இ ரண்டு இட்லி கொண்டு வரச்சொல்லிவிட்டு அந்த உணவகத்தில் காத்திருந்தேன். அப்பொழுது எனது எதிரே ஒருவர் வந்து அமர்ந்தார். அவர் ஆறுமுகம் ஆசிரியர் என்பதை உடனடியாக அடையாளம் தெரிந்துகொண்டு ‘வணக்கம் ஐயா’! என்றேன். அவரும் என்னை உற்றுக் கவனித்து, அடடே தமிழ்ச்செல்வனா! என்றபடியே எனது கையைப் பிடித்து குலுக்கினார். அவர் எனக்கு பத்தாம் வகுப்பு அறிவியல் ஆசிரியராக இருந்தவர். அவரோடு உணவருந்தி கொண்டே பேசுகிற இந்த பொன்னான வாய்ப்பை நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது. ஏனெனில் அவர் எப்பொழுதும் வகுப்பறையைத் தாண்டி பல புதிய செய்திகளை அறிவியல் வழியில் பேசக்கூடியவர். அவருக்கும் சேர்த்து இட்லி கொண்டுவரச் சொல்லிவிட்டு ஆறுமுகம் ஆசிரியரோடு பேச ஆரம்பித்துவிட்டேன். இருவரும் நலம் விசாரித்து கொண்ட பிறகு, பிரபலமான அந்த உணவகத்தின் ருசி பற்றிய பேச்சு வந்தது. “ருசி எல்லாம் சரிதான், ஆனால் உப்பின் சுவைதான் இங்கு கூடுதலாக இருக்கும்”.என்றேன் நான். ஆமாம் நானும் இங்கு பலமுறைச் சாப்பிட்டிருக்கிறேன். இங்கு மட்டுமல்ல பொதுவாக உணவகங்களில் உப்பு சற்று கூடுதலாகத்தான் இருக்கிறது. இந்த சுவை எப்பொழுதும் அளவோடு இரு...