குழல்விளக்கு குமரேசன் ச க மாணவர்கள் அனைவரும் குமரேசனை ‘குழல்விளக்கு குமரேசன்’ என்றுதான் அழைப்பார்கள். எந்த கேள்வி கேட்டாலும் அவனால் சட்டென பதில்சொல்லமுடியாது, சற்று தாமதமாகத்தான் பதில் வரும். முன்பெல்லாம் மாணவர்கள் அவனை ‘டியூப்லைட்’ என்றுதான் அழைத்தார்கள். தமிழாசிரியர்தான் ‘குழல்விளக்கு குமரேசன்’ என தமிழ்படுத்தினார். தற்போது ‘கு.கு’ என்று சுறுக்கமாக அழைக்கத்தொடங்கிவிட்டார்கள். குமரேசன் இதற்கெல்லாம் வேதனைப்படுகிற மாணவன் அல்ல.ஆனால் இதை எப்படி எதிர்கொள்வது என சிந்திக்க ஆரம்பித்துவிட்டான். ஒருநாள் அறிவியல் ஆசிரியர் அங்கமுத்து பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, அந்த வகுப்பறையிலிருந்த குழல்விளக்கு விட்டுவிட்டு எரிந்துகொண்டிருந்தது. உடனே எல்லோரும் குமரேசனைப் பார்த்து, ‘கு.கு உன்னைப்போலவே இந்த குழல்விளக்கு பேசுவதைப்போல இருக்குடா’, என கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். உடனே குமரேசன் எழுந்தான், ‘என்னைக் கிண்டலடிப்பது இருக்கட்டும்; குழல்விளக்கு ஏன் விட்டு விட்டு எரிகிறது? அதனோடு சேர்ந்து ஒரு ஒலி வருகிறதே அது எதனால் என சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்றான். ‘மின்சாரம் குறைவ...