பு கொடுத்தவுடனே எரிகிறது.ஆனால் குழல்விளக்கு ஏன் தாமதமாக எரிகிறது? இதற்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்’ என்றான் குமரேசன்.
‘குண்டுவிளக்கு சிறியதாக இருக்கிறது; குழல்விளக்கு பெரியதாக இருக்கிறது’ என ஒரு மாணவன் பதில்சொன்னான்.‘இது சரியான பதில் அல்ல. அறிவியல் பூர்வமாக சரியான பதில் வேண்டும்’ என்றான் குமரேசன். உடனே மாணவர்கள்  அனைவரும், அறிவியல் ஆசிரியரைப் பார்த்து,‘ ஐயா நீங்களே பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்’. என்றனர். ஐயா நீங்கள் பதில்சொல்லக்கூடாது.என்னை கிண்டல் செய்கிற இவர்கள்தான் பதில்சொல்லவேண்டும்’ என உறுதியாக சொன்னான் குமரேசன்.
‘குமரேசன் நல்ல சிந்தனையைத் தூண்டிவிட்டுள்ளான். இதற்கு நீங்கள்தான் பதில் தேட வேண்டும்.’ என்றார் ஆசிரியர் அங்கமுத்து.
 மாணவர்கள் அமைதியாகிவிட்டனர். இரண்டு நாளில் பதில் சொல்வதாக சவால் விட்டனர். நீங்கள் பதில் சொல்லும்வரை என்னை கு.கு என அழைக்கக்கூடாது என்றான் குமரேசன். அனைவரும் சரி என்று தலையாட்டினார்கள்.
‘உங்களின் பிடிவாதம்  அறிவுத்தேடலை நோக்கிச் சென்றதில் எனக்கு மகிழ்ச்சிதான். சரியான விடையை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்’ என்று ஆசிரியரும் உற்சாகப்படுத்தினார். மாணவர்கள் வகுப்பு முடிந்து சென்றதும் பள்ளிக்கூடம் முழுவதும் இதுவே பேச்சாக மாறிப்போனது. குழல்விளக்கு ஏன் உடனே எரியவில்லை என ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர். மாணவர்கள் புத்தகத்தைப்புரட்ட ஆரம்பித்துவிட்டனர்.
இப்படி விவாதம் கிளம்பியது குமரேசனுக்கு சந்தோசமாக இருந்தாலும்,உண்மையில் இவனுக்கும் பதில் தெரியாது. ஏதோ ஒரு வேகத்தில் இப்படி ஒரு கேள்வியை எழுப்பி விட்டான்.மாணவர்கள் விடைகண்டு பிடிப்பதற்கு முன்பாக இவன் விடை கண்டுபிடித்தாக வேண்டும்.
யாரைக்கேட்பது?எங்கே தேடுவது? இவனும் சுறுசுறுப்பாகிவிட்டான்.
பள்ளிக்கூடத்திற்கு அருகிலுள்ள குழல்விளக்கு சரிசெய்யும் கடையை நோக்கிச் சென்றான். கடையின் உரிமையாளர் இவனுக்கு தெரிந்தவர்தான். அவருக்கு வணக்கம் சொல்லியபடியே கடையில் அமர்ந்தான். கடை முழுவதும் குழல்விளக்கு மயமாக இருந்தது. குழல்விளக்கைத்தாங்கி பிடிக்கும் பட்டிகள், இயக்கிகள், நிலைநிறுத்திகள் கடையின் உள்ளே வரிசையாக  அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
என்ன கடையையே உற்றுப்பார்க்கிறாய்,‘குழல்விளக்கு வேண்டுமா’? என்றார் கடைக்காரர். குழல்விளக்கு வேண்டாம் ஆனால் அது எப்படி வேலை செய்கிறது என தெரிந்துகொள்ள வேண்டும்,’என்றான். ஓ இவ்வளவுதானா? என பேச ஆரம்பித்தார்.
“நாம மின்இணைப்பைக் கொடுத்தவுடனே சில வினாடிகள் கழித்து  குழல்விளக்கு எரிவதை நீ பார்த்திருப்பாய். இதற்கு மின்சாரம் மட்டும் போதாது, கூடவே இயக்கியும்[startor] நிலைநிறுத்தியும்[ballest] தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், குழல்விளக்கில் உள்ள ஆனோடு ,கேத்தோடுகளுக்கு அதிக மின்னழுத்தம் தேவைப்படுகிறது. இதை  தொடர்ந்து நிலையாகக்கொடுப்பத்ற்கு நிலைநிறுத்தி பயன்படுகிறது. நிலைநிறுத்தியிலுள்ள மின்மாற்றி மின்னழுத்தத்தை தொடர்ந்து உருவாக்க இயக்கியின் துணைத் தேவைப்படுகிறது. இயக்கியின் உள்ளே உள்ள அமைப்பு தொடர்ந்து மின்சாரத்தை விட்டுவிட்டு தருகிறகிறது.இந்த தன்மை நிலைநிறுத்தில் மின்னழுத்தத்தை அதிகமா தூண்ட உதவுகிறது. இதனால் ஆனோடு,கேத்தோடுகள் அதிகமினழுத்தம்பெற்று தொடர்ந்து ஒளியை உமிழ்கிறது,” என நீண்ட விளக்கம் கொடுத்தார் கடைக்காரர்.
குமரேசனுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. உங்களால  எப்படி இவ்வளவு அழகா சொல்லமுடியுது? என  கடைக்காரரைப் பார்த்து கேட்டான் குமரேசன். தம்பி நானும் இது பற்றி படித்திருக்கிறேன்,அதோடு என்னோட என் சொந்த அனுபவமும் சேர்ந்ததால்தான்  இவ்வளவு தூரம் என்னால் விளக்க முடிந்தது என்றார். குமரேசனுக்கு வியப்பாக இருந்தது. இது ஏதே மின்இணைப்பைக் கொடுத்தவுடன் எரிகிற விசயமில்லை என்பதை தெரிந்துகொண்டான். அவர்மீது இன்னும் மதிப்புக்கூடியது.
 மின் இணைப்புக்கொடுத்தவுடன் குண்டுவிளக்கைப் போல சட்டென எரியாமல் சற்று நேரம் எடுத்துக்கொள்வதற்கான காரணத்தைக் கண்டுபிடித்ததைப் போல இருந்தது குமரேசனுக்கு. இதற்குள் இவ்வளவு இணைப்பு வேலைகள் உள்ளதா என வியக்கவும் செய்தான். இப்பொழுதே விடைகிடைத்துவிட்டதைப்போல இருந்தாலும், மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமானான்.
மறுநாள் வகுப்பிற்கு போனபோது, மாணவர்கள் இவனை சூழ்ந்துகொண்டனர். குழல்விளக்கு எப்படி எரிகிறது தெரியுமா என ஒவ்வொருவரும் பேச ஆரம்பித்துவிட்டனர். ஆனோடு, கேத்தோடு, மின்னழுத்தம் என அறிவியல் வார்த்தைகள் வந்து விழுந்துகொண்டே இருந்தன. இவற்றையெல்லாம் பார்த்துகொண்டிருந்த அறிவியல் ஆசிரியர் அங்கமுத்து மாணவர்களை நோக்கி வந்தார். அவரும் அவர்களொடு சேர்ந்து விவாதத்தில் கலந்துகொண்டார். ஆசிரியர் வந்ததும் விவாதம் சூடுபிடித்தது.  கிட்டதட்ட மாணவர்கள் அனைவரும் விடையை கண்டுபிடித்தது விட்டார்கள். ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து போனார். குமரேசனை ஆசிரியர் மனதார பாராட்டினார். சக மாணவர்களும் பாராட்டினார்கள்.
இப்பொழுதெல்லாம் மாணவர்கள் குமரேசனை கு.கு என அழைக்க மறந்துவிட்டார்கள்.
ஆனால் குமரேசன் மாணவர்களை கேள்வி கேட்பதை விடவில்லை. குழல்விளக்கில் எப்படி ஒளி வெண்மையாக வருகிறது ? என அடுத்த கேள்வியைக் கேட்டான். மாணவர்கள் விடைதேட ஆரம்பித்துவிட்டனர். நீங்களும் சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்களா?. 



Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது....

மாணவர்கள் கொண்டாடிய சுதந்திர தினவிழா

சு தந்திரதின விழாவில் கொடியேற்றி துவக்கி வைப்பதற்காக, மாணவர் நல சங்கம் சார்பில் என்னை அழைத்திருந்தார்கள். முப்பதாண்டுகாலமாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவன் என்ற தகுதி ஒரு காரணமாக இருக்கலாம். மிக முக்கியமான இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக என்னை தயார் செய்துகொண்டிருந்தேன். அப்போது கதவு தட்டப்படும் ஓசைகேட்டு திறந்தேன். கையில் தேசியக்கொடியோடு மாணவர்கள் சீருடையில் வந்திருந்தனர். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. வாங்க! வாங்க! என்று பரவசத்தோடு உள்ளே அழைத்தேன். அனைவரும் ஒரே குரலில் “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! கொண்டாடுவோம்! என்றபடியே ஒரு வண்ண காகிதத்தை கையில் கொடுத்துவிட்டு அடுத்த வீட்டிற்கு சென்றுவிட்டனர். சுதந்திரமே மாணவர் உருவில் வீட்டு வந்தது போல இருந்தது. அவர்கள் கொடுத்துச்சென்ற காகிதத்தின் இரு பக்கத்திலும் பதினைந்து என்று எண்ணால் எழுதப்பட்டிருந்தது. மெல்ல பிரித்து பார்க்க அது எட்டாக மடிக்கப்பட்டிருந்தது. இது சுதந்திரதினத்தை குறிக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. காகிதத்தின் உள்ளே “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! வறுமையற்ற வளமான ஓர் இந்தியாவை உருவாக்குவோம்! ” எ...